நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலின் முடிவின்படி எத்தகைய முடிவுகளையும் எடுக்கமுடியாத நிலமை தமிழர் தரப்புக்கு தோன்றியுள்ளது. எதிர் எதிரே போாட்டியிட்ட இரண்டு சிங்கள தேசிய கட்சிகளும் ஒன்று சேர்ந்து தேசிய அரசாங்கத்தை அமைத்ததன் மூலம் தமிழர் தரப்பின் பேரம் பேசும் சக்தி பயனற்றுப் போனது.
தமிழர் தரப்புக்குள் இரண்டுபட்ட நிலை ஒன்று உருவாகுவதற்கான தெளிவான சாத்தியங்களை அனுமானிக்க முடிகிறது.
தேர்தல் பிரசாரங்களின் போது, சர்வதேச சமூகம் தொடர்பாக தமிழர் தரப்பில் முன்னிறுத்தப்பட்ட இருவேறுபட்ட நிலைப்பாடுகள், இனிவரும் காலங்களில் கூர்மையடைவதற்கான வாய்ப்புகளே அதிகமாகத் தென்படுகின்றன.
ஒரு தரப்பு இந்தியாவை முக்கியத்துவப்படுத்தியே தமிழர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று கருதுகிறது.
இன்னொரு தரப்பு மேற்குலகை மட்டும் கைக்குள் போட்டு காரியம் சாதிக்கலாம் என்று கருதுகிறது.
தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு சர்வதேச சமூகத்தின் தலையீடு அவசியம் என்று உணரப்பட்டாலும், அது எத்தகைய தலையீடு, எந்த தரப்பின் தலையீடு என்ற விடயத்தில் தமிழர்களுக்குள் ஆழமான பிளவு தோன்றியிருக்கிறது.
அதனால் தான் இந்த பாராளுமன்றத் தேர்தலில் கூட்டமைப்புக்கு எதிரான கட்சிகள், இந்தியாவின் வாலைப் பிடித்துக் கொண்டு திரிபவர்கள் என்ற குற்றச்சாட்டை வலுவாகச் சுமத்தியிருந்தன.
அதேவேளை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மேற்குலகத் தலையீட்டுடன் மட்டும் பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்று நம்புகிறது.
தமிழர் பிரச்சினை விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடும், செயல்களும், தமிழ் மக்கள் மத்தியில் விமர்சனங்களையும், ஆழ்ந்த அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளன என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
தமிழர் பிரச்சினையை ஆரம்பத்தில் இந்தியா அணுகிய முறைக்கும் பின்னர் தனது நலனுக்காக அதனைப் பயன்படுத்திக் கொண்ட முறைக்கும் இடையில் நிறையவே வேறுபாடுகள் உள்ளன.
போரின் இறுதிக்கட்டத்தில், அழிவுகளைத் தடுத்து நிறுத்துவதற்கு இந்தியா முனையவில்லை.
இப்போதும் கூட, தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பது தொடர்பாக இந்தியத் தரப்பில் இருந்து இலங்கை அரசாங்கத்துக்கு எத்தகைய அழுத்தங்களும் கொடுக்கப்படுவதில்லை.
கிட்டத்தட்ட தமிழர் பிரச்சினையை இந்தியா கைவிட்டு விட்டதான நிலையே காணப்படுகிறது.
இந்த உண்மைகள் ஒரு பக்கத்தில் இருந்தாலும், இந்தியாவை உதறிவிட்டு தமிழர் பிரச்சினையை எந்தவொரு தரப்பினாலும் தீர்க்க முடியாது என்பதே யதார்த்தம்.
இலங்கைத் தீவில் தமிழர்களுக்கு தனிநாடு ஒன்று அல்லது தனது மாநிலங்களுக்கு மேலான அதிகாரம் படைத்த தீர்வு ஒன்றோ உருவாவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது.
இந்த உண்மை இன்று நேற்றல்ல, எப்போதோ தமிழர்களால் உணரப்பட்டு விட்டது.
இந்தியாவைப் பொறுத்தவரையில் தானும் செய்யாது ஏனையோரையும் செய்ய விடாது என்ற நிலைமையே காணப்படுகின்றது.
மேலும், இந்தியா பிராந்திய வல்லரசு, அதனை மீறி எந்த நாடும் எத்தகைய நகர்வையும் செய்துவிட முடியாது.
இந்தியாவுடன் முட்டி மோதி காரியம் சாதிக்கும் ஆற்றலையும் செல்வாக்கையும் கொண்ட ஒரே நாடான, அமெரிக்காவைப் பொறுத்தவரையில், இந்தியப் பெருங்கடலில் தமது செல்வாக்கைச் செலுத்துவதற்கு இந்தியாவின் ஆதரவு அதற்குத் தேவை.
