இன்று காலை தருமபுரி கோட்டைக் கோவிலில் நடந்த திருமண நிகழ்வு அது. காலை 9 மணிக்கு திருமணம். முகூர்த்தம் நெருங்குவதற்கு முன்பு கல்யாண சம்பிரதாயங்களை முடித்தாக வேண்டும்.

பெண்ணை அழைத்து வரச்சொல்லிவிட்டு மணமகனும் மணமகன் வீட்டாரும் கோவிலில் காத்துக்கொண்டிருந்தார்கள்.

தருமபுரி பெரியார் சிலைக்கு அருகில் இருந்து மணப்பெண் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டுக்கொண்டிருந்தார்.

அவசரகதியில் சென்று கொண்டிருந்தவர்கள் எல்லாம் ஆடாமல் அசையாமல் அந்த காட்சியை வெறித்தபடி பார்த்து நின்றார்கள்.வேடிக்கையாக பார்த்து சிலர் சிரித்தார்கள்.

ஆம், மணப்பெண்ணை ஒரு சிறிய வண்டியில் வைத்து நாய் இழுத்துச்செல்ல. இதுதான் மணப்பெண் அழைப்பு என்று சொன்னால் யார்தான் சிரிக்க மாட்டார்கள்.

ஆனால், இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் இந்த ஏற்பாட்டை செய்த மணமகளின் தந்தை தங்கவேல் சொல்லும் காரணம் சிரிப்பை அடக்கி வியக்க வைக்கிறது

“தருமபுரிக்கு பக்கத்துல உள்ள தும்பலஹள்ளிதான் என் ஊரு, விவசாயம் பண்ணிகிட்டு இருக்கேன். என் மணி உங்க கண்ணுக்கு வேணும்னா நாயா தெரியலாம்.

ஆனா, எனக்கு அவன் பையன் மாதிரி, என் குடும்பத்துல ஒருத்தன். அஞ்சு வருஷத்துக்கு முன்னாடிதான் அவனை தூக்கிகிட்டு வந்தேன்.

நான் முன்னாடி பாசமா வளர்த்த நாய் வயசாகி செத்துப்போச்சி. அதோட நினைவா இவனுக்கும் மணினே பேர் வச்சேன்.

நைட்டு முழுக்க தூங்காம வீட்டுக்கு காவல் இருந்துட்டு பகல்லதான் தூங்குறது. நான் எங்க போனாலும் என் கூடவே வர்றதுனு ஆரம்பத்துல இருந்தே என் கூட ஒட்டிகிட்டான்.

நான் மாடு வளர்க்கிறதால பால் டெப்போவுக்கு பால் கொடுக்க போவேன். வீட்ல இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்துல உள்ள டிப்போவுக்கு நான் வண்டில போனாலும் நடந்து போனாலும் மணி என் கூடவே ஓடி வந்துடுவான்.

அப்பதான் எனக்கு ஒரு யோசனை தோணுச்சி. குதிரை வண்டி மாடல்ல அவன் உயரத்துக்கு ஏத்தாப்புல ஒரு வண்டிய தயார் பண்ணேன்.

அதுல ஒரு பத்து பதினைஞ்சு கேனை வச்சி கயிறு கட்டி இழுத்துகிட்டே போய் பால் கொடுத்தேன் அப்ப அதை பார்த்துகிட்டே ஓடிவருவான் மணி.

dpm-dogஅப்புறம் கொஞ்ச நாள்ளயே அவன் தனியா இழுத்துட்டுப் போக ஆரம்பிச்சுட்டான். பாலை ஊத்தி கேனை வண்டியில வச்சிட்டா போதும் 20 லிட்டர் 30 லிட்டரா இருந்தா கூட இழுத்துகிட்டு போய் கொடுத்துட்டு வந்துடுவான்.

என் வேலைகள் எல்லாத்துலயும் கொஞ்சமாவது அவன் பங்கு இருக்கும். அவன் சக்திக்கு மீறிய வெயிட் வச்சாக்கூட இழுத்துகிட்டு வந்துடுவான்.

அஞ்சு மாசத்துக்கு முன்னாடி, ஒரு கார் மணியை மோதிடுச்சி அதுல அவன் இடுப்பு உடஞ்சுடுச்சி நான் பதறிட்டேன். ஹாஸ்பிட்டலுக்கு அழைச்சிகிட்டு போய் ஸ்கேன் பண்ணினேன். இது அவ்வளவுதான் பேசாம கொன்னுடுங்கனு டாக்டர் சொன்னார்.

ஆனா, நான் விடல மணி மூணு மாசத்துல சரியா நடக்க ஆரம்பிச்சிட்டான். அவன் சரியான உடனே அம்மனுக்கு 25 கிலோ மாவிளக்கை அவனை வச்சி இழுத்துட்டு போய் பூஜையெல்லாம் பண்ணினேன்.

இந்த சமயத்துலதான் என் ரெண்டாவது பொண்ணு குறளரசிக்கு எங்க ஊருக்கு பக்கத்துல உள்ள முக்கல்நாயக்கன்பட்டியை சேர்ந்த சக்திவேல் என்பவருக்கு கல்யாணம் பண்றதா நிச்சயம் பண்ணோம் அப்பவே என் மகள் கல்யாணத்துல மணியும் பங்கெடுக்கணும்னு ஆசைப்பட்டேன்.

முன்னாடியெல்லாம் மாட்டுவண்டி, குதிரை வண்டியில பெண் அழைப்பு நடத்துவாங்க திடீர்னு அது நியாபகம் வந்துடுச்சி. அதே நிமிஷம் என் மணி வண்டியும் என் கண் முன்னால வந்து போச்சி.

நான், யார்கிட்டயும் சொல்லல பொண்ணை தருமபுரி பெரியார் சிலைக்கு பக்கத்துல அழைச்சிகிட்டு வந்து அங்கிருந்து மணி வண்டியில உட்காரவச்சி ஊர்வலமா அழைச்சிகிட்டு போனோம்.

ஊர்காரவங்களெல்லாம் என்னடா கேவலமா நாய் வண்டியில அழைச்சிகிட்டு போறனு பேசுனாங்க ஆனா நான் எதப்பத்தியும் கவலைப்படல.

என் பொண்ணும் நான் சொன்ன பேச்சை தட்டாம வண்டியில ஏறி உட்காந்திருச்சி ஏன்னா மணி எங்க குடும்பத்துல ஒருத்தன் என்று சொல்லும் தங்கவேல் , மாப்பிள்ளை வீட்லயும் என் உணர்வுகளை புரிஞ்சுகிட்டு எதுவும் சொல்லலை அது போதும் எனக்கு என்கிறார் உணர்ச்சி தழும்பும் குரலில்.

-எம்.புண்ணியமூர்த்தி

படங்கள் : வீ.சதீஸ்குமார்

Share.
Leave A Reply

Exit mobile version