அண்மையில் இலங்கைக்கு வந்திருந்த, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் நிஷா பிஸ்வாலும் ஜனநாயகம், மனித உரிமைகள், தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கியும் போர்க்குற்ற விசாரணையின் அடுத்த கட்டம் எவ்வாறு அமையக் கூடும் என்பதை குறிப்பால் உணர்த்தி விட்டுச் சென்றிருக்கின்றனர்.
அரசாங்கத்தரப்பு மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிவில் சமூகம் போன்றவற்றுடன் அவர்கள், நடத்திய பேச்சுக்களின் போது, போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக உள்நாட்டு விசாரணை நடத்த இணக்கம் வெளியிட்டுள்ள புதிய அரசாங்கத்துக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்கப் போவதாக குறிப்பிட்டுள்ளனர்.
ஐ.நா விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், வரும் ஜெனீவா கூட்டத்தொடரில், இலங்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் தீர்மானம் ஒன்றை அமெரிக்கா தனது தோழமை நாடுகளுடன் இணைந்து கொண்டு வரும் என்பதையும் அவர்கள் எடுத்துக் கூறியிருக்கின்றனர்.
இதன் ஊடாக, அவர்கள் சொல்ல வந்த விடயம், போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக உள்நாட்டு விசாரணையே நடத்தப்படும், சர்வதேச விசாரணைக்கு இடமிருக்காது என்பதை தான். இது, ஐ.நா விசாரணை அறிக்கையை எதிர்பார்த்திருந்த தமிழ்மக்களுக்கு அதிர்ச்சியை- ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்த போதும், நிஷா பிஸ்வால் இதனைத் தான் கூறியிருந்தார்.
போர்க்குற்றச்சாட்டுகள் குறித்த உள்நாட்டு விசாரணைகளில் நம்பிக்கையில்லை என்றும், சர்வதேச விசாரணையே தேவை என்றும் அந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தி இருந்தது.
ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்தை, அமெரிக்க உயர்மட்டம் இப்போதைய சூழ்நிலையில் கருத்தில் எடுத்துக் கொள்ளும் நிலையில் இல்லை.
இதனை சந்திப்பில் பங்கேற்றிருந்த கூட்டமைப்பின் பிரதிநிதிகளால் முழுமையாக உணர முடிந்தது, ஆனால் அவர்களால் எடுத்த எடுப்பிலேயே அதிருப்தியையோ, எதிர்ப்பையோ வெளியிட முடியவில்லை.
அத்தகைய எதிர்ப்பு இராஜதந்திர ரீதியாக தமிழர் தரப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என அவர்கள் கருதியிருக்கலாம்.
அதேவேளை, நிஷா பிஸ்வாலுடனான சந்திப்பில் பங்கேற்றிருந்த வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கடந்த செவ்வாய்க்கிழமை, , உள்நாட்டு விசாரணையில் நம்பிக்கையில்லை என்றும் சர்வதேச விசாரணைப் பொறிமுறையே அவசியம் என்பதையும் வலியுறுத்தும் தீர்மானத்தை வடக்கு மாகாணசபையில் முன்மொழிந்து நிறைவேற்றியிருக்கிறார்.
இன்னொரு பகக்கத்தில், சர்வதேச விசாரணையை வலியுறுத்தி, வரும் நாட்களில் இலங்கையிலும் புலம்பெயர் தேசங்களிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அறிய முடிகிறது.
இந்தப் போராட்டங்களின் மூலம், சர்வதேச விசாரணையை அதுகுறித்த தமிழர் தரப்பின் எதிர்பார்ப்பை வெளிப்படுத்த முடியும். உள்நாட்டு விசாரணைகளின் மீதான நம்பிக்கையீனத்தை வெளிப்படுத்த முடியும்.
அதற்கு அப்பால், இத்தகைய போராட்டங்களின் மூலம் எதனைச் சாதிக்க முடியும் என்ற கேள்வி இருக்கிறது.
ஏனென்றால், ஐ.நா விசாரணை அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்னரே, அதன் உள்ளடக்கம் பகிரங்கப்படுத்தப்படுவதற்கு முன்னரே, நம்பகமான உள்நாட்டு விசாரணைக்கு ஆதரவளிக்கும் முடிவை அமெரிக்கா எடுத்து விட்டது.
