இந்தப் பொதுத் தேர்தலில் பலத்த எதிர்ப்பு, சவால்களைத் தாண்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மகத்தான வெற்றியினை ஈட்டியிருக்கின்றது என்றும் அந்த வெற்றிக்கு வழிசமைத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துகொள்வதாக தெரிவித்துள்ள யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன், எம் விதியை நாம் வரைவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் வெற்றி தொடர்பில், வாக்காளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் நன்றி கூறும் வகையில் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஒரே வருடத்தில் இத்துடன் இரண்டாம் தடவை தெளிவான சிந்தையுடன், தமது நீண்ட நாள் போராட்டத்தின் இலட்சியம் சிதறாமல், தம் வாழ்வின் மறுமலர்ச்சியை வேண்டி எமது மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலப்படுத்தியிருக்கின்றனர்.
இந்தத் தேர்தலின் முக்கியத்துவத்தினை உணர்ந்து பெருமளவில் திரண்டு வந்து எமது மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியை உறுதி செய்திருப்பது மீண்டுமொரு முறை எமது மக்களது அரசியல் ஞானத்தினை முழு உலகிற்கும் வெளிக்காட்டியிருக்கின்றது.
முதற்கண் எமக்கு வாக்களித்த அனைவருக்கும் எனது பணிவான நன்றிகளைத் தெரிவித்து நிற்கின்றேன்.
மேலும், என் மீது நம்பிக்கை வைத்து 58,043 விருப்பு வாக்குகளை எனக்கு வழங்கி யாழ்.தேர்தல் தொகுதியில் என்னை பெரு வெற்றி பெறச் செய்த அத்தனை தமிழ் உறவுகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்து நிற்கின்றேன்.
இந்த வெற்றி வெறும் ஆரம்பமேயாகும்.
எதுவித மறு பலனும் எதிர்பாராது தமது நேரத்தையும், உழைப்பையும் செலவிட்டு எனது வெற்றிக்குத் துணை நின்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களுக்கும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கும் எனது பணிவன்பான நன்றிகள் உரித்தாகுக. உங்கள் உதவியும், ஒத்துழைப்பும் எதிர் வரும் காலங்களிலும் நிச்சயமாக எனக்கு அவசியம்.
வீடு வீடாகச் சென்று என்னை அறிந்திரா மக்களிடம் என்னை அறிமுகம் செய்து வைத்ததிலும், எனது அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பில் கேள்விகளோடு இருந்தவர்களது சந்தேகங்களைத் தீர்த்து வைத்ததிலும் எனக்கென உழைத்த இளைஞருக்குப் பெரும் பங்குண்டு.
அவர்களது தெளிந்த சிந்தனையும், அரசியல் விளக்கமும் தமிழர் அரசியலின் எதிர்காலம் தொடர்பில் எனக்கு மிகுந்த நம்பிக்கையளிக்கின்றது.
இதில் முகநூல் வளியே எனது முகநூல் தளத்தைத் தாண்டிப் பல இளைஞர்கள் எனது வெற்றிக்குப் பங்காற்றியதை நான் அறிவேன். உங்களுக்கும் என் நன்றிகள் உரித்தாகுக.
எனக்குக் கிட்டிய வெற்றியை எனது அரசியலுக்குக் கிடைத்த வெற்றியாகவே நான் பார்க்கின்றேன். இந்தத் தேர்தலில் களமாடி வீழ்ந்தால் அரசியலில் இருந்து ஒதுங்குவேன் எனக் கூறியே இந்தத் தேர்தலில் நான் போட்டியிட்டேன்.
பெருவாரியான பொய்க் குற்றச்சாட்டுக்கள், போலிப் பிரச்சாரங்களைத் தாண்டி மக்கள் என்னைத் தெரிவு செய்தது எனது மென்வலு அரசியலின் மீதான அவர்களது நாட்டத்தையும், நம்பிக்கையையுமே பிரதிபலிக்கின்றது.
இந்த வெற்றி மென்வலுவிற்கான வெற்றி. இந்த வெற்றி எம் எதிர்காலத்திற்கான வெற்றி. இந்த வெற்றி எமது இளைஞருக்கு உரித்தான வெற்றி.
இனியும் தமிழ் மக்கள் இழப்புக்களை சந்திக்கவியலாது. இனியும் எம் இளைஞர் தொகை தொகையாய் மாளக் கூடாது.
தந்த ஆணைக்குப் பணிகிறேன். அதற்கே சேவை செய்வேன். எமது தேசியப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வினை எட்டவென முழு மூச்சுடன் பணியாற்றும் அதேவேளை மக்களது அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும், எமது இளைஞரைப் பலப்படுத்துவதிலும் எனது காத்திரமான பங்களிப்பை வழங்குவேன்.
வாக்களித்ததுடன் மக்களாகிய உங்களது பங்களிப்பு நின்று போவதில்லை. என்னை நெறிப்படுத்துவதிலும், எமது அரசியலை வலுப்படுத்துவதிலும் உங்கள் வகிபாகம் என்றும் இருக்க வேண்டும்.