ilakkiyainfo

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி-4)

இலங்கை வரலாற்றில் ‘தனிச் சிங்களச்’ சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நாள் முதல் இனமுரண்பாடு கொதிக்கும் நிலையை அடையத் தொடங்கியது.

‘தனிச் சிங்கள’ சட்டமானது சிங்கள மொழியை மாத்திரம் நாட்டின் உத்தியோகபூர்வ மொழி ஆக்கியதன் ஊடாக, தமிழ் மக்கள் இந்த நாட்டில் வாழ முடியாத நிலையை ஏற்படுத்தியது.

அரசாங்க உத்தியோகமே பெருமளவு காணப்பட்ட அந்தக் காலப்பகுதியில், சிங்களம் உத்தியோகபூர்வ மொழி ஆக்கப்பட்டமையானது, சிங்களம் தெரியாத தமிழ் உத்தியோகத்தர்கள் வேலை செய்ய முடியாத நிலையைத் தோற்றுவித்தது.

அரச ஆவணங்கள் முதல் அரச இயந்திரத்தினது சகல பகுதிகளும் சிங்களத்தை மட்டும் கொண்டிருக்கக்கூடிய நிலை ஏற்பட்டதால் சிங்களம் அறியாத சிறுபான்மை மக்கள் கடுமையாகப் பாதிப்படையும் நிலை உருவானது.

z_p09-media1‘தனிச் சிங்கள’ சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நாளில், சா.ஜே.வே. செல்வநாயகம் தலைமையிலான இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் நாடாளுமன்ற கட்டடத்துக்கு முன்பாக (பழைய நாடாளுமன்ற கட்டடம் – இன்றைய ஜனாதிபதி செயலகம்), காலி முகத்திடலில், ‘தனிச் சிங்கள’ சட்டமூலத்தை எதிர்த்து அகிம்சை வழியில் போராட்டமொன்றை நடத்தினர்.

இந்தியாவின் தந்தை எனக் கருதப்படும் மகாத்மா காந்தியின் பாதையில், அதன் தாக்கத்தில் சா.ஜே.வே.செல்வநாயகம் தலைமையில் ஏறத்தாழ 300 அளவிலான தமிழரசுக் கட்சியினர் (நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட) காலி முகத்திடலில் கூடி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

அமைதி வழியில் நாடாளுமன்றக் கட்டடத்துக்கு முன்பாக காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகமிருந்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியவர்களை ரௌடிகளும் காடையர்களும் தாக்கத் தொடங்கினர்.

சுற்றிவர பொலிஸ் காவலுக்கு நின்றபோதும், பொலிஸார் ரௌடிகளையும் காடையர்களையும் தடுக்கவில்லை. அமைதி வழியில் சத்தியாக்கிரகம் இருந்தவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டார்கள்.

சிலர் நாடாளுமன்றக் கட்டடமருகே உள்ள ‘பேர’ வாவியில் காடையர்களால் தூக்கி எறியப்பட்டார்கள். சத்தியாக்கிரகிகள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.

v_navaratnam

‘தமிழ்த் தேசத்தின் எழுச்சியும் விழுச்சியும் (ஆங்கிலம்)’ என்ற நூலில் வி.நவரட்ணம் அன்று காலிமுகத்திடலில் நடந்த சம்பவமொன்றை இவ்வாறு பதிவு செய்கிறார்:

‘தலைவர்களும் தொண்டர்களும் ஹொட்டேல் முடிவிலே (கோல் பேஸ் ஹொட்டேல் முன்பதாக) ஒன்று கூடியபோது, அங்கு காத்துக் கொண்டிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிங்களக் காடையர்கள் அவர்களை நரிக்கூட்டமொன்று பாய்ந்தாற் போல, மனிதாபிமானமற்ற கோழைத்தனமான முறையில் தாக்கினார்கள். சத்தியாக்கிரகிகள் நிலத்திலே தூக்கி வீசப்பட்டார்கள்.

சத்தியாக்கிரகிகள் வைத்திருந்த பதாதைகள் கைப்பற்றப்பட்டு, அதில் இணைக்கப்பட்டிருந்த மரக் கோல்கள் – சத்தியாக்கிரகிகளைத் தாக்கப் பயன்படுத்தப்பட்டன.

சிலர் கீழே போட்டு நசுக்கப்பட்டார்கள், சிலர் அடித்து, உதைக்கப்பட்டார்கள், சிலர் மீது எச்சில் உமிழப்பட்டது. டொக்டர் நாகநாதனைத் தவிர வேறு எந்தவொரு சத்தியாக்கிரகியும் தம்மைத் தாக்கிய காடையர்களை எதிர்த்து வன்முறையைப் பிரயோகிக்க கையைத்தானும் தூக்கவில்லை.

