சென்னை: நடிகர் சங்கத் தேர்தலில் தங்களது அணிக்கு ஆதரவு தருமாறு கோரி நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனை நாசர் – விஷால் குழுவினர் நேரில் சந்தித்து ஆதரவு கேட்டனர்.
நடிகர் சங்கத் தேர்தல் ஜூரம் நடிகர் நடிகையர் மத்தியில் வேகமாக இருக்கிறது. இதில் சரத்குமார் தலைமையிலான அணியினர் தனியாகவும், அவர்களை எதிர்த்து நாசரை முன்னிறுத்தி நடிகர் விஷால் உள்ளிட்டோர் தனி அணியாகவும் மோதவுள்ளனர்.
செப்டம்பர் 1ம் தேதி சங்கத் தேர்தல் நடைபெறவுள்ளது. உயர்நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் தேர்தல் நடைபெறவுள்ளது. இரு தரப்பினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தேர்தலில் நாடக நடிகர்களின் வாக்குகள் முக்கியமானவை என்பதால் அவர்களைக் கவரும் வேலையில் இரு தரப்பினரும் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். இப்போது சென்னையில் முக்கிய தலைகளைச் சந்திக்க ஆரம்பித்துள்ளனர்.
நாசர் – விஷால் குழுவினர் உச்ச நடிகர்களான ரஜினியையும், கமல்ஹாசனையும் சந்தித்து ஆதரவு கோரியுள்ளனர். நாசர் தலைமையிலான இந்தக் குழுவினருடன், விஷால், கார்த்தி, கருணாஸ் உள்ளிட்டோரும் நேரில் சென்று இரு சூப்பர் ஸ்டார்களையும் சந்தித்து ஆதரவு கேட்டனர்.
இன்று காலை ரஜினியை இக்குழுவினர் சந்தித்துப் பேசினர். பின்னர் கமல்ஹாசனையும் சந்தித்துப் பேசினர்.