அதேவேளை, அமெரிக்காவின் இந்த நிலைப்பாடு புதியதொன்று எனக் கருதவும் முடியாது. நம்பகமான உள்நாட்டு விசாரணைக்கு ஊக்கமளிப்பதாகவே அமெரிக்கா கொண்டு வந்த மூன்று தீர்மானங்களிலும் பிரதானமாக வலியுறுத்தப்பட்டிருந்தது என்பதை மறந்து விடலாகாது.
சர்வதேச விசாரணைப் பொறிமுறையை ஏற்படுத்துவதில் உள்ள சிக்கலான நிலையைக் கருத்திற் கொண்டு- அமெரிக்கா உள்நாட்டு விசாரணைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது என்று கருதக் கூடாது.
அதுபோலவே, பார்க்குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூற வைப்பது மட்டும் தான், அமெரிக்காவின் இலக்காக இருந்தது என்றும் தவறாக கணித்து விடக் கூடாது.
அவற்றுக்கு அப்பால் அமெரிக்கா தனது நலன்களை அடைவதற்கான ஒரு கருவியாகவும் இந்த விவகாரத்தைப் பயன்படுத்தி வந்தது என்பதையும் நாம் மறந்து விடலாகாது.
இலங்கையில் அமெரிக்காவுக்கு சில பூகோள நலன்கள் உள்ளன.
அவற்றுக்கு அமைவாகத் தான் இலங்கை தொடர்பான கொள்கைகளில் அமெரிக்கா தீர்மானங்களை எடுக்கிறதே தவிர, தமிழர்களினதோ அல்லது கொழும்பில் அதிகாரத்தில் உள்ள ஆட்சியாளர்களினதோ கருத்துகள், விருப்பங்களைக் கொண்டு அது முடிவுகளை எடுப்பதில்லை.
அமெரிக்கா நினைத்திருந்தால், 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரை தடுத்து நிறுத்தியிருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யவில்லை.
எனினும், போரை நிறுத்த முயற்சிப்பது போலக் காட்டிக்கொண்டது. புலிகளைக் காப்பாற்ற விரும்புவது போன்றும் காட்டிக்கொண்டது.
ஆனால், விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்படுவதை, அமெரிக்கா விரும்பியது. அதற்காக, இறுதிப்போரில் பொதுமக்கள் பாதிக்கப்பட்ட போது அதைக் கண்டுகொள்ளவில்லை.
போர் முடிந்த பின்னர், மீறல்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டும் என்று மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கியது அமெரிக்கா.
அதற்குக் காரணம், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி, நியாயம் கிடைக்க வேண்டும், இலங்கையில் நிலையான அமைதி ஏற்பட வேண்டும் என்பது மட்டுமல்ல.
ஆனால், கடந்த ஜனவரியிலும் கடந்த மாதமும் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்கள், அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன.
காரணம், தனது நலன்களை பாதுகாக்கத்தக்க அரசாங்கம் ஒன்று அமைந்துள்ள நிலையில், அதற்கு ஆதரவாக நிற்பதே புத்திசாலித்தனமானது என்று கருதுகிறது அமெரிக்கா.
என்னதான் இருந்தாலும், ரணில் தலைமையிலான அரசாங்கம், வலுவான ஒன்று அல்ல என்ற நிலையில், மஹிந்தவுக்கு கொடுத்தது போன்று கடுமையான அழுத்தங்களைக் கொடுத்து, சர்வதேச விசாரணைக்கு இழுத்துச் சென்றால், மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவை பலப்படுத்துவதாக அமைந்து விடும்.
எனவே, சர்வதேச விசாரணை என்று ரணில் அரசாங்கத்தைப் பலவீனப்படுத்த முனையாமல், அதற்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக, உள்நாட்டு விசாரணைக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளது அமெரிக்கா.
அதற்காக, பொறுப்புக்கூறலை தனது நலன்களுக்கான ஒரு கருவியாக கையில் எடுத்துக் கொண்ட அமெரிக்கா, முற்றுமுழுதாகத் தமிழர்களின் நலன்கள், எதிர்பார்ப்புகளைக் குழிதோண்டிப் புதைத்து விடும் என்றும் அவசரப்பட்டு கணக்குப் போட்டு விடக்கூடாது.