எனவே, இந்தியாவை மீறி, அமெரிக்கா எதையும் தமிழர்களுக்காக செய்ய முன்வரப் போவதில்லை.
தமிழர்களின் போராட்டத்தில் ஆயிரம் நியாயங்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம், அமெரிக்காவோ, இந்தியாவோ, ஏன் சீனாவோ கூட ஏற்றுக் கொள்ளலாம்.
ஆனாலும், எந்த நாடுமே, தமிழர்களின் பக்கம் சார்ந்து நிற்கப் போவதில்லை.
வல்லரசு நாடுகளைப் பொறுத்தவரையில், எங்கெல்லாம் தமது மூலோபாய நலன்கள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் தமக்கேற்ற வலுவான அரசு ஒன்றிருப்பதை மட்டும் தான் விரும்பும்.
அந்த வகையில், கொழும்பினது நலனில் மட்டும் தான் எந்த நாடுமே அக்கறை செலுத்துமே தவிர, தமிழரின் தயவும் அவற்றுக்குத் தேவையில்லை, தமிழரின் நலனும் அவற்றுக்குப் பெரிதில்லை.
அவ்வாறாயின், மஹிந்த ராஜபக்ஷ அரசுக்கு எதிராக ஏன் மேற்குலகம் செயற்பட்டது என்ற கேள்வியை நீங்கள் எழுப்பலாம்.
மஹிந்த ராஜபக்ஷ மேற்கத்திய நலன்களுக்கோ, இந்திய நலன்களுக்கோ சார்புடைய ஒரு அரச தலைவராக இருக்கவில்லை.
அதனால் தான், அவரை கவிழ்க்க மேற்குலக சக்திகளுக்கு தமிழர்கள் தேவைப்பட்டார்கள்.
இப்போது மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிபதி பதவியில் இருந்து தூக்கப்பட்டு விட்டார்.
நாளைய தேர்தலில் மஹிந்த ராஜப க் ஷ பிரதமர் பதவிக்கு வந்தாலும் கூட, அவரைக் கையாள்வதற்கான வேறு வழிமுறைகளை மேற்குலகம் கண்டறிந்திருக்கும்.
அதுபோலவே அவரும், மேற்குலக, இந்திய நலன்களை புறக்கணித்து செயற்பட வாய்ப்பில்லை. இன்னொரு முறை அடிவாங்க அவர் துணியமாட்டார்.
ஆக, இப்போதைய சர்வதேச அரசியல் புறச்சூழல் என்பது, தமிழர்களுக்கு சார்பானதொன்றாக இல்லை என்பதே உண்மை.
இந்தக் கட்டத்தில் இந்தியாவின் நலன்களைப் புறக்கணித்து, அதனுடன் விரோதத்தை ஏற்படுத்திக் கொள்ளும் ஓர் அணுகுமுறையை தமிழர்கள் பின்பற்ற முனைந்தால், அது ஆபத்தையே தேடித்தரும்.
விரும்பியோ விரும்பாமலோ இந்தியா இந்தப் பிராந்தியத்தின் வலிமையான- செல்வாக்குமிக்க சக்தியாக இருக்கிறது.
1990 களில் இந்தியாவைப் புறக்கணித்துச் செயற்பட தமிழர் தரப்பு எடுத்த முடிவு தான், முள்ளிவாய்க்காலில் இந்தியா மௌனம் காத்தமைக்கு ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது.
1990 களில் இந்தியாவை புறக்கணித்துச் செயற்பட்ட விடுதலைப் புலிகளே, 2000ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் நட்புறவை விரும்பினர்.
அதனுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள பெரு முயற்சி செய்தனர்.
இத்தகைய நிலையில், இந்தியாவுடன் மீண்டும் தமிழர்களை முரண்பட வைத்தல் என்பது தமிழர்களின் போராட்டத்தை மீளவும் பின்நோக்கி கொண்டு செல்லவே வழிவகுக்கும்.
முதலமைச்சர் விக்னேஸ்வரன், விடயத்தில் இந்தியா சற்று இறுக்கமான நிலையையே கடைப்பிடித்து வந்தது.
அவர் பதவியேற்றவுடன், இந்தியப் பிரதமரைச் சந்திக்க விருப்பம் வெளியிட்டு கடிதம் அனுப்பினார். அதற்கு புதுடில்லியிடம் இருந்து பதில் வரவில்லை.
