விஜேரட்ண தனது குடும்பத்தை மறந்து சந்தேக நபரான நளினின் மனைவியுடன் இரகசியத் தொடர்புகளைப் பேணி வந்தார்.
இது நளினுக்கும் அவருடைய பிள்ளைகளுக்கும் பெரும் மன உளைச்சலையும், வெளியில் தலைகாட்ட முடியாத துர்ப்பாக்கிய நிலையையும் உருவாக்கியது
செப்டெம்பர் முதலாம் திகதி இரவு 10.00 மணியிருக்கும். பகல் முழுவதும் வயலில் வேலை செய்து களைத்துப்போன வசந்தவும், விஜேரட்ணவும் வயலின் நடுவே காணப்பட்ட குடிலுக்கு நித்திரைகொள்வதற்காகச் சென்றனர்.
அவர்கள் இருவரும் அங்கு செல்லும் போது வயல் உரிமையாளர் சரத் குடிலில் காணப்பட்ட கட்டிலில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார்.
எனவே, அவருக்கு எந்தவிதமான தொந்தரவும் ஏற்படாத வண்ணம் இருவரும் தரையில் பாயை விரித்து நித்திரைக்குச் சென்றனர்.
அதன்பின் நள்ளிரவு 11.30 மணியிருக்கும். ஆழ்ந்த உறக்கத்திலிருந்த சரத்தின் காதுகளுக்கு விஜேரட்ணவின் அலறல் சத்தம் கேட்கவே திடுக்கிட்டவாறு கண்விழித்தார்.
அப்போது இரண்டு நபர்கள் விஜேரட்ணவின் தலையில் பலமாக தாக்கிக் கொண்டிருந்தார்கள். எனினும், இருள் சூழ்ந்திருந்தமையால் அவர்கள் யார்? என்பதை சரத்தால் இனம்கண்டுகொள்ள முடியவில்லை.
எனவே, டோர்ச் வெளிச்சத்தின் உதவியுடன் பார்க்க முனைந்தார். அங்கு, சரத் சற்றும் எதிர்பார்க்காத இருவர் அவ்விடத்திலிருந்தார்கள்.
ஒரு நிமிடம் சரத் அதிர்ச்சியில் உறைந்து போனார். அது வேறு யாருமில்லை. தந்தையும், மகனுமான நளினும், விஜிதவும் தான். எனவே சரத்துக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
கோபத்திலும், தடுமாற்றத்திலும் “ஏய் என்ன வேலை செய்கின்றீர்கள்? அவனை விடுங்கள், அடிக்காதீர்கள், தயவு செய்து இங்கிருந்து போங்கள்” என்று கத்தினார்.
எனினும், அவர்கள் இருவரும் அவனை விடுவதாய் இல்லை. சரத் சொல்லிக் கொண்டிருக்கும் போதும் விஜேரட்ணவை தொடர்ந்தும் தாக்கினார்கள்.
எனவே, இருவரையும் கையைப் பிடித்து குடிலில் இருந்து வெளியே இழுத்து வந்து,
“ஐயோ என்னடா இது செய்கின்றீர்கள். அவனை விட்டு இங்கிருந்து சென்று விடுங்கள்’. என்று கெஞ்சி மன்றாடினார்.
அதைத் தொடர்ந்தே இருவரும் அவ்விடத்தை விட்டு விலகிச் சென்றார்கள். அதன்பின் வசந்தவின் உதவியுடன் விஜேரட்ணவை தூக்கி, குடிலிலிருந்த கட்டிலில் படுக்க வைத்தார். எனினும், வலி தாங்க முடியாமல் விஜேரட்ண துடிதுடித்தான்.
“ஐயோ! எனக்கு ரொம்ப வலிக்கின்றது. என்னால் முடியவில்லை. மயக்கம் வருவது போல் இருக்கின்றது” என்று கதறினான்.
எனினும் அந்த நேரத்தில் அவனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வது என்பது சற்றுக் கடினமான காரியமாகவிருந்தது.
காரணம் சரத்தின் வயலும், குடிலும் பிரதான வீதியில் இருந்து சுமார் 4 கிலோமீற்றர் தொலைவிலிருந்தன. அதுமட்டுமின்றி, அப்பிரதேசத்தின் வீதிகள் அனைத்தும் புனரமைப்பு செய்யப்படாத நிலையில் குன்றும் குழியுமாகக் காணப்பட்டன.
எனவே, அந்த நேரத்தில் அது ஒரு சாத்தியப்படாத நிகழ்வாகவே இருந்தது. ஆயினும், நேரம் செல்ல, செல்ல விஜேரட்ணவின் நிலைமை மோசமாகிக் கொண்டு சென்றமையால் அவனை எப்படியாவது வைத்தியசாலைக்கு கொண்டு செல்வோம் என்ற முடிவுக்கு வந்தனர்.
அதன்படி, மிகுந்த சிரமத்தின் மத்தியில் விஜேரட்ணவை உழவு இயந்திரம் ஒன்றில் ஏற்றி மொனராகலை சிறிகல வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
இருப்பினும், அவர்களுடைய முயற்சிக்கு எந்தவிதமான பயனும் கிடைக்கவில்லை. விஜேரட்ணவை வைத்திய பரிசோதனைக்குட்படுத்திய வைத்தியர்கள் விஜேரட்ண உயிரிழந்து நீண்ட நேரமாகி விட்டது என்றே தெரிவித்தனர்.
அதன்பின்னர் வைத்தியசாலையின் ஊடாக மேற்படி சம்பவம் தொடர்பாக அறிந்துகொண்ட மொனராகலை பொலிஸ் நிலையத்தினர் அடுத்த நாள் அதிகாலையிலேயே சம்பவ இடத்துக்கு வந்து, தமது விசாரணைகளை முன்னெடுக்க ஆரம்பித்தனர்.
இவர்களின் ஒரு குழுவினர் சம்பவம் இடம்பெற்ற பிரதேசத்துக்கும், மற்றைய குழுவினர் மொனராகலை சிறிகல வைத்தியசாலைக்கும் தமது விசாரணைகளுக்காகச் சென்றனர்.
சம்பவம் நடைபெற்ற இடமான மொனராகலை கழுதிய எல்ல பிரதேசமானது மொனராகலை நகரிலிருந்து சுமார் 20 கிலோமீற்றர் தொலைவிலிருந்தது. எனவே, ‘குன்றும் குழியுமாக’ காணப்பட்ட வீதியின் ஊடாக மிகுந்த சிரமத்துக்கு மத்தியிலேயே பொலிஸார் சென்றடைந்தனர்.
அங்கு முதலில் சம்பவம் நடைபெற்ற இடமான குடிலைச் சோதனைக்குட்படுத்தியதுடன், பல்வேறு தடயங்களையும் சேகரித்துக்கொண்டனர்.
அதன்பின் சம்பவம் நடைபெற்றபோது உடனிருந்த சரத்திடம், வசந்தவிடம் வாக்குமூலங்களை பெற்றுக்கொண்டனர்.
அதன்படி மாறாவ இத்தேகடுவ பிரதேசத்தை சேர்ந்த இரு நபர்கள் மீது பொலிஸாரின் கவனம் திரும்பியது. அதனைத்தொடர்ந்து விரைவாக அவர்கள் இருக்கும் இடத்தை நோக்கிச் சென்றனர்.
எனவே, பொலிஸாரின் விசாரணைகளை இலகுவாக்குவது போல் பொலிஸார் அங்கு செல்லும் போது சந்தேக நபர்களான நளினும், விஜிதவும் அவர்களின் வீட்டிலிருந்தார்கள். அதன்பின் பல்வேறு ஊகங்களின் அடிப்படையில் பொலிஸார் கேள்விக்கணைகளைத் தொடுத்தனர்.
இதன்போதே இருவரும் உண்மையை மறைக்க முடியாமல் எல்லாவற்றையும் பொலிஸாரிடம் தெரிவித்தனர். மேலும் விஜேரட்ணவை தாக்குவதற்கு பயன்படுத்திய தடிகள் போன்றவற்றையும் பொலிஸாரிடம் ஒப்படைத்தார்கள்.
இதனைத் தொடர்ந்து கொலைக்கான சரியான காரணத்தை அறிய முற்பட்ட பொலிஸாருக்கு இது ஒரு கள்ளக் காதல் விவகாரத்தினால் ஏற்பட்டது என்பது தெரியவந்தது.
கொலை செய்யப்பட்ட விஜேரட்ண (55) ஒரு விவசாயியாவார். இவருக்கு எட்டுப் பிள்ளைகள். மூத்த மகள் திருமணமானவர். அவருக்கும் பாடசாலை செல்லும் வயதில் பிள்ளைகள் இருக்கின்றார்கள்.
எனினும், விஜேரட்ண அதையெல்லாம் மறந்து சந்தேக நபரான நளினின் மனைவியுடன் இரகசிய தொடர்புகளைப் பேணி வந்தார்.
