குஜராத்தில் படேல் சமூகத்தினர் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் காரணமாக குஜராத்தின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதோடு 4 நகரங்களில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு மாநிலத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 5000 துணை இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
குஜராத்தில் படேல் சமூகத்தை இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் ஓ.பி.சி. சேர்க்கக்கோரி நடைபெற்ற போராட்டத்தை முன்னின்று நடத்திய ஹர்திக் படேல் கைது செய்யப்பட்டதையடுத்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறை சம்பவங்கள் வெடித்தன.
நேற்று முன்தினம் போராட்டக்காரர்களால் 50-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் தீக்கிரையாக்கப்பட்டன. அரசு அலுவலகங்கள் சேதப்படுத்தப்பட்டன.
வன்முறையைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அகமதாபாத், சூரத், மேஷனா, விஸ்நகர், உஞ்சா ஆகிய பகுதிகளில் நேற்று ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், துணை இராணுவப் படையைச் சேர்ந்த 5000 பேர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
வன்முறைச் சம்பவங்களை அடுத்து குஜராத் முதல்வர் ஆனந்திபென் படேல் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைவரம் குறித்து முதல்வர் ஆலோசித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நிலைமையை சமாளிக்க கூடுதல் படைகளை மத்திய அரசு அனுப்பும் என ராஜ்நாத் சிங் உறுதியளித்ததாகவும்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் தடியடி நடத்தியதாக கூறப்படுவது குறித்தும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் முதல்வர் ஆனந்திபென் தெரிவித்தார்.
இந்நிலையில், நேற்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றமை காரணமாக அரசுப் பேரூந்துகள் இயங்கவில்லை. பாடசாலைகள், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன.
சந்தைகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதனால் குஜராத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டன.