இலங்கைத் தமிழரசுக் கட்சியை (ஆங்கிலத்தில் சமஷ்டிக் கட்சி) 1949ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 18ஆம் திகதி அகில இலங்கை தமிழ் காங்கிரஸிலிருந்து பிரிந்த சா.ஜே.வே.செல்வநாயகம், சி. வன்னியசிங்கம், ஈ.எம்.வி.நாகநாதன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் உருவாக்கினார்கள்.
‘சமஷ்டிக் கட்டமைப்பு அடிப்படையில், மொழிவாரியான தமிழருக்கான சுயாட்சிப் பிரிவு ஒன்றை ஸ்தாபிப்பதனூடாக இலங்கையின் தமிழ் மக்களுக்கு விடுதலையைப் பெற்றுக்கொடுத்தல்’ என்ற கொள்கையினடிப்படையில் சா.ஜே.வே.செல்வநாயகம் தலைமையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி (ஆங்கிலத்தில் சமஷ்டிக் கட்சி) உருவானது. ஆரம்ப காலங்கள் தமிழரசுக் கட்சிக்கு அவ்வளவு சாதகமாக இருக்கவில்லை.
புதிதாகத் தோன்றிய கட்சி எதிர்நோக்கும் சவால்களைக் கடந்து வரவேண்டிய நிர்ப்பந்தம் அதற்கு இருந்தது. தமிழரசுக் கட்சி தோற்றம் பெற்று மூன்றாண்டுகளுக்குள்ளாக 1952இல் பொதுத் தேர்தலை சந்தித்தது.
அந்தத் தேர்தலில் 2 ஆசனங்களை மட்டுமே இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் வெல்லக் கூடியாதாக இருந்தது.
கோப்பாயில் சி.வன்னியசிங்கமும் திருகோணமலையில் எஸ்.சிவபாலனும் தமிழரசுக் கட்சியில் போட்டியிட்டு வெற்றியீட்டியிருந்தார்கள். காங்கேசன்துறைத் தொகுதியில் போட்டியிட்ட சா.ஜே.வே.செல்வநாயகம் தோல்வி கண்டார்.
அந்தத் தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட சேர். பொன்னம்பலம் இராமநாதனின் மருமகனான எஸ்.நடேசன் வெற்றி பெற்றிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்தத் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் 4 ஆசனங்களை வெற்றி கொண்டிருந்தது. 1947ஆம் ஆண்டு தேர்தலில் (தமிழரசுக் கட்சி பிரிவுக்கு முன்பதாக) அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 7 ஆசனங்களை வெற்றி கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடப்படவேண்டியது.
1952ஆம் ஆண்டு தேர்தல் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு அவ்வளவு சாதகமாக இருக்கவில்லையெனினும், 1956ஆம் ஆண்டு தேர்தல் வித்தியாசமான பெறுபேற்றை வழங்கியது. இதற்குக் காரணம் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க.
1952ஆம் ஆண்டு தேர்தல் சா.ஜே.வே.செல்வநாயகம் தலைமையில் புதிதாக உருவாகியிருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு மட்டும் முதலாவது பொதுத் தேர்தலாக இருக்கவில்லை.
1951ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க தலைமையிலான ‘மத்திய-இடது கொள்கையை’ உடைய குழுவினர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை உருவாக்கினர்.
எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க தலைமையில் புதிதாக தோன்றியிருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சந்தித்த முதலாவது பொதுத் தேர்தலும் 1952ஆம் ஆண்டு பொதுத் தேர்தலே.
1952ஆம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 54 ஆசனங்களை வெற்றிகொண்ட போது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வெறுமனே 9 ஆசனங்களையே வெற்றி கொண்டிருந்தது.
எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு இது அவர்கள் எதிர்பார்த்த ஆரம்பமாக இருக்கவில்லை. ஆனால், 1956ஆம் ஆண்டு தேர்தலில் இந்த நிலை நேரெதிராக மாறியது.
1948இல் சுதந்திரம் பெற்றது முதலான ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி மேலைத்தேயம் சார்பான ஆட்சியாகவே காணப்பட்டது.
இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேருவினுடைய அணிசேராக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத, கம்யூனிசத்தை கடுமையாக விமர்சிக்கும் கட்சியாக, அரசாங்கமாக இருந்தது.
ஆரம்பத்தில் இலங்கை – ஐக்கிய நாடுகளில் இணைவதற்கான முயற்சியை அன்றைய சோவியத் ரஷ்யா வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி இடைமறித்ததற்கு இதுவும் ஒரு காரணம் எனப்படுகிறது.
(பின்னர் 1955-லே இலங்கை ஐ.நா.-வில் இணைந்து கொண்டது) இவ்வாறாக மேலைநாடுகள் சார்பாக இருந்த அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியை விழுத்தும் புதிய தந்திரோபாயத்தை 1952 தேர்தல் நிறைவுபெற்றவுடனேயே பண்டாரநாயக்க ஆரம்பித்துவிட்டார்.
