கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்றும் அவர் கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த இறுதிகட்டப் போரில் கொல்லப்படவில்லை என்றும் சிங்கள ராணுவத்திடமிருந்து பிரபாகரன் தப்பிச் சென்றார் என்றும் இலங்கையில் வெளியான புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரின்போது, சிங்கள ராணுவத்தினர், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் துணையோடு விடுதலைப்புலிகளை எதிர்த்துக் கடுமையாகப் போரிட்டனர்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக தனிநாடு கேட்டு போராடி வந்த விடுதலைப் புலிகள் இயக்கம் இதனால் வீழ்த்தப்பட்டது. விடுதலைப்புலிகளின் இயக்க தலைவரான பிரபாகரன் இந்த போரின்போது சுட்டுக் கொல்லப்பட்டு விட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது.

அது தொடர்பான புகைப் படங்களையும் அந்நாட்டு அரசு வெளியிட்டது.ஆனால் ஆறு ஆண்டுகளாக அவரின் மரணம் குறித்துப் பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

இந்தப் போரின்போது விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களும், அப்பாவி தமிழர்களும் பல்லாயிரக்கணக்கில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அந்த நேரத்தில் இலங்கை தமிழர்கள் பலர் அகதிகளாக வெளியேறினர். அவர்களுடன் விடுதலைப் புலிகளும் தப்பிச் சென்று வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இந்த கொடுமையான நிகழ்வுகளுக்கு ஐ.நா.சபை உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகள் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தன.

பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்ததை தமிழீழ ஆர்வலர்கள் பலர் இன்னமும் ஏற்றுக் கொள்ளாமலேயே இருக்கிறார்கள்.

பிரபாகரன் சாகவில்லை என்றும், நிச்சயம் ஒருநாள் அவர் திரும்பி வருவார். அவரது தலைமையில் தமிழீழம் மலரும் என்றும் அவர்கள் கூறி வருகிறார்கள். இதனால் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவே தமிழ் ஆர்வலர்களால் நம்பப்படுகிறது.

இதனை உறுதிபடுத்தும் விதத்தில் பிரபாகரன் இலங்கையில் இருந்து போரின்போது தப்பிச் சென்று விட்டார் என்று புதிய தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக இலங்கையில் புத்தகம் ஒன்றும் வெளியாகி இருக்கிறது. இதனை சிங்கள பத்திரிகை ஒன்று பரபரப்பு செய்தியாக வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பதை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்த நூலில் இலங்கையில் இருந்து தப்பிச்சென்ற பின்னர் அவர் டெல்லியில் திரிலோனபூர் பகுதியில் ஹோட்டல் ஒன்றில் ஒரு வருடம் தங்கி இருந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரபாகரன் போன்ற உருவ ஒற்றுமை கொண்ட நபரைத்தான் இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது என்றும், அவரின் போட்டோக்களைத்தான் பிரபாகரன் போட்டோ என்று இலங்கை அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புத்தகத்தின் பெயர் என்ன? அதனை எழுதியது யார்? என்பது பற்றிய விவரங்கள் எதுவும் அந்தப் பத்திரிக்கை வெளியிடவில்லை.

இதற்கிடையே, பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று எழுதப்பட்டுள்ள புத்தகமும், இதுதொடர்பாக வெளியாகி இருக்கும் செய்திகளும், இலங்கை அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அந்நாட்டு அரசியல் பிரமுகர்களும், ராணுவத்தினரும் கலக்கம் அடைந்துள்ளதகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக இலங்கை ராணுவத்தின் புலனாய்வு அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘பிரபாகரன் தப்பிச் சென்றதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என்றும், அது வெறும் கட்டுக்கதை’’ என்றும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவை நம்பிக் கெட்ட முல்லா ஒமார் – வெளிவராத உண்மைகள்

Share.
Leave A Reply

Exit mobile version