தேசியப் பட்டியல் நியமனங்கள் தொடர்பில் கூட்டமைப்புக்குள் அதிருப்தி நிலை உள்ளதாக அவதானிகள் கூறுகின்றனர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவான இணைப்புக்குழுவை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று கொழும்பில் இன்று கூடிய அந்த அமைப்பைச் சேர்ந்த மூன்று கட்சிகள் தமிழரசுக் கட்சியிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றன.
நடந்து முடிந்த பொதுத் தேர்தலை அடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு தேசிய பட்டியல் இடங்களுக்கான ஆட்களை நியமிப்பதில் எற்பட்டிருந்த அதிருப்தி நிலைமையை அடுத்து, தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய 3 கட்சிகளின் முக்கியஸ்தர்கள் கொழும்பில் இன்று கூடி இரண்டாவது கட்டமாகப் பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.
இதற்கு முன்னதாக யாழ்ப்பாணத்தில் இவர்கள் கூடி தேர்தலுக்குப் பின்னரான நிலைமைகள் குறித்து ஆராய்ந்திருந்தார்கள்.
இந்தக் கூட்டத்தில் டெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், சிவாஜிலிங்கம் உள்ளிட்ட 6 பேரும், ஈபிஆர்எல்எஃப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், செயலாளர் சிவசக்தி ஆனந்தன் உள்ளிட்ட 5 பேரும், புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் உள்ளிட்ட இருவருமாக 13 பேர் கலந்து கொண்டிருந்தனர்.
செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐநா மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள ஐநா விசாரணை அறிக்கை, அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படவுள்ள விசாரணை சர்வதேச விசாரணையாக அமைய வேண்டியதன் அவசியம், அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிறுவன ரீதியாகச் செயற்பட வேண்டியதன் தேவைகள், முக்கியத்துவம் என்பன உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டதாக எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய 3 கட்சிகளும் நாடாளுமன்றத்தில் தனித்து இயங்குவது குறித்து எதுவும் இங்கு பேசப்படவில்லை என்று கூறிய சிவாஜிலிங்கம், இந்தக் கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து தமிழரசுக் கட்சிக்கு எடுத்துக் கூறி கலந்துரையாடவுள்ளதாகவும், அதற்காகவே இணைப்புக் குழு கூட்டத்தைக் கூட்டுமாறு அழைப்பு விடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
தமிழரசுக் கட்சியின் செயற்பாட்டில் அதிருப்தி கொண்டுள்ள ஏனைய 3 கட்சிகளும் தனித்து இயங்குவது குறித்து தேர்தலின் பின்னர் தீவிரமாகச் சிந்தித்து வருவதாகவும் அதுபற்றி அவர்கள் கலந்துரையாடியதாகவும் முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தோழமைக் கட்சிகளை ஓரங்கட்டும் சம்பந்தனின் அதிரடி ஆட்டம்
29-08-2015
வெளித்தோற்றத்தில் கூட்டமைப்பு வெற்றியடைந்திருப்பதாகத் தெரியலாம். கூட்டமைப்பும் இந்த வெற்றியைத் தனக்குக் கிடைத்த மகத்தான பரிசாகக் கருதிக் கொண்டாடலாம்.
ஆனால், யதார்த்த நிலைமை ஒன்றும் மகிழக் கூடியதாகவோ, வெற்றிகரமாகவோ அமையவில்லை.
வடக்குக் கிழக்கில் தமக்கு 20 உறுப்பினர்களுக்கான ஆசனங்கள் கிடைக்கும் என்று சம்பந்தன் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.
அந்த நம்பிக்கை வெற்றியளிக்கவில்லை. மட்டுமல்ல, யாழ்ப்பாணத்தில் ஏழு ஆசனங்களையும் தாமே கைப்பற்றுவோம் என்று மருதனார்மடத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் கூட்டமைப்பின் தலைவர்கள் உறுதி கூறினார்கள்.
இப்பொழுது யாழ்ப்பாணத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு உறுப்பினரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஒரு உறுப்பினரும் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்.