ஐந்து காடையர்கள் வரை டொக்டர் நாகநாதனை காலிமுகத்திடலின் எல்லை வரை துரத்தினார்கள். சத்தியாக்கிரகமோ, இல்லையோ, இயல்பிலேயே தன் ஆண்மை சவாலுக்குட்படுத்தப்படுவதை ஏற்றுக்கொள்ளாதவர் அவர், அந்த ஐவரையும் தனது கரங்களையும் கால்களையும் பயன்படுத்தியே தாக்கினார்.

சத்தியாக்கிரகிகள் நாடாளுமன்றப் பக்கத்திலே பொலிஸாரால் தடுக்கப்பட்டனர். அவர்கள் அங்கேயே உட்கார்ந்து சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டனர்.

சத்தியாக்கிரகிகளோடு இணைந்து சட்டத்தரணி பரணவிதான மற்றும் பிதா. சேவியர் தனி நாயகம் அடிகளார் ஆகியோரும் சத்தியாக்கிரகத்தில் அமர்ந்து கொண்டனர்’.

அஹிம்சை வழியில் எதிர்ப்பை வெளிப்படுத்தியவர்கள் இவ்வாறாக இம்சைப் படுத்தப்பட்டார்கள். எஸ்.பொன்னையா தன்னுடைய ‘சத்தியாக்கிரகமும் தமிழ் மக்களின் விடுதலை இயக்கமும் (ஆங்கிலம்)’ என்ற நூலிலே பின்வரும் சம்பவத்தைக் குறிப்பிடுகிறார்.

அன்றைய பிரதமர் பண்டாரநாயக்க, நாடாளுமன்றத்துக்கு தனது வாகனத்தில் வருகை தந்த போது, அவர் காலிமுகத்திடல் பகுதியைக் கடக்கும் போது, ஒரு பொலிஸ் அதிகாரி அவரை அணுகி, இங்கு பல காடையர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சத்தியாக்கிரகிகளைத் தாக்கக் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அதனைத் தடுக்க, காடையர்களைக் கட்டுப்படுத்த தாம் ஏதும் நடவடிக்கை எடுப்பதா? என வினவியபோது, பண்டாரநாயக்க ‘அதன் சுவையை அவர்கள் உணரட்டும்’ என்று கூறிச் சென்றதாக பதிவு செய்கிறார்.

இந்தச் சம்பவம் உண்மையோ, இல்லையோ, இந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட குடிமக்களைப் பாதுகாக்க வேண்டிய கடமையும் கடப்பாடும் அரசாங்கத்துக்கும் அதிகாரிகளுக்கும் உண்டு. அந்தக் கடமையிலிருந்து அரசாங்க இயந்திரம் தவறியதானது மாபெரும் வரலாற்றுத்தவறாகும்.

இந்த வன்முறைகள் இதனோடு நிற்கவில்லை. சுதந்திர இலங்கை அரசியலில் இரத்தக்கறை படிந்த வரலாறு எழுதப்படத் தயாரானது.

காலி முகத்திடலில் தொடங்கிய வன்முறை கொஞ்சம், கொஞ்சமாக மற்ற இடங்களுக்கும் பரவத் தொடங்கியது. கொழும்பு வீதிகளில் தமிழர்கள் தாக்கப்பட்டார்கள்.

வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த தமிழ் உத்தியோகத்தர்கள் தாக்கப்பட்டார்கள். தமிழர்கள் பாதுகாப்புக்காக வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டிய சூழல் உருவானது.

காடையர்கள் இந்தச் சந்தர்ப்பத்தைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். தமிழர்களின் கடைகள் சூறையாடப்பட்டன, தமிழர்களின் வீடுகளுக்கும் கடைகளுக்கும் தீ வைக்கப்பட்டது.

தமிழர்களை எப்படியாவது ‘தனிச் சிங்கள’ சட்டத்தை ஏற்றுக்கொள்ளச் செய்வதற்காக பிக்குகளும் சிங்களப் பேரினவாதிகளும் சேர்ந்து இந்த வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டதாக ‘இலங்கை: தேசிய முரண்பாடும் தமிழர் விடுதலைப் போராட்டமும் (ஆங்கிலம்)’ என்ற நூலில் சச்சி பொன்னம்பலம் குறிப்பிடுகிறார்.

