தேசியப் பட்டியல் ஆசனங்களை நிரப்புவது தொடர்பாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் கடுமையான இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 12 தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைத்துள்ளன.
ஏற்கனவே, தேர்தல்கள் ஆணையாளரிடம் கையளிக்கப்பட்ட தேசியப் பட்டியல் வேட்பாளர்கள் 29 பேர் மற்றும் தோல்வியடைந்த வேட்பாளர்களை உள்ளடக்கியதாக, 12 பேரை இந்தக் கட்சியினால் தேசியப் பட்டியல் உறுப்பினர்களாக நியமிக்க முடியும்.
ஆனால், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் புதிய செயலராக நியமிக்கப்பட்ட மைத்திரி அணியைச் சேர்ந்த பேராசிரியர் விஸ்வ வர்ணபாலவினது தேசியப் பட்டியல் செல்லுபடியாகுமா அல்லது மகிந்த அணியைச் சேர்ந்த முன்னையை பொதுச்செயலர் சுசில் பிரேமஜெயந்தவின் தேசியப் பட்டியல் செல்லுபடியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இருதரப்புமே தனித்தனியாக தேசியப் பட்டியல் வேட்பாளர்களை கையளிக்கலாம் என்று கூறப்பட்டது.
ஆனால் அவ்வாறு சமர்ப்பித்தால் தேர்தல்கள் ஆணையாளர் நீதிமன்றத்தின் உதவியை நாடலாம் என்பதால், இணக்கமான முறையில் பிரச்சினையை தீர்க்கும் மயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தலா ஆறு பேர் வீதம் மகிந்த அணியினரும், மைத்திரி அணியினரும் தேசியப் பட்யடில் ஆசனங்களை பகிர்ந்து கொள்ளலாம் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பாக, தேர்தலில் தோல்வியடைந்த சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவொன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்று பேச்சு நடத்தியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த எஸ்.பி.திசநாயக்க, லக்ஸ்மன் செனவிரத்ன, நந்திமித்ர எக்கநாயக்க, விஜித் விஜிதமுனி சொய்சா, பியசேன கமகே, மகிந்த சமரசிங்க, திலங்க சுமதிபால, லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன ஆகியோரே இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இவர்கள் தம்மை தேசியப் பட்டியலில் உள்ளடக்குவது தொடர்பாகவே பேச்சுக்களை நடத்தியுள்ளனர். எனினும், இந்த விவகாரம் தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியல் விவகாரம் இழுபறியில் உள்ளது.
அதேவேளை, ஐதேகவின் தேசியப் பட்டியலில், தோல்வியடைந்த இரண்டு வேட்பாளர்கள் உள்ளடக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கம்பகாவில் தோல்வியடைந்த முன்னாள் சபாநாயகர் ஜோசப் மைக்கல் பெரேரா, மற்றும் கொழும்பில் தோல்வியடைந்த ரோசி சேனநாயக்க ஆகியோரே ஐதேக தேசியப்பட்டியலில் இடம்பெறலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.
புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களை மகிந்த, மைத்திரி ஏட்டிக்குப் போட்டியாக சந்திப்பு
20-08-2015
இன்று காலை இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இதன் போது. ஐதேகவுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படவுள்ளது.
அதேவேளை, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்களான நிமால் சிறிபால டி சில்வா மற்றும், ஜோன் செனிவிரத்ன ஆகியோர், தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இதற்கிடையே, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளவர்களுக்கான கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் வீட்டில் இன்று இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஆராயப்படவுள்ளது.
அதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்றுக் கொள்வது தொடர்பாக மகிந்த ராஜபக்ச தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளன.