நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியதும், ஜெனிவா களம் குறித்த கலக்கத்துடன் காத்திருந்த இலங்கை அரசாங்கத்துக்கு, ஆறுதல் அளிக்கும் செய்தியோடு வந்திறங்கியிருந்தார் தெற்கு, மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால்.

இந்த ஆண்டில் – இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், அவர் மேற்கொண்ட மூன்றாவது பயணம் இது.

கடந்த ஜனவரியில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தேர்தலில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, பெப்ரவரி 2ஆம் திகதி கொழும்பு வந்திருந்தார் நிஷா பிஸ்வால். அந்தப் பயணத்தின் போது, அவர் கொழும்புக்கு ஒரு புதிய சமிக்ஞையைக் காட்டி விட்டுச் சென்றிருந்தார்.

மார்ச் மாதம் நடந்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 29ஆவது அமர்வில், இலங்கை தொடர்பான ஐ.நா விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படவிருந்த சூழல் அது.

போர்க்குற்றச்சாட்டுத் தொடர்பான உள்நாட்டு விசாரணை ஒன்றை நடத்த புதிய அரசாங்கம் சர்வதேச சமூகத்துக்கு வாக்குறுதியை அளித்தால், இலங்கையைக் காப்பாற்றும் வகையில், ஐ.நா விசாரணை அறிக்கைய பிற்போடச் செய்வதற்கு அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும் என்று அப்போது இலங்கைக்கு தெளிவாக கூறியிருந்தார் அவர்.

இதன் பின்னர் தான், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஜெனிவா, வோசிங்டன், லண்டன், நியூயோர்க் என்று பறந்து பறந்து வாக்குறுதிகளைக் கொடுத்தார். அதன் பின்னரே, புதிய அரசாங்கத்துக்கு காலஅவகாசம் அளிக்கும் வகையில், ஐ.நா விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டது.

அந்த முடிவு ஐ.நா பொதுச்செயலராலோ ஐ.நா மனித உரிமை ஆணையாளராலோ எடுக்கப்படவில்லை. அந்த முடிவுக்கு முழுப்பொறுப்பும் அமெரிக்கா தான் காரணம். அதற்குப் பிள்ளையார் சுழி போட்டவர் தான் நிஷா பிஸ்வால்.

புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், தனது இராஜதந்திர நகர்வுகள் மூலம், சீனாவின் பக்கத்தில் இருந்து இலங்கையை அமெரிக்காவின் பக்கத்துக்கு கொண்டு போய்ச் சேர்த்திருந்தார் அவர்.

அதையடுத்து, கடந்த மே மாத துவக்கத்தில், இரண்டாவது தடவையாக மீண்டும் கொழும்பு வந்தார் அவர். அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியின் வரலாற்று ரீதியான பயணத்தின் போது கூடவே அவரும் வந்திருந்தார்.

ஜோன் கெரி தனது பயணத்தை முடித்துக் கொண்டு கிளம்பிய பின்னரும், நிஷா பிஸ்வால் கொழும்பில் தங்கியிருந்து வெசாக் வழிபாடுகள் கொண்டாட்டங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் இணைந்து பங்கெடுத்து விட்டே அமெரிக்கா சென்றார்.

அமெரிக்கா தொடர்பாக சிங்கள பௌத்த மக்களிடம் காணப்பட்ட வெறுப்பைக் களைவதற்காக அவர் மேற்கொண்ட அடுத்த இராஜதந்திர நகர்வே இது.

இப்போது மூன்றாவது முறையாக வந்து சென்றிருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து, சரியாக இரண்டு வாரங்கள் கழித்து அவர் கொழும்பு வந்தார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது அமர்வில் இலங்கை தொடர்பான ஐ.நா விசாரணை அறிக்கை, குறித்த விவாதம் நடப்பதற்கு சரியாக ஒரு மாதம் முன்னதாக அவரது இந்தப் பயணம் இடம்பெற்றது,

அவருடன் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் ஜனநாயகம், மனித உரிமைகள், தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச்செயலர் ரொம் மாலினோவ்ஸ்கியும் கொழும்பு வந்திருந்தார்.

இவரும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் இலங்கைக்கு ஒரு பயணத்தை மேற்கொண்டவர் தான். ஏப்ரல் மாதம் கொழும்பு வந்த இவர், வடக்கிற்கும் பயணம் செய்ததுடன், முள்ளிவாய்க்காலிலும், போரில் இறந்தவர்களுக்காக மலர் அஞ்சலி செலுத்தி அதனை தமது ருவிட்டரிலும் வெளியிட்டிருந்தார்.

இவர்கள் இருவரும், இம்முறை இலங்கை வந்ததன் நோக்கமே, அமெரிக்காவின் அணுகுமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை வெளிப்படுத்துவதற்காகத் தான்.