இப்படியாக நாட்டின் பல பகுதிகளுக்கும் பரவிய வன்முறை, அம்பாறை மற்றும் கல்-ஓயாவில் தனது கோர முகத்தை வெளிக்காட்டியது.

கல்-ஓயா குடியேற்றத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் பல்லாயிரம் சிங்கள மக்கள், குறைந்த எண்ணிக்கையிலான தமிழ் மக்கள் வாழ்ந்த கிராமங்களைச் சூழ டியமர்த்தப்பட்டிருந்தனர்.

இங்கு நடந்த வன்முறையில் பெண்கள், சிறுவர்கள் உட்பட 150 பேர் கொல்லப்பட்டனர். இனவாதத்தின் கோரமுகம் 150 உயிர்களைப் பலிவாங்கியது. ஆனால், இது இனவெறித்தாக்குதலின் தொடக்கம் மட்டும்தான்.

தனிச்சிங்கச் சட்டம் நிறைவேற்றப்பட்டது ஒரு புறம், அதனைத் தொடர்ந்து நடந்த வன்முறைகள் மறுபுறம். தமிழர்களின் பெரும்பான்மைப் பிரதிநிதிகளைக் கொண்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்க்கமானதொரு முடிவெடுக்க வேண்டிய நிலையில், ஓகஸ்ட் 19, 1956இல் திருகோணமலையில் கட்சி மாநாட்டைக் கூட்டியது.

தமிழில் இலங்கைத் தமிழரசுக் கட்சி எனச் சொல்லப்பட்டாலும், ஆங்கிலத்தில் ‘‡பெடரல் பார்ட்டி’ (சமஷ்டிக் கட்சி) என்றே அது பிரபலமாக அறியப்பட்டது.

அந்த ‘சமஷ்டி’க்கு தனது திருகோணமலை மாநாட்டில் உயிர்கொடுத்தது ‘சமஷ்டிக் கட்சி’ (இலங்கைத் தமிழரசுக் கட்சி). திருகோணமலை மாநாட்டில் நான்கு முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றியது.

01. சமஷ்டி அடிப்படையிலான ஒரு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுதனூடாக தமிழ்ப் பிராந்தியங்கள் தன்னாட்சி அதிகாரமுள்ளவையாகப் பிரகடனப்படுத்தப்பட வேண்டும்.

02. தமிழ்மொழியை சிங்கள மொழிக்கு சமனான அந்தஸ்துக்கு மீளக்கொண்டு வருவதனூடாகத் தமிழ் மொழியையும் இந்நாட்டின் உத்தியோகபூர்வ மொழியாகப் பிரகடனப்படுத்த வேண்டும்.

03. நடைமுறையிலுள்ள குடியுரிமைச் சட்டங்கள் நீக்கப்பட்டு, இந்நாட்டின் வாழ்தலினூடாக இந்நாட்டை தமது சொந்த வாழ்விடமாகக் கொண்டுள்ள யாவருக்கு குடியுரிமை வழங்கப்படுதல். (பிரஜாவுரிமைச் சட்டத்தினால் பிரஜாவுரிமையை இழந்த இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கான நிவாரணமாக இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டது)

04. பூர்வீக தமிழ்ப் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள் ஏற்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

இந்த நான்கு தீர்மானங்களும் ஓகஸ்ட் 20, 1957இற்கு முன்பு, அதாவது ஒரு வருடத்துக்குள் அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால், அஹிம்சை வழிப் போராட்டம் நடக்கும் என ‘சமஷ்டிக் கட்சி’ (இலங்கைத் தமிழரசுக் கட்சி) அறிவித்தது.

இந்தச் சூழலில் ‘தனிச் சிங்களச்’ சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இனவாத சக்திகள் பண்டாரநாயக்கவுக்கு அழுத்தத்தைக் கொடுத்தன.

ஒருவகையில் பார்த்தால் பண்டாரநாயக்க எதிர்பார்க்காத அழுத்தம் இது. இயல்பில் லிபரல் மற்றும் ஜனநாயகவாதியாகவே பண்டாரநாயக்க இருந்தார்.

இலங்கையில் முதன்முதலாக சமஷ்டி முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் எனக் கேட்டவர் பண்டாரநாயக்க. அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக ‘இனவாதத்தை’, ‘இன-மைய அரசியலை’ கையில் எடுத்தவர்.

