திருமணத்துக்குக் கனடாவிலிருந்து வருகை தந்த மணப்பெண்ணின் வீட்டுக்குச் சென்ற முகமூடி அணிந்த இனந் தெரியாத நபர்கள் கதவை உடைத்து மணப்பெண்ணைக் கடத்திச் சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று முன்தினம் உடுப்பிட்டி இமையாணன் பகுதியில் இடம்பெற்றுள்ளது.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, கனடாவிலிருந்து வந்த 28 வயதுடைய பெண்ணுக்கும், சிறுப்பிட்டியைச் சேர்ந்த இளைஞனுக்கும் நாளை வியாழக்கிழமை திருமணம் நடைபெறுவதற்கு மும்முரமாக ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு கயஸ் வானொன்றில் முகத்தைக் கறுப்புத் துணியால் கட்டியவாறு வந்த இளைஞர் குழுவொன்று வீட்டுக்குள் நுழைந்து அங்குள்ளவர்களைத் தாக்கிவிட்டு மணப் பெண் தங்கியிருந்த கதவை உடைத்து உட்சென்றது.
அவர்களைக் கண்டு மணப்பெண் அலறிய போது அந்த இளைஞர் குழுவினர் பெண்ணின் வாய்க்குள் துணியைத் திணித்து விட்டு அவரை வாகனத்தில் கடத்திச் சென்றனர்.
வீட்டிலிருந்தோரின் அவலக் குரல் கேட்டு அங்கு கூடிய அந்தப் பிரதேச இளைஞர்கள் குறித்த வாகனத்தைத் துரத்திச் சென்ற போது அவ்வாகனம் உடுப்பிட்டி வீதியூடாக வரணிப் பக்கம் நோக்கி வேகமாகச் சென்று மறைந்தது.
குறித்த பெண் ஏன் கடத்தப்பட்டார்? என்று தெரியாத நிலையில் பெண் வீட்டார் ஏக்கத்திலுள்ளனர்.
இது தொடர்பில் வல்வெட்டித் துறைப் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
கடத்தப்பட்ட பெண்ணைக் கண்டுபிடிப்பதற்கு காங்கேசன்துறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசேட பொலிஸ் குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.