அதாவது, புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ள சூழலில், அதனுடன் ஒத்துழைப்பையும் உறவுகளையும் வலுப்படுத்திக் கொள்ளும் வகையிலும், சர்வதேச நெருக்கடிக்குள் இருந்து இலங்கையைக் காப்பாற்றும் வகையிலும் தான் இவர்களின் பயணம் அமைந்திருந்தது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவை என்ற பொறிக்குள் இலங்கையைத் தள்ளிச் சென்ற அமெரிக்கா தான், இப்போது அந்தப் பொறியில் இருந்து காப்பாற்றுகின்ற ஆபத்பாந்தவனாகவும் வந்து நிற்கிறது.

2012, 2013ஆம் ஆண்டுகளில் ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களைக் கொண்டு வந்த அமெரிக்கா, போர்க்குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்புக்கூற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியது.

அதற்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் போதிய ஆதரவும் கிடைத்தது. ஆனால், இலங்கை அரசாங்கம் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

இதன் பின்னர், 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம், மீண்டும் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தது அமெரிக்கா. அதில், உள்நாட்டு விசாரணையை ஊக்குவிக்கும் அதேவேளை, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணையையும் மேற்கொள்ள வலியுறுத்தியது.

அந்த தீர்மானத்தையும் இலங்கை அரசாங்கம் நிராகரித்தது. அதன் விளைவாகவே ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

இப்போது, இந்த விசாரணை அறிக்கை வெளிவரத் தயாராகியுள்ள நிலையில் தான், அமெரிக்கா இப்போது, இலங்கைக்கு ஆதரவாகத் திசை திரும்பியிருக்கிறது.

இலங்கைக்கு ஆதரவளிக்கும் தீர்மானம் ஒன்றை – உள்நாட்டு விசாரணைகளுக்கு காலஅவகாசம் அளிக்கக் கோரும் தீர்மானம் ஒன்றை ஜெனிவாவில் கொண்டு வரப்போவதாக அறிவித்திருக்கிறார் நிஷா பிஸ்வால்.

ஐ.நா விசாரணை அறிக்கையின் பின்னர், போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க, ஜெனிவா கூட்டத்தொடரில் சர்வதேச விசாரணை ஒன்றுக்கு ஆதரவான தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்த்திருந்தது தமிழர் தரப்பு.

ஆனால், அதற்கான வாய்ப்புகள் மிகமிக அரிதானது என்பது இராஜதந்திர மட்டத்தில் தொடர்பில் இருந்தவர்கள், மனித உரிமைகள் சார் நடவடிக்கைகளில் தொடர்பில் இருப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

சர்வதேச விசாரணையின் மூலம், நியாயம் பெற்றுக் கொள்ளலாம் என்ற தமிழர் தரப்பின் கருத்து சரியானதேயானாலும், சர்வதேச புறச்சூழல் அதற்குச் சாதகமாக உள்ளதா என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

2012, 2013, 2014ஆம் ஆண்டுகளில் இலங்கையில் இருந்த சூழல் இன்றில்லை. எல்லாமே மாறியிருக்கிறது.

இன்று மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இல்லை. குற்றச்சாட்டுகளை விசாரிக்க முடியாது என்று கூறும் யாரும் இப்போது அதிகாரத்தில் இல்லை. குற்றச்சாட்டுகளை மறுக்கும் திராணியும் எவருக்கும் இல்லை.

குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ளாவிடினும், உள்நாட்டுக்குள் விசாரிக்கிறோம் என்று கூறுகின்ற அரசாங்கம் தான் இப்போது இருக்கிறது.

இதற்கு இணங்காவிட்டால் சர்வதேச நகர்வு ஆபத்தாக அமையும் என்பதை தற்போதைய அரசாங்கம் அறியும். எனவே, சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்படத் தயாராக இருக்கிறது இப்போதைய அரசாங்கம். இந்தச் சாதகமான கசூழலைப் பயன்படுத்திக் கொள்ள முனைந்திருக்கிறது அமெரிக்கா.

மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் உள்நாட்டில் விசாரணை நடத்துவதாக கொடுத்திருக்கும் வாக்குறுதியை ஏற்றுக்கொண்டு, நல்லிணக்கத்துக்கான புறச்சூழலை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, அதற்கு காலஅவகாசம் கொடுக்கலாம் என்ற நிலைப்பாட்டுக்கு வந்திருக்கிறது அமெரிக்கா.

அதைவிட முக்கியமான ஒரு விடயம், ஜெனிவாவில் இம்முறை ஒரு தீர்மானத்தைக் கொண்டு வரப் போவதாகவும் அமெரிக்கா கூறியிருக்கிறது. அதுவும் அந்த தீர்மானம் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து அதன் இணக்கப்பாட்டுடன் கொண்டு வரப்படவுள்ளது.