இது நளினுக்கும் அவருடைய பிள்ளைகளுக்கும் பெரும் மன உளைச்சலையும், வெளியில் தலைகாட்ட முடியாத துர்ப்பாக்கிய நிலையையும் உருவாக்கியது. இதுவே இறுதியில் கொலைக்கான காரணமாகவும் அமைந்தது.
பொலிஸ் விசாரணையின் போது நளின் தெரிவிக்கையில்,
“விஜேரட்ணவுக்கும், எனது மனைவிக்கும் இடையில் கடந்த சில ஆண்டுகளாகவே இரகசிய தொடர்புகள் இருந்து வந்தன. இது ஊரிலுள்ள அனைவருக்கும் தெரியும்.
இதனால் எனக்கும், எனது பிள்ளைகளுக்கும் வெளியில் தலைகாட்ட முடியவில்லை. இதை நிறுத்தி விடுமாறு நான் இருவரிடமும் பல முறை எச்சரித்திருந்தேன்.
எனினும் இருவருமே அதைக் கேட்பதாய் இல்லை. ஒரு நாள் இருவரும் ஒன்றாக இருப்பதையும் நான் என் கண்ணால் கண்டேன்.
அப்போது ஒரு கணவனாய் நான் அவமானப்பட்டுப் போனேன். செய்வதறியாது நஞ்சு அருந்தினேன். அதன்பின் தாமதிக்காமல் பிள்ளைகள் என்னை வைத்தியசாலையில் சேர்த்தமையால் நான் உயிர் பிழைத்தேன்.
கடந்த 31 ஆம் திகதி எனது மனைவி வீட்டில் இருக்கவில்லை. எங்கே சென்றாள் என்றும் தெரியவில்லை. நானும், மகனும் அவளைப் பல இடங்களில் தேடினோம்.. அதன்பின் தான் எங்களுக்கு விஜேரட்ணவின் மீது சந்தேகம் ஏற்பட்டது.
ஒன்று எனது மனைவி விஜேரட்ணவுடன் சென்றிருக்க வேண்டும் அல்லது எனது மனைவி எங்கு இருக்கின்றாள் என்பதை விஜேரட்ண அறிந்திருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு தான் விஜேரட்ணவை தேடி குடிலுக்கு அந்த நேரத்தில் வந்தோம்.
அப்போது அவன் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தான். எங்களுக்கு அவனைப் பார்த்ததும் ஒன்றும் கேட்க தோன்றவில்லை.
ஆத்திரம் தான் வந்தது. அதனால் தான் எங்கள் இருவரினதும் ஆத்திரம் தீரும் வரை தடியால் அவன் உடலைப் பதம் பார்த்தோம். பின் வலியால் அவன் அலற ஆரம்பித்தான்.
இதன்போதே சரத் கண் விழித்துக் கொண்டான். இதனைத் தொடர்ந்து, சரத் எங்கள் இருவரையும் சமாதானப்படுத்தி தடிகளையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து அமைதியாக செல்லும்படி கூறினான். பின்னர் தான் அங்கிருந்து வந்தோம். ”
என்று மிகுந்த கவலையுடன் கூறினார்.
இது தொடர்பாக விஜிதவிடம் (நளினின் மகன்) கேட்ட போது,
“எங்களுடைய அம்மா விஜேரட்ண மாமாவுடன் தவறான முறையில் பழகி வந்தார். எனவே, அதை நாங்கள் கடுமையாக எதிர்த்தோம். நானும் அம்மாவுக்கு எங்களை ஊரார் மத்தியில் அசிங்கப்படுத்த வேண்டாம் என்று எத்தனையோ தடவை கூறியிருந்தேன்.
இருப்பினும் அம்மா இதுபற்றிப் பெரிதாக எதையும் அலட்டிக்கொள்ளவில்லை.. எனவே, தான் எனக்கும் விஜேரட்ண மாமா மீது ஆத்திரம் வந்தது.”
என்று கண்ணீருடன் தெரிவித்தான். மேலும் இது தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது விஜேரட்ணவின் மகளும், தனது தந்தைக்கும், நளினின் மனைவிக்கும் இடை யில் இருந்து வந்த கள்ளத் தொடர்பு காரணமாக அவமானத்தில் தற்கொலை க்கு முயற்சி செய்திருக்கின்றார் என்ற விபரமும் தெரியவந்தது.
எது எவ்வாறாயினும், திருமணத்திற்கு பின்னர் ஏற்படுத்தப்படும் இவ்வாறான தகாத உறவு முறைகள் காரணமாக பல குடும்பங்கள் சின்னாபின்னமாகின்றன. அதற்கு மேற்படி சம்பவம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
-வசந்தா அருள்ரட்ணம்
மூலம்: சிங்கள நாளேடு.