இன்று அந்த ‘இனவாதம்’ அவரை விடுவதாக இல்லை. ‘தனிச் சிங்களச்’ சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்றில் உரையாற்றும் போது கூட முதலில், தமிழ் மக்களுக்கு தமது மொழியில் கல்வி கற்கும் உரிமை, உத்தியோகபூர்வ காரியங்களைக் கூட தமிழிலும் ஆற்றக்கூடிய உரிமை ஆகியவை ‘தனிச் சிங்கள’ சட்டத்தின் உள்ளடக்கமாக வேண்டும் என்றே பேசினார்.

அவரைப் பொறுத்தவரையில் ‘தனிச் சிங்களம்’ என்ற ‘லேபிள்’ அவரது அரசியல் இருப்புக்கு அவசியமான அரசியல் மூலதனமாக இருந்தது.

ஆனால், அவர் உருவாக்கியிருந்த, எழுச்சி பெறச் செய்திருந்த பேரினவாதம் அவரை விடுவதாக இல்லை. ‘தனிச் சிங்களம்’ என்பது தனியே சிங்களமாக இருக்கவேண்டும் என்ற பேரினவாதத்தின் அழுத்தம் பண்டாரநாயக்கவை இறுக்கியது.

இதேவேளை சமஷ்டித் தீர்வு வேண்டியும், தமிழுக்கு சம அந்தஸ்து வேண்டியும் தமிழ்த் தரப்பு பண்டாரநாயக்க மீது அழுத்தத்தைப் பிரயோகித்தது.

இலங்கை தமிழரசுக் கட்சி (சமஷ்டிக் கட்சி)-யின் அழுத்தம், அவர்கள் சத்தியாக்கிரகத்தில் ஈடுபடத்தயாரான நிலையில், பண்டாரநாயக்க கொஞ்சம் இறங்கி வந்தார். 1957, ஏப்ரலில் நாடாளுமன்றத்தில் ‘தமிழ்மொழியின் நியாயமான பாவனை’ பற்றி சில பொதுவான முன்மொழிவுகளை பண்டாரநாயக்க முன்வைத்தார்.

01. தமிழ் மக்களுக்கு தமிழ் மொழியிலேயே கல்வி (உயர் கல்வி உட்பட) பெறும் உரிமை.

02. பொதுச்சேவை நுழைவுத் தேர்வை தமிழில் எழுதும் உரிமை. தேர்வாகும் பட்சத்தில், தற்காலிக சேவையாளராக உள்ளபோது ஒரு குறிப்பிட்ட காலத்தினுள் சிங்கள மொழி கற்றுத் தேற வேண்டும்.

03. தமிழ் மக்களுக்கு அரசாங்கத்தோடு தமிழில் தொடர்பாடக்கூடிய உரிமை. தமிழில் பதில் பெறக்கூடிய உரிமை.

04. தமிழ் பிரதேசங்களில் உள்ள உள்ளூராட்சி அமைப்புக்கள் அரசாங்கத்துடன் தமிழில் தொடர்பாடக்கூடிய வசதி.

என்பவற்றைத் தனது பொதுவான முன்மொழிவுகளாப் பதிவு செய்தார் பண்டாரநாயக்க. ‘சிங்களம் உத்தியோகபூர்வ மொழியானதால், இந்நாட்டின் சிங்களம் பேசாத மக்கள் பாதிக்கப்பட விட முடியாது.

ஆதலால், அதனைச் சரிசெய்யவே இந்த முன்மொழிவுகள்’ எனக் குறிப்பிட்ட அவர், ‘இருதரப்பிலும் தீவிர எண்ணங்கொண்டவர்கள் உள்ளார்கள். ஆனால், தீவிர எண்ணங்களின் அடிப்படையில் நாம் முடிவெடுக்க முடியாது’ எனவும் குறிப்பிட்டார்.

பண்டாரநாயக்கவின் இந்த (முன்னைய நிலையிருந்து) ‘இறக்கம்’, தமிழ்த் தரப்புடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு சாத்தியமான தீர்வுகளை எட்டக்கூடிய ஒரு சூழலைத் தோற்றுவித்தது.

இதனைத் தொடர்ந்துதான் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கவுக்கும் சா.ஜே.வே.செல்வநாயகத்துக்குமிடையிலான பேச்சுவார்த்தை இடம்பெற்று, இரு தரப்பு விட்டுக் கொடுப்புக்களின் பேரில் ‘பண்டா-செல்வா’ ஒப்பந்தம் உருவானது.

-என்.கே.அஷோக்பரன் LLB (Hons)

முன்னைய தொடர்கள்.. தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? -(பகுதி -1…2….3)

Exit mobile version