போதாக்குறைக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஒரு உறுப்பினரை தேசியப் பட்டி யல் மூலமாக அங்கே நியமித்திருக்கிறது.
கிழக்கில் திருகோணமலையில் சம்பந்தன் மட்டும் தெரிவாகியிருக்கிறார். அம்பாறையின் நிலைமையும் மாற்றமில்லை.
இதைத்தவிர, கூட்டமைப்பு தனக்குக் கிடைத்த தேசியப்பட்டியல் உறுப்பினர் களைத் தீர்மானிப்பதற்கே நான்கு நாட்களுக்கு மேல் ஆலோசிக்க வேண்டி யிருந்தது.
வழமையைப் போல உள் குத்துகளும் இழு பறிகளும் நிகழ்ந்தே ஒரு முடிவு எட்டப்பட்டது. இதொன்றும் புதியதல்லவே.
கூட்டமைப்பில் உள்ள வழமையான சமாச்சாரம் தானே என்று வாசகர்கள் எண்ணக்கூடும். ஆனால் இந்த விவகாரம் வரவர மேலும் மேலும் கூட்டமைப்பைப் பலவீனப்படுத்தியே வருகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்யப்பட்ட கட்சியாக்க வேண்டும் என்று தீவிரமாக வலியுறுத்தி வந்தவர் சுரேஷ். இந்த விடயத்தில் ஏறக்குறைய சம்பந்தனைக் குடைந்தெடுத்துக் கொண்டிருந்தவர் பிரேமச்சந்திரன்.
இப்பொழுது சுரேஷை அடக்கி, அவர் கொடுத்து வரும் தொல்லையை நீக்கி விட முயற்சி நடக்கிறது. ஆனால், சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கின்ற கட்சிகளில் முக்கியமான ஒரு தலைவர்.
அப்படியான ஒருவரை நீக்குவதன் மூலமாக எதிர்காலத்தில் கூட்டமைப்பு பாதகமான விளைவுகளைச் சந்திக்கலாம்.
கூட்டமைப்பின் தலைவராக இருக்கும் சம்பந்தன் அந்தப் பதவி நிலைக்கமைய நடக்கவில்லை என்று ஏனையவர்கள் பகிரங்கமாகவும் தனிப்பட்ட சந்திப்புக்களிலும் தொடர்ந்து குறைபட்டு வருகிறார்கள். கூட்டமைப்பின் தலைவர் என்று பெயரளவில் இருக்கிறாரே தவிர, மற்றும்படி அவர் தமிழரசுக் கட்சி ஆளாகவே செயற்படுகிறார்.
தமிழரசுக் கட்சியைப் பலப்படுத்துவதற் காகவே அவர் ஏனைய கட்சிகளின் கூட்டைப் பயன்படுத்தி, தமிழ் மக்களிடம் ஒன்றுபட்ட அமைப்பு என்ற பேரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்குச் சேகரிக்கிறார். இதை ஏற்க முடியாது என்று கூட்டமைப்பின் பிற தலைவர்கள் கவலைப்படுகிறார்கள்.
அப்படியென்றால், பிடிக்காதவர்கள் கூட்டமைப்பை விட்டு வெளியேறலாம் என்று தடாலடியாக சம்பந்தனும் பிற தலைவர்களுக்குப் பதிலளித்திருக்கிறார்.
சம்பந்தனுக்குத் தெரியும், என்னதான் பிரச்சினைப்பட்டாலும் எப்படித்தான் இவர்களைத் தான் ஒதுக்கித்தள்ளினாலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை விட்டு யாரும் வெளியேறப் போவதில்லை என்று.
அப்படி வெளியேறிப் போனவர்களில் சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா போன்ற சிலர் மீண்டும் வந்து இணைந்து கொண்டுள்ளனர்.
இணைந்து கொள்ளாதவர்கள் இன்னும் தம்மை வேறு இடத்தில் நிலைப்படுத்திக் கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருக் கின்றனர். ஆகவே இந்த நிலையில் எவரும் இலகுவில் வெளியேறிச் செல்லப் போவதில்லை என்று சம்பந்தன் நம்புகிறார்.