1956இல் ஆட்சியைக் கைப்பற்ற எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க கையில் எடுத்த ஆயுதம் ‘சிங்கள-பௌத்த தேசியம்’.
எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க பொறுத்தவரையில் ‘சிங்கள-பௌத்த தேசியத்தை’ அவர் எப்போதோ கையிலெடுத்துவிட்டார். 1937இலேயே சிங்கள மகாசபையை பண்டாரநாயக்க உருவாக்கியிருந்தார்.
‘மேலைத்தேயம் சார்பான ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி பௌத்த கலாசாரத்தை சீரழிக்கிறது. இது ஒரு கிறிஸ்துவர்கள் சார்பான மேட்டுக்குடி ஆட்சி.
1948இல் இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது என்பதில் உண்மையில்லை என்று பொதுநலவாயத்திலிருந்து இலங்கை விலகுகிறதோ அன்றைக்குத்தான் இலங்கைக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கும்’ என தனது ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டார் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க.
இதனை ‘சுதேசியம்‘ என்பதாக பொருள்கோடல் செய்யும் அரசியல் ஆய்வாளர்களும் இருக்கிறார்கள். ஆனால், ஓர் இனத்தையும் மதத்தையும் மையப்படுத்திய தேசியம் எவ்வாறு ஒட்டுமொத்த நாட்டின் சுதேசியமாக இருக்க முடியும்? மாறாக அது பெரும்பான்மையின் தேசியமாக, குறுந் தேசியவாதமாகவே கருதப்படவேண்டியதாகிறது.
எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் தந்திரோபாயம் ‘மக்கள் ஐக்கிய முன்னணி‘ (மஹஜன எக்ஸத் பெரமுண) என்ற வடிவில் உருப்பெற்றது.
ஐக்கிய தேசியக் கட்சிக்கெதிராக இருந்தக் கட்சிகளை இந்த முன்னணியின் கீழ் ஒன்றிணைத்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க, இடதுசாரிக் கட்சிகளான லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுடன் போட்டியில்லா ஒப்பந்தம் ஒன்றையும் கைச்சாத்திட்டு, அவைகளைத் தோழமை ஆக்கிக்கொண்டார்.
எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் தேசிய மயமாக்கல் கொள்கை, தனியார்மயத்துக்கு எதிரான நிலைப்பாடு என்பனவே இந்தத் தோழமை சாத்தியமாகக் காரணமாயின.
வங்கிகள், பெருந்தோட்டங்கள், காப்புறுதி நிறுவனங்கள் என்பனவெல்லாம் தேசியமயமாக வேண்டும் என உரைத்த பண்டாரநாயக்க, வணிக மற்றும் வர்த்தகத்துறை சிங்களவர்களின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் எனவும் கூறினார்.
ஆனால், பின்னர் பண்டாரநாயக்க ‘தனிச் சிங்களச்’ சட்டத்தை நாடாளுமன்றத்தில் முன்வவைத்த போது அதனைக் கடுமையாக இந்த இடதுசாரிக் கட்சிகள் எதிர்த்தன என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
‘பஞ்ச மா பலவேகய’ (ஐம்பெரும் சக்திகள்) என்ற பெயரில் பௌத்த பிக்குகள், தொழிலாளர்கள், ஆயுர்வேத வைத்தியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள் ஆகியோரை ஒன்றிணைத்து தனது 1956ஆம் ஆண்டு வெற்றிக்கான பயணத்தை ஆரம்பித்தார் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க.
1948ஆம் ஆண்டு சுதந்திரத்துக்குப் பின் இலங்கையின் தேசிய மொழிகளாக சிங்களமும் தமிழும் இருக்கும் என நம்பப்பட்டன.
1949ஆம் ஆண்டு சுதந்திரதின விழாவில்கூட இரு மொழிகளிலும் தேசிய கீதம் பாடப்பட்டது. 1956 தேர்தலையொட்டி எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க தனது ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதக் கொள்கையைப் பலப்படுத்துவதற்காக சிங்கள மொழியை மட்டும் இலங்கையின் உத்தியோகபூர்வ மொழியாக பிரகடனம் செய்வேன் என சூளுரைத்தார்.
இலங்கை அரசியல் வரலாற்றை மாற்றிப் போட்ட புள்ளியாக எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் ‘தனிச் சிங்களச் சட்டம்’ அமைந்தது.
பண்டாரநாயக்கவின் புத்துணர்ச்சியுடன் எழுச்சிபெற்ற ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதமும், ‘பஞ்ச மா பலவேகய’வும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெரும் சவாலாக மாறியது.
