ilakkiyainfo

3 மாதங்களில் அரசியலுக்கு முழுக்கு போடுகிறார் மகிந்த ராஜபக்சே?

 

கொழும்பு: தீவிர அரசியலில் இருந்து தாம் 3 மாதங்களில் விலகிவிடுவேன் என்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவிடம் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இலங்கை அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சே, கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் படுதோல்வி அடைந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 8 மாதங்களாக தீவிர அரசியலில் ஈடுபடாமல் ராஜபக்சே ஒதுங்கியிருந்தார்.
இந்த நிலையில் திடீரென நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கினார் ராஜபக்சே. அத்துடன் பிரதமர் பதவியையும் குறி வைத்துப் பார்த்தார் ராஜபக்சே. ஆனால் அதிபர் சிறிசேனவோ, என்னதான் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேர்தலில் வென்றாலும் நிச்சயம் ராஜபக்சேவை பிரதமராக்க மாட்டேன் என்று வெளிப்படையாக அறிவித்தார்.
தேர்தலிலோ ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சி வென்றது. இதனால் ராஜபக்சேவின் பிரதமர் கனவு தகர்ந்தது.
அதேபோல் மகிந்த ராஜபக்சே சார்ந்துள்ள சுதந்திர கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் பங்கேற்பதால் எதிர்க்கட்சியாக முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ராஜபக்சேவின் எதிர்க்கட்சித் தலைவர் கனவும் தவிடுபொடியானது. இதனால் ஒரு முன்னாள் அதிபர், வெறும் எம்.பி.யாக மட்டுமே நாடாளுமன்றத்துக்கு செல்ல வேண்டிய நிலை உருவாகி இருக்கிறது.
இதனை மிகவும் கடுமையாக விமர்சித்து இலங்கை ஊடகங்கள் கேலிச்சித்திரங்களையும் வெளியிட்டிருந்தன.  இந்நிலையில் அண்மையில் அதிபர் சிறிசேனவை சந்தித்த மகிந்த ராஜபக்சே, என் மீது எந்த ஒரு கடும் நடவடிக்கையும் எடுக்க உத்தரவிட வேண்டாம்.. இன்னும் 3 மாதத்தில் எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு முழுமையாக அரசியலில் இருந்தே வெளியேறிவிடுவேன் எனக் கூறியதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தகவல் இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மஹிந்த இல்லாவிட்டால் ஐ.ம.சு.மு 40 ஆசனங்களையும் பெற்றிருக்காது

makinthaasமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமைத்துவம் வழங்கியிருக்காவிட்டால் ஐ. ம.சு.மு.வுக்கு 40 ஆசனங்கள் கூடக் கிடைத்திருக்காது.

அவரின் படத்தை பயன்படுத்திக்கொண்டு வாக்குபெற்ற சிலர் இன்று அவருக்கு ஏசித்திரிவதாக தேசிய சுதந்திர முன்னணி தலைவரும் ஐ. ம. சு. மு பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச தெரிவித்தார்.

வெற்றிலைக்கு வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்பு ஐ. ம.சு. மு வினூடாக நிறைவேறாவிட்டால் புதிய அரசியல் சக்தியாக செயற்பட தயங்கப்போவதில்லை என்று குறிப்பிட்ட அவர் கட்சி தலைவரான ஜனாதிபதியே ஐ.ம.சு. முவை தோற்கடிக்க நடவடிக்கை எடுத்ததாகவும் கூறினார்.

நாரஹேன்பிட்டி அபயாராம விகாரையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

ஐ.ம.சு.மு வை தோற்கடிக்க நடவடிக்க எடுத்ததாக ஜனாதிபதி சில ஐ. ம.சு.மு தலைவர்களிடம் கூறியிருக்கிறார். தேர்த லுக்கு கடைசி வாரமாகையில் ஐ. ம. சு. மு வுக்கு 113 ற்கும் 115 ற்கும் இடைப்பட்ட எம். பிக்கள் கிடைக்கும் நிலை காணப்பட்டது.

ஆனால் அந்த நிலையை பலவீனப்படுத்த பல்வேறு வழிமுறைகளை கையாள நேரிட்டதாக ஜனாதிபதி கூறியிருக்கிறார்.

உலகத்தில் தமது கட்சியை தோற்கடிக்க செயற்பட்ட வேறு தலைவர் கிடையாது.

இந்த தேர்தல் நியாயமாகவும் சுதந்திர மாகவும் நடந்ததாக சிலர் கூறுகின்றனர். ஆனால் தேர்தல் காலத்தில் ஜனாதிபதி வெளியிட்ட பல்வேறு கருத்துக்களை நோக்கினால் தேர்தல் நியாயமாக நடந்ததா என்ற சந்தேகம் காணப்படுகிறது.

இந்த நிலையில் 95 ஆசனங்கள் வென்றது கூட ஒரு வகையில் வெற்றிதான் கூட்டு அரசாங்கம் அமைப்பதற்காக ஐ.ம.சு.முவி னரோ ஐ.தே.க வினரோ வாக்களிக்கவில்லை.

ஐ.தே.கவுக்கு பெரும்பான்மை இல்லாததால் ஐ. ம. சு. வினரை பலிக்கடாவாக்கி ஆட்சியமைக்கவே ஐ. தே. க முயல்கிறது. இதன் மூலம் ஐ. ம.சு.மு கரைந்துபோகும்.

ஐ. ம. சு. மு முன்னாள் செயலாளர் சுசில் பிரேம் ஜெயந்த் இரட்டைவேடம போடுகிறார். தேர்தல் காலத்தில் ஒரு மாதிரியாகவும் தேர்தலின் பின் வேறு விதமாகவும் நடக்கிறார். நல்லாட்சியில் அமைச்சு பதவிபெற தயாராகிறார்.

நஞ்சு போத்தலுடன் வந்த டிலான் பெரேராவுக்கு ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியில் இருக்க முடியுமா? நாம் இந்த கூட்டு ஆட்சியில் சேரமாட்டோம் என்றார். ஜனநாயக இடதுசாரி முன்னணி தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்ததாவது:

ஐ.ம.சு.மு வின் கீழ் போட்டியிட்டு வென்ற சிலர் மக்கள் ஆணைக்கு மாற்றமாக செயற்பட தயாராகின்றனர். ஆனால் ஐ.ம.சு.மு விலுள்ள பெரும்பாலான் மையினர் மக்கள் ஆணைக்கு மாற்றமாக செயற்படபோவதில்லை. எதிர்க் கட்சியாக எமது பொறுப்பை தொடர்ந்து நிறை வேற்றுவோம்.

ஒழுக்காற்று விசாரணை என்ற பெயரில் கட்சி எம்.பிக்களின் முதுகெலும்பை உடைக்க ஜனாதிபதி முயன்று வருகிறார்.

இதற்குப் பயந்த சிலர் ஜனாதிபதியின் சொற்படி ஆடுகின்றனர். மனசாட்சிக்கு பயந்த எம்.பிக்கள் எதிர்தரப்பில் அமர தயாராகின்றனர். மஹிந்த ராஜபக்ஷவின் பக்கம் அணி திரளுமாறு சகலருக்கும் அழைப்பு விடுக்கின்றோம் என்றார்.

Exit mobile version