சம்பந்தன் ஏறக்குறைய எதேச்சாதிகாரப் போக்கில்தான் நடந்து கொள்கிறார் என்கிறார்கள் பிற கட்சியினர். உட்கட்சி ஜனநாயகமோ பொது நெறிமுறைகளோ இல்லாமல் நடந்து கொள்ளும் ஒரு மூத்த தலைவர் என்று சம்பந்தனைப் பற்றிய விமர்சனங்கள் பொதுப்பரப்பில் உண்டு.
தமிழ் மக்களின் தலைவர்களில் மூத்தவர், அனுபவசாலி என்று சொல்லப்பட்டாலும் ஜனநாயக மறுப்பாளர், மக்களின் பிரச்சினைகளைப் பற்றிக் கவலைப்படாதவர் என்ற குற்றச்சாட்டும் விமர்சனமும் சம்பந்தன் மீது உண்டு.
கூடவே, மிக நீண்டகாலமாக பாராளுமன்ற உறுப்பினராகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவும் இருக்கின்ற சம்பந்தன் இதுவரையில் எத்தகைய மாற்றங்களையும் முன்னேற்றங் களையும் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் என்ற வரலாற்றுக் கேள்வியும் அவர் முன்னே எழுப்பப்பட்டு வருகிறது.
இப்பொழுது வெற்றியடைந்திருக்கும் கூட்டமைப்பு எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுள் அரசியல் தீர்வை எட்டியே தீர வேண்டும். அப்படியான தொரு வாக்குமூலத்தைச் சம்பந்தன் கொடுத்திருக்கிறார் அதாவது அப்படியானதொரு கால அட்டவ ணையை வரைந்து தன்னைத்தானே நெருக்கடிக்குள் தள்ளியிருக்கிறது த. தே. கூ.
தேர்தல் வெற்றிக்காக இப்படியான தொரு அறிவிப்பைச் செய்ய வேண்டியிருந்தது. ஆனால், இந்த அறிவிப்பை அவர் எப்படியாவது நிறைவேற்றியே தீர வேண்டியுள்ளது.
கடந்த காலத்தைப் போல அவரால் அல்லது கூட்டமைப்பினால் இனியும் காலத்தைக் கடத்தி விடமுடியாது. அல்லது தொடர்ந்து ஏமாற்றங்களை அளித்துக்கொண்டு வெற்றி வாய்ப்பைப்பெற முடியாது.
இந்தத் தேர்தலின்போது சமஷ்டித் தீர்வை எப்படியும் 2016 இல் தாம் பெறுவோம் என்று சம்பந்தன் சொல்ல வேண்டியிருந்ததற்குக் காரணம், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும் ஜனநாயகப் போராளிகள் அமைப்பும் கூட்டமைப்புக்குச் சவாலாக உணரப் பட்டமையே.
தேர்தலில் இந்தத் தரப்புகள் வெற்றியைப்பெறவில்லை என்றாலும் அவற்றின் அழுத்தங்கள் குறைந்துவிட்டன என்று சொல்வதற்கில்லை. எப்போதையும் போல கொழும்பை அல்லது அரசாங்கத்தைக் குற்றம்சாட்டிக் கொண்டிருக்கவும் முடியாது.
இப்பொழுதே மாகாணசபை குறித்த சலிப்பு மக்களிடம் உண்டு. அந்தச் சலிப்பையும் அவர்கள் தாங்கிக் கொண்டுதான் கடந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்திருக்கிறார்கள்.
ஆனால். அந்த வாக்குகள் அவர்கள் அந்த அமைப்புக்கு வழங்கிய அங்கீகாரம் என்பதை விட ஒரு சந்தர்ப்பம் என்று தான் சொல்ல வேண்டும். இந்தச் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்த வில்லை என்றால் அடுத்த தடவை மக்கள் அதற்கான தண்டனையைக் கொடுப்பார்கள்.
இதுதான் வரலாற்றின் விதியாகும்.
கூட்டமைப்பின் வெற்றி உண்மையில் இந்தத் தடவை பல காரியங்களைச் செய்வதற்கு ஏற்றமாதிரி அமைந்துள்ளது.
