பொலிவூட் சுப்பர் ஸ்டார்களில் ஒருவராக விளங்கும் ஷாருக்கான், தான் ஒரு மென்பொருள் பொறியியலாளராகுவதற்கே விரும்பியதாக தெரிவித்துள்ளார்.
இதற்காக ஐ.ஐ.ரி நுழைவுத் தேர்வையும் அவர் எழுதினாராம்.
கூகுள் நிறுவனத்தின் புதிய பிரதம நிறைவேற்று அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள சென்னையில் பிறந்த தமிழரான சுந்தர் பிச்சையுடன் இணைந்து முன்னர் நடத்திய கலந்துரையாடலொன்றிலேயே இதை ஷாருக்கான் தெரிவித்திருந்தார்.
உலகெங்கும் ரசிகர்களைக் கொண்டுள்ள ஷாருக்கானுக்கு கூகுள்களிலும் தீவிர ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில், கலிபோர்னியா மாநிலத்திலுள்ள கூகுள் தலைமையகத்துக்கும் ஷாருக் கான் அழைக்கப்பட்டு கூகுள் ஊழியர்களுடனான கலந்துரையாடலில் பங்குபற்றினார்.
அப்போது கூகுளின் தயாரிப்புகள் பிரிவுக்கு தலைவராக இருந்த சுந்தர் பிச்சை (சுந்தரராஜன் பிச்சை) அந்நிகழ்வை நெறிப்படுத்தினார்.
தான் நடிகராக விரும்பியிருக்கவில்லை எனவும் ஒரு மென்பொருள் பொறியியலாளராகுவதற்கே விரும்பியதாகவும் அப்போது ஷாருக் கான் கூறினார்.
அதைக் கேட்டவுடன் அங்கு திரண்டிருந்த கூகுள் பொறியியலாளர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். ஷாருக் கானும் சிரித்தார்.
“ஆனால், அப்போது அது மிக புதிய விடயமாக இருந்தது.
இப்போது இலகுவாக பேசப்படுவதைப் போல் அப்போது இருக்கவில்லை.
எனவே நானும் ஐ.ஐ.ரி நுழைவுத் தேர்வு எழுதினேன்.
இது ஒரு ஜோக் போன்று தோன்றலாம். ஆனால் உண்மை. நான் இலத்திரனியல் பாடத்தில் 98 புள்ளிகளைப் பெற்றேன்.
அப்போது இந்தியாவில் அது அதிகபட்ச புள்ளியாக இருந்தது. ஆனால், அது டையோட்ஸ், ட்ரையோட்ஸ் சம்பந்தமாக காலம், இப்போதுள்ளதைப் போல் சிப்ஸ் போன்றவையெல்லாம் இருக்கவில்லை” என ஷாருக் கான் கூறினார்.
அப்போது, ஷாருக் கான் தனது தொழிலை மாற்றிக்கொள்ள விரும்பினால் தனக்கு தெரிவிக்குமாறு சுந்தர் பிச்சை வேடிக்கையாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கூகுள் தலைமையகத்தில் சுந்தர் பிச்சையுடன் ஷாருக்கான் நடத்திய கலந்துரையாடலின் வீடியோ: