மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் நகர சபையின் பராமரிப்பின் கீழ் வரும் பல வீதிகளில் பாதையின் நடுவில் மின் கம்பங்களை நிறுவி வீதிக்கு கொங்கிறீற் இடப்பட்டுள்ளதால் பயணிகளும் வாகனங்களும் பெருத்த அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக ஊர் மக்கள் தெரிவிக்கின்றார்கள்.

ஏறாவூர் நகர சபையின் 4 ஆண்டுப் பதவிக் காலம் கடந்த மே 15 ஆம் திகதியுடன் முடிவடைந்தது.

இந்த நாலாண்டுப் பதவிக் காலத்தில் நகர சபை நிருவாகம் குறைந்தபட்சம் பாதைப் போக்கு வரத்திற்குத் தடையாக உள்ள இந்த நடு வீதி மின் கம்பங்களையாவது அகற்ற முன்வராதது தமக்கு எரிச்சலூட்டுவதாக வரியிறுப்பாளர்களான பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

ஏறாவூர் நகர சபைப் பிரிவில் உள்ள பல கொங்கிறீற் வீதிகளின் நடுவில் இந்த மின் கம்பங்கள் காணப்படுகின்றன.

இருட்டு வேளையில், அவசர பயணத்தின் நிமித்தம், மற்றும் நிறைமாதக் கர்ப்பிணிகள் உட்பட அவசர நோயாளிகள், முச்சக்கர வண்டிகளில் பயணிப்போர் மாணவர்கள், ஆசிரியர்கள் இந்த நட்ட நடு வீதி மின்கம்பங்களில் மோதுண்டு உயிராபத்தில் சிக்க வேண்டிய ஆபத்து இருப்பதாக பொதுமக்களும் பயணிகளும் தெரிவிக்கின்றனர்.

DSC03664
ஏறாவூர் நகர சபைப் பிரிவில் உள்ள பல உள் வீதிகளில் சுமார் 20 இற்கு மேற்பட்ட மின் கம்பங்கள் நட்ட நடு வீதியில் நடப்பட்டுள்ளன.

ஏறாவூர் றஹ{மானியா வித்தியாலய குறுக்கு வீதி, ஏறாவூர் அமீரலி வித்தியாலய வீதி என்பனவற்றிலும் இந்த மின் கம்பங்கள் நட்டநடு வீதியில் நாட்டப்பட்டுள்ளன.

நடு வீதியிலுள்ள இந்த மின் கம்பங்களைப் பிடுங்கி அகற்றி வீதி மருங்குகளில் பொருத்துவதற்கு ஒட்டு மொத்தமாக சுமார் 4 இலட்ச ரூபாய் செலவு மதிப்பிடப்பட்டு நகர சபை நிருவாகம்  தெரிவாவதற்கு முன்னர், இந்தத் தொகையைச் செலவு செய்து மின்கம்பங்களைப் பிடுங்க அங்கீகாரம் அளிக்கப்பட்டிருந்ததாகவும் நகர சபை முன்னாள் உறுப்பினர் எம்.எஸ்.எம். நஸீர் ஞாயிறன்று தெரிவித்தார்.

ஆயினும், அங்கீகாரமளிக்கப்பட்டு 5 மாதங்கள் கழிந்து விட்டபோதிலும் நகர சபைச் செயலாளர் இதுபற்றி அக்கறை கொள்ளவில்லை என்றும் நஸீர் குறிப்பிட்டார்.

கடந்த 4 வருடங்களாக மக்களின் குறைகளைப் கவனத்திற்கொள்ளாது செயற்பட்ட ஏறாவூர் நகர சபையின் சீரற்ற நிருவாகத்திற்கு இது ஒரு சிறு எடுத்துக் காட்டு என்றும் நஸீர் மேலும் தெரிவித்தார்.

இதுதொடர்பாக நகரசபைச் செயலாளர் எம்.எச்.எம். ஹமீமிடம் ஞாயிறன்று கேட்டபோது மின்சார சபையினர் நகரசபையிடம் கலந்தாலோசிக்காமல் தமது இஷ்டப்படி மின் கம்பங்களை நாட்டி விடுகின்றனர்.

ஆனால், அவற்றை அகற்ற வேண்டுமாயின் மின்சார சபையினால் எம்மிடம் செலவுத் தொகை கோரப்படுகின்றது.

எவ்வாறாயினும் செப்ரெம்பெர் மாதத்திற்குள் நடுவீதியிலுள்ள மின்கம்பங்கள் யாவும் அகற்றப்பட்டுவிடும் என்று தெரிவித்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version