தாஜுதீனின் தொலைபேசி ‘மெமரி’யில் உள்ள படங்கள், ஓடியோ, வீடியோக்கள் குறுந் செய்திகள் தொலைபேசி எண்கள் ஒரே சீடியில் டொயாடோ லங்கா நிறுவனம் சமர்ப்பித்த விசாரணை அறிக்கை
வஸீம் தாஜுதீன். மூன்று வருடங்களின் பின்னர் நாளுக்கு நாள் முன்னேற்றகரமான விசாரணை பாதை ஒன்றில் பயணித்துக்கொண்டிருக்கும் தீர்க்கப்படவேண்டிய, எதிர்பார்ப்பு மிக்க ஒரு மர்மத்தின் சுருக்கமே அது.
சென். தோமஸ் கல்லூரியில் தனது கல்வியை ஆரம்பித்த வஸீம் தாய் தந்தையுடன் ஒரு சகோதரர் ஒரு சகோதரி என சிறிய அழகிய குடும்பத்தின் கடைக் குட்டி.
ஆரம்ப கல்வியின் பின்னர் கல்கிஸை சென். தோமஸ் கல்லூரியில் கல்வியை தொடர்ந்த வஸீம் சென்.தோமஸ் கல்லூரியின் றக்பி அணியின் உப தலைவராக 2003 ஆம் ஆண்டு காலப்பகுதியில் விளையாடியவர்.
அத்துடன் 19 வயதுக்கு கீழ்ப்பட்டோருக்கான பாடசாலை அணியில் அதே ஆண்டு விளையாடியவர். இவற்றுடன் அவர் இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடியவர்.
அத்துடன் 2008 ஆம் ஆண்டு ஹொங்கொங் செவன் றக்பி அணிக்காகவும் விளையாடியவர். இந் நிலையிலேயே அவர் 2008 ஆம் ஆண்டில் ‘ஜனரஞ்சகமான றக்பி வீரர்’ என்ற விருதை வெற்றிகொண்டிருந்தார்.
இந் நிலையில் ஹெவலொக் கழக அணியின் தலைவராக 2009 ஆம் ஆண்டு தெரிவானார். அதன் பின்னர் தாஜுதீன் காயத்துக்கு உள்ளாகினார்.
இதனால் அவரின் காலில் சத்திர சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதனால் அவர் மீண்டும் 2012 ஆம் ஆண்டே றக்பி களத்துக்கு வந்தார்.
இந் நிலையில்தான் கடந்த 2012, ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி நாரஹேன்பிட்டி பார்க் வீதியில் சாலிகா மைதானத்தின் மதிலில் மோதுண்ட நிலையில் எரிந்துகொண்டிருந்த காரில் இருந்து வஸீம் சடலமாக மீட்கப்பட்டார். இது தான் வஸீமின் வாழ்க்கைச் சுருக்கம்.
இந் நிலையில் வஸீமின் மரணத்தின் மர்மம் குறித்து பேசுவது இன்று நேற்று ஆரம்பித்த விடயமல்ல. மாற்றமாக வஸீமின் சடலம் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட 2012 மே மாதம், 17 ஆம் திகதியின் பின்னர் கிருலப்பனையின் ரொபர்ட் குணவர்தன மாவத்தையில் இருந்து வஸீமின் பணப் பை நபர் ஒருவரால் கண்டெடுக்கப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
நாரஹேன்பிட்டியில் சடலமாக இருந்தவரின் பணப்பை மட்டும் கிருலப்பனைக்கு எப்படி சென்றது என ஆரம்பித்த சம்பவம் பல்வேறு கேள்விகளை தொடுத்த வண்ணம் தீர்க்கப்படாது தொடர்ந்தது.
இந்நிலையில் தான் கடந்த ஆட்சி மாற்றத்தின் பின்னர் தீர்வு காணப்படாத அல்லது சரியாக விசாரணைக்குட்படுத்தாத பல்வேறு சம்பவங்கள் தொடர்பில் அவதானம் செலுத்திய பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோன், இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை செய்யும் பொறுப்பை குற்றப் புலனாய்வுப் பிரிவின் மனிதப் படுகொலைகள் தொடர்பிலான விசாரணைப் பிரிவிடம் ஒப்படைத்தார்.
அதன்படி விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பான விசாரணைக் குழுவினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டது.
முதலில் நாரஹேன்பிட்டி பொலிஸார் இந்த விவகாரம் தொடர்பில் செய்த விசாரணைகளின் அறிக்கையை படித்த புலனாய்வுக் குழு, அதன் பின்னர் சுமார் 6 மாதங்களுக்குள் தனது விசாரணையில் பாரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளது எனலாம்.
