அண்மையில் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலின் பின்னர் அமைக்கப்பட்டுள்ள தேசிய அரசின் முதலாவது மீளக்குடியமர்வு நடவடிக்கையானது இன்று வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட சின்ன அடம்பன் கிராமசேவகர் பிரிவில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இதில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
பூந்தோட்டம் நலன்புரி நிலைய மக்களை மீள்குடியேற்ற வீட்டுத் திட்டத்துடன் கூடிய காணி வழங்கி வைப்பு (படங்கள்)
வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் யுத்தம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்களில் கடந்த 20 வருடங்களாக பல குடும்பங்கள் வசித்து வருகின்றன.
யுத்தம் முடிவடைந்து 6 வருடங்கள் கடந்த நிலையிலும் மீள்குடியேறுவதற்கு ஒரு துண்டு காணி கூட இல்லாமையால் மூன்று தலைமுறைக்களைக் கண்டும் இம் முகாம் மூடப்படாத நிலையில் இருந்தது.
இந் நிலையில் தற்போது இம் முகாமினை மூடி இங்கு வசிக்கும் 104 குடும்பங்களுக்கும் வவுனியா, நெடுங்கேணி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சின்னடம்பன், இராசபுரம் பகுதியில் காணிகளும் வீட்டுத் திட்டமும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
காணிகளுக்கான உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன் அப் பகுதியில் 150 வீடுகளை அமைப்பதற்காக அடிக்கல் நாட்டும் நிகழ்வும் இடம்பெற்றது.
லைக்கா மொபைல் நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளை நிறுவனம் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து இந்த வீட்டுத் திட்டத்தை வழங்குகின்றது.
இந்த ஆரம்ப நிகழ்வில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான துமிந்த திஸாநாயக்கா, ஞானம் பவுண்டேசன் ஸ்தாபகர் திருமதி அல்லிராஜா, அதன் இயக்குனர் அ.சுபாஸ்கரன், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.