ஜெனிவாவில் நிறைவேற்றப்படும் சில தீர்மானங்கள், சம்பந்தப்பட்ட நாடுகளின் அரசாங்கங்களின் இணக்கப்பாட்டுடன் கொண்டு வரப்படும். அதற்காக இராஜதந்திர அழுத்தங்கள் அல்லது வேறு வகையிலான அழுத்தங்கள் பின்புலத்தில் கொடுக்கப்படுவதுண்டு.

இரண்டாவது சம்பந்தப்பட்ட நாட்டின் ஒப்புதலைப் பெறாமல் நிறைவேற்றப்படும். ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் மூன்றுக்குமே, இலங்கை அரசின் ஒப்புதலைப் பெற முயற்சிக்கப்பட்டது ஆனால் அதுமுடியவில்லை. அதற்காக பல்வேறு தடைகள் -அழுத்தங்கள் விதிக்கப்பட்டன.

ஆனால் இப்போதைய அரசாங்கத்தை அமெரிக்கா தனது கைக்குள் போட்டுக் கொண்டிருக்கிறது. அதனால் சுலபமாக, இந்த தீர்மானத்தை நிறைவேற்ற முடியும்.

கடந்த மூன்று தீர்மானங்களையும் நிறைவேற்றுவதற்கு அமெரிக்கா கடுமையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. காரணம், இந்தியா, ரஷ்யா, சீனா என்று முப்பெரும் வல்லரசுகள் இலங்கைக்கு துணையாக இருந்தன.

கடைசித் தீர்மானம் நிறைவேற்றிய போது கூட இந்தியா உள்ளிட்ட 12 நாடுகள் நடுநிலை வகித்திருந்தன. இதனால், இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை ஒன்று கோரி தீர்மானத்தை முன்வைத்தால் நிச்சயமாக இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் அதனை எதிர்க்கும் என்பது அமெரிக்காவுக்குத் தெரியும்.

எனவே, அவ்வாறானதொரு தீர்மானத்தை முன்வைத்து, ரிஸ்க் எடுப்பதை விட, இலங்கையுடன் இணைந்து தீர்மானத்தை முன்வைப்பது அமெரிக்காவுக்கும் சுலபமானது.

ஆனால் தீர்மானத்தின் உள்ளடக்கம் எவ்வாறு அமையும் என்பது ஐ.நா விசாரணை அறிக்கை வெளியான பின்னர் தான் இருநாடுகளும் இணைந்து தீர்மானிக்கும் என்று கூறியிருக்கிறார் நிஷா பிஸ்வால்.

ஐ.நா விசாரணை அறிக்கையின் உள்ளடக்கம் ஏதோ வெளியே தெரியாதது போல அவர் கதை விட்டிருக்கிறார். ஆனால், உள்ளடக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் சிலருக்கும் கூடத் தெரிந்திருப்பதாகத் தகவல். எனவே நிஷா பிஸ்வால் அதை அறிந்திருக்க மாட்டார் எனக் கருத முடியாது.

அமெரிக்கா அடுத்த தீர்மானத்தை ஏற்கனவே வரைந்திருக்கும். ஆனால் இரகசியமாக அது வைக்கப்பட்டிருக்கும்.

இந்த முறை தீர்மானம் இலங்கை அரசாங்கத்தின் இணக்கத்துடன் நிறைவேற்றப்படும் போது, எந்த நாடும் அதை எதிர்க்க முடியாது.

அதேவேளை, இலங்கையுடன் இணைந்து – உள்நாட்டு விசாரணைக்கு ஆதரவளிக்கும் இந்த தீர்மானம் நிறைவேற்றப்படும் போது அது முற்றிலும் இலங்கை அரசாங்கத்துக்குச் சாதகமாக இருக்கும் என்று கருத முடியாது. சில நுட்பமான விடயங்களின் ஊடாக அது கொளுக்கிப் பிடி ஒன்றை போடவே முயற்சிக்கும்.

ஆனால் இது தமிழர் தரப்பை பொறுத்தவரையில் ஏமாற்றமளிக்கும் ஒன்றாகவே இருக்கப் போகிறது. ஏனென்றால் சர்வதேச விசாரணையே அவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.

அதற்கு வாய்ப்பு மறுக்கப்படும் போது, தமிழர் தரப்பு என்ன செய்யப் போகிறது?

கிடைக்கும் இடைவெளிகளின் ஊடாக பொறுப்புக்கூறலை நகர்த்தப் போகிறதா- அல்லது சர்வதேச சமூகத்துடன் முரண்பட்டு நிற்கப்போகிறதா? பொறுத்திருந்து பார்க்கலாம்.

– என் கண்ணன்

தமிழக தேர்தல் 2016: மக்கள் மனசு….

Share.
Leave A Reply

Exit mobile version