எந்த தடயமுமே இல்லாமல் ஆரம்பிக்கப்பட்ட இந்த விசாரணைகளில், விபத்து என நம்பப்பட்ட வஸீம் தாஜுதீனின் மர்ம மரணம் ஒரு கொலையாக இருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன என நிறுவும் அளவுக்கு புலனாய்வுப் பிரிவினரால் காரணங்களை அடுக்க முடிந்துள்ளது.
இதுவரை புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்துள்ள விசாரணைகளில், தாஜுதீனுக்கு குறித்த தினம், அதாவது 2012 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி நள்ளிரவு வேளையில் கிருலப்பனை பொலிஸ் பிரிவின் ரொபர்ட் குணவர்தன மாவத்தையில் ஏதோ ஒரு அசம்பாவிதத்துக்கு அல்லது தாக்குதலுக்கு அல்லது கடத்தலுக்கு முகம்கொடுத்துள்ளார் என ஊகிக்க கூடிய சான்றுகள் உள்ளன.
குறிப்பாக பணப்பையுடன் சேர்த்து காணாமல் போன வஸீமின் விலை மதிப்பு மிக்க கையடக்கத் தொலைபேசிக்கு என்ன நடந்தது என பலரும் கேள்வியெழுப்ப, தனியார் தொலைபேசி சேவை நிறுவனம் ஒன்றும் இந்த விடயத்தில் கை விரிக்க தற்போது புலனாய்வுப்பிரிவு அதற்கான பதிலை வழங்கியிருக்கின்றது.
வஸீமின் சிம் அட்டை இல்லையென்றால் என்ன, தொலைபேசியின் எமி இலக்கத்தை வைத்து விசாரணைகளை ஆரம்பித்த புலனாய்வுப் பிரிவு, தொலைத் தொடர்புகள் ஆணைக் குழுவிடம் இருந்து பெற்றுக்கொண்ட விஷேட தகவல்களின் பிரகாரம் தாஜுதீனின் தொலைபேசியை கடந்த 3 வாரங்களுக்கு முன்னர் மீட்டது.
நுவரெலியா, அக்கரப்பத்தனை, க்ளாஸ்கோ தோட்டத்தில் ஒருவரிடம் இருந்த நிலையிலேயே இந்த தொலைபேசி மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் குறித்த நபரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை செய்து வாக்கு மூலம்பதிவுசெய்துள்ள நிலையில், அவருக்கு மற்றும் ஒருவரே இந்த தொலைபேசியைக் கொடுத்துள்ளமை தெரியவந்துள்ளது.
உண்மையில் இந்த தொலைபேசி கண்டுபிடிப்பானது இந்த சம்பவத்தைப் பொறுத்தவரை புதிய திருப்பமாகவே கருதப்பட வேண்டியுள்ளது.
ஏனெனில் பல கேள்விகளுக்கு, பல ஊகங்களுக்கு, பல வாய்மொழிக் கதைகளுக்கு இந்த தொலைபேசியில் உள்ள பல தகவல்கள் பதில் கூறத்தக்கது.
அதனால் தான் குறித்த கையடக்கத் தொலைபேசியை கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணினி மற்றும் விஞ்ஞான ஆய்வுப் பிரிவுக்கு அனுப்பி, அந்த தொலைபேசி நினைவுக் களஞ்சியத்தில் (போன் மெமரி) உள்ள புகைப்படங்கள், ஓடியோ, வீடியோக்கள், குறுஞ்செய்திகள் மற்றும் தொலைபேசி எண்கள் ஆகியவற்றை மீளப் பெற ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புலனாய்வுப் பிரிவினரின் தகவல்களின் படி அந்த தகவல்களை மிக விரைவாக மீளப் பெற்றுக்கொள்ள முடியுமாக இருக்கும் என நம்பலாம்.
இதனூடாக வஸீமின் நண்பர்கள் எதிரிகள், அவருக்கு இருந்த அச்சுறுத்தல்கள் என பல விடயங்களை வெளிப்படுத்தி அதனூடாக வெற்றிகரமான விசாரணையொன்றை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும்.
இந்த கையடக்கத் தொலைபேசி விவகாரம் எப்படி வஸீமின் மர்ம மரணம் குறித்த விசாரணைகளுக்கு மிக முக்கியமானதாக கருதப்படுகின்றதோ அதனை ஒத்த மேலும் பல முக்கிய தகவல்களை, வஸீமின் சடலம் தொடர்பில் ஆரம்பத்திலேயே சட்ட வைத்திய நடவடிக்கைகளை மேற்கொண்ட கொழும்பு முன்னாள் சிரேஷ்ட சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகரவின் இறுதி பிரேத பரிசோதனை அறிக்கையும், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய சமர்ப்பிக்கப்பட்ட வஸீமின் கார் விபத்துக்கு உள்ளானதா என்ற டொயாடோ லங்க நிறுவனத்தின் ஆய்வறிக்கையும் வழங்கியுள்ளது என்பதில் சந்தேக மில்லை.
