துருக்கியிலிருந்து கிரேக்கத்துக்கு சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற படகில் பயணித்து கடலில் மூழ்கி உயிரிழந்த சிரிய குர்திஷ் இனத்தைச் சேர்ந்த 3 வயது சிறுவன் அயிலனின் புகைப்படங்கள் வெளியாகி உலகளாவிய ரீதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்,
அவனது தந்தை அந்த சிறுவனின் சடலத்தையும் அவனுடன் நீரில் மூழ்கி உயிரிழந்த அவனது சகோதரன் மற்றும் தாயின் சடலங்களையும் நல்லடக்கம் செய்வதற்காக சிரிய கோபேன் நகருக்கு வெள்ளிக்கிழமை திரும்பியிருந்தார்.
இந்நிலையில் இறந்த சிறுவனான அயிலனின் அத்தையான கனடாவில் வசிக்கும் தீமா குர்தி கூறுகையில், அயிலனின் குடும்பத்தினர் கனடாவில் புகலிடம் கோரியிருந்ததாகவும் ஆனால் கனேடிய அரசாங்கம் அவர்களது புகலிடக்கோரிக்கையை நிராகரித்தமை காரணமாகவே அவர்கள் இந்த ஆபத்து மிக்க படகுப் பயணத்தை மேற்கொள்ளும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளானதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவரது குற்றச்சாட்டிற்கு கனடா மறுப்புத் தெரிவித்துள்ளது.
அவ்வாறான புகலிடக்கோரிக்கை விண்ணப்பம் எதுவும் கடலில் மூழ்கிப் பலியான சிறுவனின் தந்தை அப்துல்லாஹ் குர்தியால் சமர்ப்பிக்கப்படவில்லை என கனேடிய குடிவரவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
அப்துல்லாஹ் குர்தியின் சகோதரனால் அந்த விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததால் அதனை தாம் நிராகரிக்க நேர்ந்ததாக அவர்கள் கூறுகின்றனர்.
இது தொடர்பில் தீமா குர்தி கூறுகையில், அப்துல்லாஹ் குர்திக்கான புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டதையடுத்து, தாம் அவரைத் தமது ஏற்பாதரவில் கனடாவுக்கு வரவ.ழைக்கத் திட்டமிட்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.
“நேர்மையுடன் நான் கூறுவது என்னவென்றால், நான் இந்த சம்பவத்துக்கு கனேடிய அரசாங்கத்தை மட்டும் குற்றஞ்சாட்டவில்லை. முழு உலகையுமே குற்றஞ்சாட்டுகிறேன்” என அவர் தெரிவித்தார்.
கனேடிய அரசாங்கத்துக்கு நெருக்கடி
அகதிகளை ஏற்றுக்கொள்ளாமை குறித்து கனேடிய பழைமைவாத கட்சியைச் சேர்ந்த பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் எதிர்க்கட்சியினரின் கடும் கண்டனத்துக்குள்ளாகியுள்ளார்.
கனேடிய அதிகாரிகள் 25,000 சிரிய அகதிகளை நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதிக்க வேண்டும் என அந்நாட்டு எதிர்க்கட்சியான லிபரல் கட்சியின் தலைவர் ஜஸ்டின் திருடியு வலியுறுத்தியுள்ளார்.
மேற்படி விவகாரத்தால் கனேடிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் அலெக்ஸாண்டர், எதிர்வரும் ஒக்டோபர் மாத தேர்தலில் மீளப் போட்டியிடுவதற்கான தனது பிரசார நடவடிக்கையை பகுதியாக இரத்துச் செய்யத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பலியான சிறுவனின் தந்தை அதிரச்சியில்..
கடலில் மூழ்கிப் பலியான சிறுவனான அயிலனின் தந்தை அப்துல்லாஹ் குர்தி, தனது குடும்பத்தினர் அனைவரையும் படகு அனர்த்தத்தில் பறிகொடுத்தமை தொடர்பில் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது.
தனது மனைவியான ரெஹான், மகன்களான அயிலன் மற்றும் காலிப் (5 வயது) ஆகியோரின் சடலங்கள் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டிகள் சகிதம் காரொன்றில் அப்துல்லாஹ் குர்தி கோபேன் நகருக்குள் பிரவேசித்த போது, அவருடன் பயணத்தை மேற்கொண்டிருந்த ஊடகவியலாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கு அந்நகருக்குள் பிரவேசிக்க அனுமதியளிக்கப்படவில்லை.
அப்துல்லாஹ் குர்தி கோபேன் நகருக்குள் பயணத்தைத் தொடர ஏனையவர்கள் நகர எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டார்கள்.
உலகின் மிகவும் அழகான சிறுவர்கள்
அப்துல்லாஹ் குர்தி கோபேன் நகருக்கு செல்வதற்கு முன் ஊடகவியலாளர்களுக்கு அளித்த பேட்டியில், தாம் துருக்கியை விட்டுப் புறப்பட்டு சிறிது நேரத்தில் தாம் பயணித்த படகு விபத்துக்குள்ளானதாகவும் இதன்போது தனது மனைவியையும் இரு பிள்ளைகளையும் காப்பாற்றத் தான் மேற்கொண்ட முயற்சி தோல்வியைத்தழுவியிருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
“எனது பிள்ளைகள் உலகில் மிகவும் அழகான பிள்ளைகள். உலகில் ஒருவருக்கு தனது பிள்ளைகளை விடவும் மிகவும் பெறுமதியான ஏதாவது உள்ளதா?” என அவர் இதன்போது கேள்வியெழுப்பியிருந்தார்.
படகுப் பயணத்தை விரும்பாத சிறுவனின் தாய்
மேற்படி படகுப் பயணத்தின் போது உயிரிழந்த அயிலனின் தாயாரான ரெஹான், தனக்கு நீச்சல் தெரியாது என்பதால் அளவுக்கதிகமான குடியேற்றவாசிகளை ஏற்றிச் செல்லும் படகில் பயணத்தை மேற்கொள்ள அஞ்சுவதாக கூறியதாக தீமா குர்தி தெரிவித்துள்ளார்.
தொலைபேசி மூலம் .தன்னைத் தொடர்பு கொண்டு உரையாடிய வேளையிலேயே ரெஹான் இவ்வாறு தெரிவித்திருந்ததாக அவர் கூறினார்.
ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுபற்கள் பிடுங்கப்பட்ட கொடூரம்
அயிலனின் தந்தையான அப்துல்லாஹ் குர்தி கடந்த வருடம் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதாகவும் அதன்போது அவருடைய பற்கள் அனைத்தையும் பிடுங்கி தீவிரவாதிகள் அவரைச் சித்திரவதை செய்திருந்ததாகவும் தீமா குர்தி கூறியதாக கனேடிய ஊடகவியலாளரான தெர்றி கிளேவின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தீவிரவாதிகளிடமிருந்து ஒருவாறாகத் தப்பி தனது குடும்பத்தினருடன் இணைந்து கொண்ட அவர், பின்னர் எல்லையைக் கடந்து துருக்கிக்குள் பிரவேசித்ததாக கூறப்படுகிறது.
அதன் பின் அவர்களுக்கு அந்நாட்டிலிருந்து வெளியேறுவதற்கான விசா வழங்கப்படாததால் அவர்கள் படகுப் பயணத்தை மேற்கொள்ளும் முடிவுக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.