எனவே, இப்போதைய நிலையில், தமிழர்களைத் தூக்கி வீசிவிட்டுச் செல்லும் என்று எதிர்பார்க்க முடியவில்லை.
அவ்வாறானதொரு முடிவை அமெரிக்கா எடுத்திருந்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்புக்கு நிஷா பிஸ்வால் முக்கியத்துவம் அளித்திருக்கமாட்டார்.
முன்னர், கூட்டமைப்புடனான சந்திப்புக்கு முதலிடம் கொடுத்து வந்த அமெரிக்கா இப்போது கடைசி இடத்தைக் கொடுத்திருக்கிறது.
ஆனாலும், ஒரேயடியாக கைகழுவி விடவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனென்றால், இலங்கையில் தனது நலன்களுக்கு பாதிப்பு ஏற்படத்தக்க சூழல் ஒன்று தோன்றினால், மீண்டும் அவர்கள் தேவைப்படுவார்கள்.
உள்நாட்டு விசாரணைகளின் மூலம் பொறுப்புக்கூறல் நம்பகமாக மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்கா உறுதியாக நம்புகிறது என்று கருத முடியவில்லை. ஏனென்றால் ரொம் மாலினோவ்ஸ்கி இதுபற்றிக் கூறியிருப்பது கவனிக்க வைக்கிறது.
இலங்கையின் வாக்குறுதிகளை மட்டும் வைத்து முடிவுகளை எடுக்கமாட்டோம், அதன் செயற்பாடுகள் மற்றும் அடைவுகளை வைத்தே முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.
அதாவது உள்நாட்டு விசாரணை பற்றிய வாக்குறுதிகளுக்கு அப்பால், அதுபற்றிய செயற்திறனுக்கு சர்வதேச சமூகம் முக்கியத்துவம் அளிக்கும் போலத் தெரிகிறது.
சர்வதேச விசாரணைக்கு இணங்காது போனாலும், உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையைக் கண்காணிக்கும் வெளிநாட்டு பொறிமுறை ஒன்றுக்கான சாத்தியங்களும் இருப்பதாகவே தெரிகிறது.
இத்தகைய வாக்குறுதிகளை அரசாங்கம் எந்தளவுக்கு நிறைவேற்றும் என்பது கேள்விக்குரிய விடயம்.
பாதிக்கப்பட்ட தமிழர்களையும், சர்வதேச சமூகத்தையும் திருப்திப்படுத்துகின்ற அளவுக்கு உள்நாட்டு விசாரணைகளை முன்னெடுப்பது மிகக்கடினமான காரியம் என்பது அரசாங்கத்துக்குத் தெரியும்.
இருதரப்புகளையும் திருப்திப்படுத்த முடியாத ஒரு விசாரணையின் விளைவு, எத்தகையதாக இருக்கும் என்பதையும் அரசாங்கம் அறியும்.
தமிழர் தரப்பைப் பொறுத்தவரையில், சர்வதேச சமூகத்தின் தற்போதைய நகர்வுகளின் போக்கை எவ்வாறு கையாளப் போகின்றது என்ற கேள்வி இருக்கிறது.
ஒரேயடியாக உள்நாட்டு விசாரணையை நிராகரித்து, அதற்கு ஒத்துழைக்காமல் ஒதுங்கி நிற்கும் ஒரு தெரிவு இருக்கிறது.
அல்லது, உள்நாட்டு விசாரணை மீது நம்பிக்கையில்லை என்றாலும், சற்றுப் பொறுத்திருந்து நகர்வுகளை முன்னெடுக்கலாம் என்று காத்திருக்கும் ஒரு தெரிவும் இருக்கிறது.
நம்பிக்கையிருந்தாலென்ன இல்லாவிட்டாலென்ன, உள்நாட்டு விசாரணையுடன் இணங்கிச் செல்வோம் என்ற மற்றொரு தெரிவும் உள்ளது.
இதில் எந்த முடிவை எடுப்பதாயினும், களத்திலும், புலத்திலும் உள்ள தமிழர்கள் ஒன்றுபட்டு எடுக்க வேண்டும், ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.
மாறாக முரண்பட்ட முடிவை எடுக்க முனைந்தால், அது இலங்கை அரசாங்கத்துக்கும், அதனைக் காப்பாற்ற முனையும், சர்வதேச சக்திகளுக்கும் தான் வாய்ப்பாக அமையும்.
-கே.சஞ்சயன்