ஆனந்த சமரசேகரவின் இறுதி பிரேத அறிக்கையில், வஸீம் தாஜுதீன் எவரினாலோ கடுமையாக தாக்கப்பட்டுள்ளமையும் அதன்பின்னர் அவர் குற்றுயிராக இருந்த நிலையில் தீயிற்கு இரையாகியுள்ளமை தொடர்பிலும் கூறப்பட்டுள்ளது.
கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் அவயவங்கள் செயலிழந்த நிலையில் கார் ஒன்றை ஓட்டி வந்து மதிலில் மோதி விபத்துக்குள்ளானார் என்பதை யாரும் ஊகிக்க முடியாது.
அப்படியாயின் வஸீம் கடுமையாக தாக்கப்பட்டு நினைவிழந்ததன் பின்னர் பிறிதொருவரால் அவரது காரில் ஏற்றிக்கொண்டு நாரஹேன்பிட்டி பகுதிக்கு கொண்டுவந்து விபத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும் என்ற சந்தேகங்களுக்கு ஆனந்த சமரசேகரவின் பிரேத அறிக்கையிலும் பதில் உள்ளது.
அதே போன்றுதன் டொயாடோ லங்கா நிறுவனத்தின் அறிக்கை. இந்த அறிக்கையானது கடந்த ஆகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி நீதிமன்றம் விடுத்த உத்தரவுக்கு அமைய தயார் செய்யப்பட்டதாகும்.
மோட்டார் திணைக்கள ஆணையாளர் அலுவலகத்தின் தொழில் நுட்பம் தொடர்பிலான உதவி ஆணையாளர் ஜே.எஸ்.ஜயவீர, உதவி அரச இரசாயன பகுப்பாய்வாளர், புலனாய்வுப் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் விக்ரமசேகர, பொலிஸ் பரிசோதகர் பிரசாத் சில்வா, அஜித் பேதுரு ஆரச்சி, கொழும்பு தெற்கு பொலிஸ் தடயவியல் பிரிவு, டொயடோ லங்கா தனியார் நிறுவனத்தின் பொது முகாமையாளர் ஆகியோருக்கு நீதிமன்று இட்ட கட்டளையின் பிரகாரமே இந்த அறிக்கை தயாரானது.
நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தில் தற்போதும் வைக்கப்பட்டுள்ள வஸீமின் எரிந்த கார், அது மோதியதாக கூறப்படும் சாலிகா மைதான மதில் பகுதி ஆகியவற்றை சென்று ஆராய்ந்துவிட்டே இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டது.
10 கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக தயார் செய்யப்பட்டுள்ள இந்த அறிக்கையும் வஸீமின் கார் உண்மையில் விபத்துக்கு முகம் கொடுத்ததா? அல்லது எவரேனும் ஒருவரால் தீவைத்து எரிக்கப்பட்டதா என தீவிர விசாரணைசெய்யப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றதாகவே அமைந்துள்ளது.
இவற்றை விட புலனாய்வுப் பிரிவு இந்த விவகாரத்தில் பிரதான சாட்சியாளர்களில் ஒருவராக கருதும் வஸீமின் மிக நெருங்கிய ஒருவருக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்தும் பிரத்தியேகமாக அவதானம் செலுத்தியுள்ளது.
கார் ஒன்றில் வந்துள்ள அடையாளம் தெரியாத ஒரு கும்பல் குறித்த நபர் தொடர்பில் சந்தேகத்துக்கு இடமான முறையில் தகவல் சேகரித்துள்ள நிலையில், அது தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் குறித்த சாட்சியாளரினால் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவையனைத்தும் வஸீம் விவகாரத்தில் ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்துள்ளது என்பதை மென்மேலும் உறுதி செய்யும் காரணிகளாகவே பார்க்க வேண்டியுள்ளது.
இந் நிலையில் தாஜுதீனின் மரண விசாரணைகளை முன்னெடுக்கும் கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸ், இந்த விவகாரத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவு முன்னெடுத்த சூட்சும விசாரணைகளைப் போன்றே, நேரடி மற்றும் விஞ்ஞான ரீதியிலான தடயங்களையும் சாட்சியங்களையும் வைத்து வஸீமின் மர்ம மரணத்துக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்களை கைது செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.
இந் நிலையில் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகள் தற்போது சந்தேக நபர்களை கைது செய்யும் தூரத்திலேயே உள்ளன.
மீண்டும் தோண்டி எடுக்கப்பட்ட வஸீமின் சடலம் மீது மேற்கொள்ளப்பட்ட புதிய பிரேத பரிசோதனைகள் அடுத்த மாதம் 22 ஆம் திகதி மன்றுக்கு சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் அதற்கு முன்போ அதனைத் தொடர்ந்தோ தாஜுதீன் விவகாரத்தில் சந்தேக நபர்கள் கைதாவர் என எதிர்பார்க்கலாம்.
-எம்.எப்.எம்.பஸீர்-