கொழும்பில் அமைந்திருக்கும் அரசாங்கம் ஒரு தேசிய அரசாங்கம் என்றவகையிலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் அதிகளவிற்கு முரண்படாத நிலையே அரசாங்கத்திலும் ஜனாதிபதியிடத்திலும் உள்ளது என்பதாலும் பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதில் கூடுதல் சாத்தியங்கள் உள்ளன.
இந்தச் சாத்தியங்களைப் பயன்படுத்திச் சாதனை செய்ய வேண்டியது கூட்டமைப்பின் பொறுப்பு. இதற்கு அந்த அமைப்பில் கருத்தொற்றுமையும் செயற்பாட்டு ஒற்றுமையும் தேவை. செயற்பாட்டுக்கான உழைப்பும் திட்டங்களும் அவசியம்.
ஆனால், இது துளியளவு கூடக் கூட்டமைப்பிடம் இல்லை. எனவேதான் மாகாணசபை இயங்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த மாகாண சபையில் குறித்துச் சொல்லக்கூடிய எந்தச் சாதனையையும் காண முடியவில்லை.
அதைப்போல எதிர்வரும் காலத்தில் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் வினைத்திறனுள்ள வகையில் காரியங்கள் சாதிக்கப்படும் என்றில்லை.
கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவிலும் கட்சித் தலைவர்கள் குழுவிலும் சுரேஷ் பிரேமச்சந்திரன் வகித்த இடத்தை இனி யார் வகிப்பார்கள் என்ற கேள்வியும் இந்த இடத்தில் எழுகிறது.
செல்வம் அடைக்கலநாதனை விடவும் சுரேஷ் வலிமையோடு குரல் எழுப்பக் கூடியவர். அப்படியான ஒருவர் இல்லாதிருக்கும் நிலையில் உள்ளழுத்தத்துக்கும் இடமில்லை. எனவே உறைநிலைக்கே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு செல்லும்.
இது மெய்யான அர்த்தத்தில் அரசாங்கத்துக்கே அதிக நன்மைகளைக் கொடுக்கும். கூட்டமைப்பின் இயக்காத்தனமும் அதன் பொறுப்பற்ற தன்மையும் எப்போதும் அரசாங்கத்துக்கே அதிக நன்மைகளைக் கொடுத்து வந்திருக்கிறது.
இதனால் பாதிக்கப்படப் போவது மக்களே.
போரினால் பாதிக்கப்பட்டு, இன்னும் மீள் நிலைப்படாத மக்கள் மேலும் பாதிக்கப்பட்ட நிலையிலேயே இருக்கப்போகிறார்கள். இந்த மக்கள் குறித்த உத்தேச செயற்றிட்டங்களைக் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரையில் வரையவில்லை.
இப்படியான ஒரு நிலையில்தான், தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் உள்ளது.
நம்பிக்கையோடு தமது அடையாளத்துக் காகவும் அரசியல் இருப்புக்காகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்த மக்கள் தாங்கள் அளித்த வாக்குக்காக எதிர்பார்ப்புகளைக் கொண்டிருப்பர்.
அந்த எதிர்பார்ப்பை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாதல்லவா
ஏனென்றால் இப்பொழுது தமிழ் மக்களை நேரடியாக எதிர்க்கின்ற அரசாங்கம் கொழும்பில் இல்லை. ஆகவே அரசாங்கத்தைச் சாட்டுச் சொல்லிக் காலத்தைக் கடத்த முடியாது. அப்படிக் கடத்துவதாக இருந்தால் தற்போது பெற்ற வெற்றிதான் இறுதி வெற்றியாக அமையும்.
ஆகவே தான் பெற்றுக் கொண்ட வெற்றி என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் பொறுப்புச் சொல்வதற்கான ஒரு கடப்பாட்டை உருவாக்கியுள்ளது. பொறுப்புச் சொல்வதில் இருந்து தவறும் பட்சத்தில் அதுவே அதற்கான ஆபத்தாக மாறிவிடும்.