நாடாளுமன்றத் தேர்தலில் 5 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின், இரண்டு தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் யார் என்று இன்று முடிவெடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக, திருகோணமலையில் உள்ள கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் இன்று முக்கியமான கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
ஏற்கனவே, நாடாளுமன்றத் தேர்தலில் தேசியப்பட்டியல் ஆசனங்களை வென்ற ஐதேக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஜேவிபி ஆகிய கட்சிகளின் சார்பில், 27 உறுப்பினர்களின் பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டு விட்டது.
எனினும், கூட்டமைப்பு சார்பில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய இரண்டு உறுப்பினர்களின் பட்டியலே எஞ்சியுள்ளது.
மொத்தமுள்ள 29 தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் விபரங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், அது தனியாக வர்த்தமானி மூலம் வெளியிடப்படும்.
தேர்தல் முடிந்து ஒரு வாரத்துக்குள் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் விபரங்களை சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் திணைக்களம் கோரியிருந்தது.
எனினும், கூட்டமைப்பின் பட்டியல் சமர்ப்பிக்கப்படாததால், வர்த்தமானி வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஆசனங்களுக்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பாக இழுபறி நிலவி வருகிறது.
யாழ்ப்பாணத்தில் தோல்வியடைந்த சுரேஸ் பிரேமச்சந்திரன், அருந்தவபாலன் ஆகியோருக்கு வழங்கப்பட வேண்டும் என்று அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன.
அதேவேளை, தமிழரசுக் கட்சிக்கு ஒன்றும், பங்காளிக் கட்சிகளுக்கு மற்றொன்றும் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, இரு தேசியப் பட்டியல் ஆசனங்களில் ஒன்றை அம்பாறைக்கும், மற்றொன்றை திருகோணமலைக்கும் வழங்க வேண்டும் என்று இரா. சம்பந்தன் கருதுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, கல்முனையைச் சேர்ந்த ஒருவருக்கு, தேசியப் பட்டியல் ஆசனம் வழங்க வேண்டும் என்று கோரியும், போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இதனால், கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் இழுபறி தீவிரமடைந்துள்ளது.
இந்த நிலையில் இன்றைய கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.