சென்னையில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் அவர் பங்கேற்றது, புதுடில்லி கொள்கை வகுப்பாளர்களை அதிருப்தி கொள்ளவைத்ததான ஒரு தகவலும் உள்ளது. பின்னர், இந்து சமய மாநாடு ஒன்றில் பங்கேற்க அவர் புதுடில்லி சென்றிருந்தார்.
இரண்டு சந்தர்ப்பங்களின் போதும் அவர் இந்தியப் பிரதமரைச் சந்திக்க முயன்றார். ஆனால், அதற்கான நேரம் ஒதுக்கிக் கொடுக்கப்படவில்லை.
அதேவேளை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை மட்டும் புதுடில்லிக்கு அழைத்து பேசினார்.
அப்போதும் வடக்கு முதலமைச்சரை இந்தியா வேறொரு சந்தர்ப்பத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று ஒதுக்கி வைத்தது.
இவையெல்லாம் விக்னேஸ்வரனுக்கு இந்தியா மீது வெறுப்பை ஏற்படுத்தியமைக்கான காரணங்களாக இருக்கலாம்.
அவர் இப்போது மேற்கத்திய நாடுகளின் பக்கம் சாயத் தொடங்கியுள்ளதில் இந்தச் சம்பவங்கள் செல்வாக்குச் செலுத்தியிருக்கலாம்.
அதேவேளை, இந்தியாவைப் புறக்கணித்து மேற்கத்திய ஆதரவுடன் ஒரு தீர்வைப்பெற முடியும் என்று அவர் எவ்வாறு நம்புகிறார் என்று தெரியவில்லை.
புலம்பெயர் நாடுகளில் உள்ள புலிகள் அல்லது புலிகள் ஆதரவு சக்திகள் அல்லது புலிகள் ஆதரவாளர்களைப் போலத் தம்மைக் காட்டிக் கொள்பவர்கள், மத்தியில் முள்ளிவாய்க்காலில் இந்தியா கைவிட்டு விட்டதான கோபம் இருக்கிறது.
அந்தக் கோபம் நியாயமானதே என்றாலும், எதிர்காலத்தில் இந்தியாவுடன் முரண்பட்டு ஒரு தீர்வை அடையலாம் என்ற அவர்களின் எத்தனம் எந்தளவுக்கு பயனுள்ளதாக அமையும் என்பது கேள்விக்குரிய விடயம்.
அதைவிட, இலங்கைத் தீவின் அமைவிடம், கேந்திர முக்கியத்துவம் என்பன, சர்வதேச கவனிப்புக்குரிய ஒன்றாகி விட்டதால், பூகோள அரசியல் நகர்வுகளில் இருந்து விடுபட்டு, அவ்வளவு இலகுவாக தமிழர்களால் தமது அபிலாஷைகளை முழுமையாக அடைந்து விட முடியாது.
ஏனென்றால், இது வல்லரசுகளின் செல்வாக்குப் பெற்ற பூமி. இங்கு வல்லரசுகளின் நலன்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுமே தவிர, தமிழர்களின் நலன்களுக்கல்ல.
அமெரிக்கா, இந்தியா அல்லது வேறெந்த நாடாயினும், தமிழர்களுக்காக என்று காய்களை நகர்த்தாது. அத்தகையதொரு காலம் வரும் என்று காத்திருக்கவும் முடியாது.
வல்லரசுகள் தமது நலன்களை அடைவதற்குப் போடும் திட்டங்களின் ஊடாக எமது நலன்களை எவ்வாறு முன்னெடுத்துச் செல்லலாம் என்று சிந்திப்பதன் மூலம் மட்டுமே தமிழர்களால் தம்மை தற்காத்துக் கொள்ளலாம். வலுப்படுத்திக் கொள்ளலாம்.
ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்னர், தமிழர்களின் பலம் என்று கூறுவதற்கு எதுவுமில்லை.
இத்தகைய கையறுநிலையில், வெளியுலகில் நட்பு சக்திகளை பெருக்கிக் கொள்வதும், கூடிய வரை பகைமைகளைத் தவிர்த்துக் கொள்வதும் தான் தமிழரின் சிறந்த இராஜதந்திர உத்தியாக இருக்க முடியும்.
இதனைக் கருத்தில் கொள்ளாமல் எடுக்கப்படும் எந்த நகர்வும், ஏணியும் பாம்பும் விளையாட்டாகத் தான் போய் முடியும்.
ஒரு ஆட்டம் உச்சத்துக்கு போனாலும் இன்னொரு ஆட்டம் எம்மைக் கீழ் இறக்கி விடும்.
-ஹரிகரன்-