வேலூர்: பொதுமக்கள் மத்தியில் அடித்துக் கொல்லப்பட்ட  வேலூர் ரவுடி மகாவை, செண்பகவள்ளி என்ற பெண் காதலித்துள்ளார் என்பதும், காதலுக்காக போலீசாரையே உளவு பார்த்தார் என்ற தகவலும் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

வேலூர் மாநகராட்சி முன்னாள் கவுன்சிலரும், அதிமுக பிரமுகருமான ஜி.ஜி.ரவி, வேலூர் தோட்டப்பாளையம் திரௌபதியம்மன் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, கடந்த 5 ஆம் தேதி வந்தார்.

அப்போது அவரை வேலூர் ரவுடி ‘அதிரடி’ மகா′ என்ற மகாலிங்கம், வெட்டிக் கொலை செய்ய முயன்றான். ஆனால் அதிர்ஷ்டவசமாக ஜி.ஜி.ரவி காயத்தோடு உயிர் தப்பினார்.

ஆத்திரம் அடைந்த ஜி.ஜி. ரவியின் ஆதரவாளர்கள் மகாவையும், அவருடன் வந்த கூட்டாளிகளான குப்பன், உள்ளிட்டோரையும் துரத்திச் சென்றனர்.

06-1441537487-murder-rowdy-velloreஇதில் ரவுடி மகா சிக்கிக்கொண்டான். அவரை அடித்துக் கொலை செய்தனர். மற்ற 2 பேரும் தப்பிச் சென்று விட்டனர்.

இந்த கொலை தொடர்பாக வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜி.ஜி.ரவியின் மகன்கள் கோகுல், தமிழ்மணி, உள்பட 6 பேரை கைது செய்தனர்.

மேலும் ஜி.ஜி.ரவியை கொலை செய்ய மகாவுடன் வந்த அவனின் கூட்டாளிகளான குப்பன் மற்றும் ஒரு வாலிபர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று, அதிரடி மகாவின் கூட்டாளிகளான வேலூர் தோட்டப்பாளையத்தை சேர்ந்த குப்பன் , கன்னியாகுமரி மாவட்டம் வேட்டமங்களம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையில், அதிரடி மகா கொலை செய்யப்பட்ட பகுதியில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் கேட்பாரற்று ஒரு மோட்டார் சைக்கிள் இருந்தது. அதை போலீசார் கைப்பற்றி, வண்டியின் பதிவு எண் மூலம் விசாரணை நடத்தினர்.

அந்த மோட்டார் சைக்கிள், வேலூர் அல்லாபுரத்தை சேர்ந்த அனந்தநாராயணன் என்பவருக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் அனந்த நாராயணனை மடக்கி பிடித்து, ரகசிய இடத்தில் விசாரணை நடத்தினர். அப்போது, அனந்த நாராயணன் தனது பக்கத்து வீட்டைச் சேர்ந்த செண்பகவள்ளி என்பவர் கூறியதால்தான் மகா கும்பலுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கியதாகத் தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் செண்பகவள்ளியைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது, செண்பகவள்ளி அணைக்கட்டைச் சேர்ந்தவர் என்பதும், இவர் வேலூர் அண்ணாநகரில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்ததும், அதிரடி மகாவும், இவரும் காதலித்து வந்ததும் தெரியவந்தது.

மேலும் ஜாமீனில் வெளியே வந்த மகா, தலைமறைவான பின்னர் தனது கூட்டாளிகளான குப்பன், சுரேஷ் ஆகியோருடன் செண்பகவள்ளியின் வீட்டில் கடந்த 3 மாதங்களாக தங்கியிருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து குப்பன், சுரேஷ், அனந்தநாராயணன், செண்பகவள்ளி ஆகியோரிடம் தனித்தனியே போலீசார் விசாரணை நடத்தினர்.

பின்னர் அவர்கள் 4 பேரையும் கைது செய்து நேற்று இரவு வேலூர் மாஜிஸ்திரேட் ரேவதி முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

செண்பகவள்ளி தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக மகா மீது ஆசை கொண்டு காதலித்துள்ளது தெரியவந்துள்ளது.

வேலூரை அடுத்த அணைக்கட்டு ஊனை வாணியம்பாடியை சேர்ந்தவர் செண்பகவள்ளி. இவருக்கு கடந்த 2004 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் திருமணமானது.

கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். இதனால் செண்பகவள்ளி தனிமையில் வசித்தார்.

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த ரவுடி சரவணன் என்பவருடன் செண்பகவள்ளியின் தோழி ஒருவருக்கு பழக்கம் இருந்தது. தோழியுடன் ஓமலூர் சரவணனைச் சந்திக்க சென்றுள்ளார்.

அப்போது அங்கு வேலூரை சேர்ந்த ரவுடி மகா அடைக்கப்பட்டிருந்தான். ஏற்கெனவே மகா பற்றி அறிந்திருந்த செண்பகவள்ளி, அவர் மீது ஆசை கொண்டார். மேலும் மகா தன்னுடன் இருந்தால் பாதுகாப்பாக இருக்கலாம் என நினைத்தார்.

சரவணன் மூலம் மகாவை சந்திக்க ஏற்பாடு செய்தார். சேலம் ஜெயிலில் மனு கொடுத்து முதன் முறையாக மகாவை, செண்பகவள்ளி சந்தித்தார். முதல் சந்திப்பில் இருவரும் மனம்விட்டு காதலை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

மகா ஜாமீனில் வெளியே வர, செண்பகவள்ளி உடந்தையாக இருந்தார். மகா வெளியே வந்ததும், வேலூர் அண்ணாநகரில் செண்பகவள்ளி தங்கியிருந்த வீட்டில் தங்கினான்.

ரவுடி மகா, அண்ணாநகரில் தங்கியிருந்தது யாருக்கும் தெரியவில்லை. அவர்கள் பகல் நேரங்களில் வெளியே வருவது கிடையாது.

செண்பகவள்ளி வேலூர் டி.எஸ்.பி. அலுவலகத்துக்கு அடிக்கடி செல்வார். தான் மகாவின் மனைவி என்றும், அவரை பற்றி தகவல் தெரிந்தால் கூறுங்கள் என்றும் சொல்லி, மகா மீது போலீசாரின் பார்வை எந்த அளவுக்கு உள்ளது என்பது குறித்து உளவு பார்த்துள்ளார் என்ற தகவல் அறிந்து போலீசார் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

அதிமுக பிரமுகர் ஆதரவாளர்களின் கொலை வெறி.. ரவுடியை கொடூரமாக கொன்றதால் பரபரப்பு

Share.
Leave A Reply

Exit mobile version