ஜெருசலேம்: இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடிய 11 வயது பாலஸ்தீன சிறுவனை வெறித்தனமாக இஸ்ரேல் வீரர் ஒருவர் கைது செய்யும் வீடியோ காட்சி உலகை உலுக்கி வருகிறது.
இஸ்ரேல்- காசா எல்லைப்பகுதியின் அருகாமையில் உள்ள மேற்கு கரையில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராக கடந்த 28-ந் தேதியன்று போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், சிறுவர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் மிகவும் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியது.
இதில் 11 வயது பாலஸ்தீன சிறுவனை குறிவைத்து கைது செய்வதற்காக மலைப்பகுதியில் விரட்டிக் கொண்டு ஓடுகிறார்.
இடது கை உடைபட்டு கட்டுடன் கழுத்தில் தொங்கிய நிலையில் ஓடும் அந்த சிறுவனை முகமூடி அணிந்திருக்கும் இஸ்ரேல் ராணுவ வீரர் பாறைகளுக்கு இடையே இடத்தில் மடக்கிப் பிடிக்கிறார்.
அவரிடம் இருந்து திமிறியபடி தப்பிச்செல்ல முயற்சிக்கும் சிறுவனின் கழுத்தை தனது இரு முழங்கைகளால் நசுக்கி அவனை மூச்சுத்திணற வைக்க அவர் முயல்வதைக் கண்டு சிறுவனின் தாயும், சகோதரியும், உறவினர்களும் பதறியபடி ஓடி வருகின்றனர்.
அவன் சின்னப் பையன். ஒருகை வேறு உடைந்திருக்கிறது, அவனை விட்டு விடுங்கள் என அவர்கள் கதறுவதை பொருட்படுத்தாத அந்த ராணுவ வீரர், சிறுவனிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்வதை கண்ட அவனது சகோதரி, இஸ்ரேல் ராணுவ வீரரின் கையை கடித்து விடுகிறார்.
பின்னர் அவரை சுற்றிவளைக்கும் குடும்பத்தினர் சிறுவனை அந்த இஸ்ரேல் வீரரிடம் இருந்து பலவந்தமாக மீட்கின்றனர். இதனால் விரக்தி அடைந்த அந்த வீரர் வெறுப்புடன் ஒரு கையெறி குண்டை அவர் வீசிவிட்டுச் செல்கிறார்..
இந்த வீடியோதான் இப்போது உலகை அதிர வைத்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலரும், பாதிக்கப்பட்ட சிறுவனின் உறவினருமான பிலால் தமிமி என்பவர்தான் இந்த வீடியோவாக உலகின் பார்வைக்குக் கொண்டு வந்துள்ளார்.
இந்த வீடியோவை ராய்ட்டர்ஸ் நிறுவனம் யூ டியூப் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் ராணுவ வீரர்களின் கோர முகத்தைக் கண்டு உலகம் அதிர்ந்து போய் நிற்கிறது..
மேலும் செய்திகளை பார்வையிட: https://www.facebook.com/ilakkiyainfo