அதுவும் தேர்தல் இடம்பெற்ற 1956ஆம் ஆண்டானது கௌதம புத்தர் பரிநிர்வாணம் அடைந்ததன் 2500ஆவது ஆண்டு நிறைவாகவும், விஜயன் இலங்கையில் காலடி எடுத்து வைத்ததன் 2500ஆவது ஆண்டு நிறைவாகவும் இருந்ததானதும் ‘சிங்கள-பௌத்த’ தேசியவாத உணர்ச்சிகளுக்கு இன்னும் உயிரூட்டுவதாகவும் அமைந்தது.
இந்நிலையில் இறுதி நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் ‘தனிச் சிங்களம்’ என்ற கொள்கையை தனது களனி மாநாட்டில் முன்னிறுத்தியது.
ஆனால், இந்த இறுதி நேர மாற்றம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பலனளிக்கவில்லை. பண்டாரநாயக்க தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 51 ஆசனங்களைப் பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு 8 ஆசனங்களே கிடைத்தன. இந்தத் தேர்தல் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் வெற்றிகரமான தேர்தலாக அமைந்தது. அதற்குக் காரணம் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதம்.
பண்டாரநாயக்கவினால் எழுச்சியுறச் செய்யப்பட்ட ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதம், ஐக்கிய தேசியக் கட்சி தனது சிங்கள மற்றும் தமிழ் ஆகிய இருமொழிக் கொள்கையினின்று விலகி பண்டாரநாயக்கவின் ‘தனிச் சிங்களக்’ கொள்கையை தானும் ஏற்றமை, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலத்தின் ஐக்கிய தேசியக் கட்சியுடனான இணக்க அரசியல் என்பனவெல்லாம் சேர்த்து தமிழ் மக்கள் இவற்றுக்கு மாற்றான தமிழ்த் தேசிய சக்தியாக, சா.ஜே.வே.செல்வநாயகம் தலைமையிலான இலங்கை தமிழரசுக் கட்சியைத் தெரிவு செய்வதற்கு ஏதுவான காரணிகளாக அமைந்தன.
1956ஆம் ஆண்டு தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி மிகப்பெரியதொரு வெற்றியை ஈட்டியது. 14 வேட்பாளர்கள் போட்டியிட்டு 10 பேர் வெற்றியீட்டினர்.
அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் சார்பில் ஜி.ஜி.பொன்னம்பலம் மட்டும் யாழ்ப்பாணம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வெற்றி ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதத்துக்கெதிரான தமிழ் மக்களது உரிமைக் குரலாகப் பார்க்கப்பட்டது.
சிங்கள மொழியை மட்டும் இலங்கையின் உத்தியோகபூர்வ மொழியாக மாற்றியமை இலங்கை அரசியல் வரலாற்றை புரட்டிப் போட்டதொரு நிகழ்வாகும்.
தனது தந்தையாரினுடைய ‘தனிச் சிங்களச்’ சட்டமே இந்தநாட்டின் இனப பிரச்சினையின் மூல காரணங்களுள் ஒன்று என 2011 ஜூலை 24ஆம் திகதி இடம்பெற்ற நீதியரசர் பாலகிட்ணர் நினைவுப் பேருரையில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் மகளுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டிருந்ததை நாம் இங்கு கவனத்திற்கொள்ள வேண்டும்.
அவர் மேலும், ‘தனிச் சிங்களச்’ சட்டம் 450 வருடங்களாக பாழ்பட்டிருந்த இலங்கைச் சுதேசியத்தைத் தட்டியெழுப்பியது.
ஆனால், அது ‘மற்றவர்களான’ தமிழர்கள், முஸ்லிம்கள், பறங்கியர், மலே ஆகியோரை அரவணைத்துச் செல்லத் தவறிவிட்டது, இதனால் அவர்களால் சம உரிமையுடன், கௌரவத்துடன், ஒரு தேசமாக வாழும் நிலை இல்லாது போய்விட்டது எனக் குறிப்பிட்டிருந்தார்.
1956ஆம் ஆண்டின் 33ஆம் இலக்க உத்தியோகபூர்வ மொழிச் சட்டம், சுருக்கமாக ‘தனிச் சிங்களச் சட்டம்’ இலங்கை இனப்பிரச்சினை வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாகும்.
இது சட்டமூலமாகப் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டபோது அங்கு எழுந்த வாதப்பிரதிவாதங்கள், அன்றைய தலைவர்கள் பதிவுசெய்த கருத்துக்கள், அது சட்டமாக நிறைவேற்றப்பட்டதன் பின்னான விளைவுகள் என்பவை விரிவாக அலசப்பட வேண்டியதாகும்.
-என்.கே.அஷோக்பரன் LLB (Hons)
இந்திய வம்சாவளி மக்களின் பிரஜாவுரிமை பறிபோனதற்கு ஜி.ஜி. ஆதரவளித்தாரா ? (பாகம்-1) (கட்டுரை)