கோவை: கோவை அருகே காவல்துறை சீருடையுடன் சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர், குடிபோதையில் பொதுமக்களை தாக்கி தகராறு செய்த காணொளி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவையை அடுத்த பேரூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றுபவர் மணிகண்டன். இவர், கடந்த திங்கட்கிழமை (30 ஆம் தேதி) இரவு பணியின்போது குடிபோதையில் இருந்துள்ளார்.

மேலும் போதை தலைக்கு ஏறிய நிலையில் மணிகண்டன், கோவை சிறுவாணி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது, இரவு 10.30 மணியளவில் காளம்பாளையம் என்ற பகுதியில் உள்ள கடைகளை அடைக்குமாறு உரிமையாளர்களிடம் மணிகண்டன் தகாத வார்த்தைகளினால் திட்டி தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இதன் உச்சமாக, உணவகம், பெட்டிக் கடை உரிமையாளர்கள் இருவரை சிறப்பு உதவி ஆய்வாளர் மணிகண்டன் கடுமையாக தாக்கியதில், ஒருவரது கையில் காயம் ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, மாதம்பட்டி பகுதியிலும் பேக்கரி உரிமையாளரிடம் மணிகண்டன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, குடிபோதையில் தகராறு செய்து தடுமாறியபடி ரோந்து பணியில் ஈடுபட்ட சிறப்பு உதவி ஆய்வாளரை சுற்றி வளைத்த பொதுமக்கள், வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக பேரூர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர்.

இதையடுத்து, உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறை அதிகாரிகள், சிறப்பு உதவி ஆய்வாளர் மணிகண்டன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து பொதுமக்களிடம் இருந்து மீட்டு சென்றுள்ளனர்.

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பெண்கள் மது குடித்துவிட்டு தகராறு செய்வது போன்ற காட்சிகள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், காவல்துறை அதிகாரி ஒருவரே குடி போதையில் பொதுமக்களிடம் தகராறு செய்யும் காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் குடிபோதையில் தகராறு செய்த தலைமை காவலர் ஆனந்தகுமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ள நிலையில், மணிகண்டன் மீதும் காவல்துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

– ச.ஜெ.ரவி

Share.
Leave A Reply

Exit mobile version