அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச பிரதமராக அதிகாரத்துக்கு வந்திருப்பாரேயானால், சிறிலங்காவில் பாரியளவில் அப்பாவிகள் கொலை செய்யப்பட்டிருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க.
புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், செய்தியாளர்களிடம் இன்று கருத்து வெளியிட்ட போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“மகிந்த ராஜபக்ச அதிபராக இருந்த போது காவல்துறை ஆட்சியையே நடத்தியிருந்தார்.

அவர் அண்மைய நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக அதிகாரத்துக்கு வந்திருந்தால், பாரியளவில் அப்பாவிகள் கொல்லப்பட்டிருப்பார்கள்.

அவர் மீண்டும் அதிகாரத்துக்கு வரும் கனவுக்கு, சிங்களவர்களும், தமிழர்களும் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

தனக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு அழுத்தங்களில் இருந்து விடுபடுவதற்காகவே, அவர் மீண்டும் அதிகாரத்துக்கு வர முயன்றார். அதுவே அவரது முதல் நோக்கம்.

சிறிலங்காவுக்கு இந்தியா மிகவும் சிறப்பானது. எமக்கு இந்தியாவின் ஆதரவு தேவை. தெற்காசியாவில் இந்தியாவின் பங்கு, பூகோள ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதன் கேந்திர முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட முடியாது.

சீனாவின் முதலீட்டில் மேற்கொள்ளப்படும் திட்டங்களால் சிறிலங்காவின் கடன் பெருகிவிட்டது. ராஜபக்ச ஆட்சியினருக்கு கொடுக்கப்பட்ட தரகுப் பணத்தினால் அந்த திட்டங்களுக்கான செலவு அதிகரித்து விட்டது.

சுதந்திரக் கட்சியின் தலைவர்கள் அமைச்சர்கள் எவரையும் என்னைச் சந்திக்க மகிந்த அனுமதிக்கவில்லை. ஆனால் சுதந்திரக் கட்சியில் மாற்றுத் தலைவருக்கான தேவை எழுந்தது. நான் சுதந்திரக் கட்சித் தலைமைக்குள் கறைபடியாதவரான மைத்திரிபால சிறிசேனவை தேர்வு செய்தேன்.

எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவுடன் தொடர்பு கொண்டு, பொது எதிரிக்கு எதிராகச் செயற்பட வேண்டியுள்ளதை எடுத்துரைத்தேன்.

தமிழர்களிடம் நிலங்களை மீள ஒப்படைத்தல், காணாமற்போனோர் விவகாரத்துக்கு தீர்வு காணல், அதிகாரப்பகிர்வு போன்ற விடயங்களில் நாம் பணியாற்றுகின்றோம்.

இந்த செயல்முறையில் இந்தியாவும் பங்காற்றும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version