பாம்பன் விசைப்படகு மீனவர் வலையில் ஆணாக இருந்து பெண்ணாக மாறும் களவாய் மீன் சிக்கியது.

இராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தெற்கு கடல் பகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் வியாழக்கிழமை கடலுக்குச் சென்றன.

மன்னார் வளை குடா பகுதியில் மீனவர்கள் நள்ளிரவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது மீனவர் ஒருவர் வலையில் இராட்சத புள்ளிக் களவாய் மீன் ஒன்று சிக்கியது.

அது சுமார் 25 கிலோ எடையும், 4 அடி நீளமும், 2 அடி உயரமும் உடையதாக இருந்தது.

மன்னார் வளைகுடா பகுதியில் அதிகபட்சமாக 10 கிலோ வரை எடை கொண்ட களவாய் மீன் மட்டுமே பிடிபடுவது வழக்கம். ஆனால், இது இராட்சத களவாய் மீனாக இருந்ததால், இதை பொதுமக்கள் நேற்று கடற்கரையில் ஆர்வத்துடன் வந்து பார்வையிட்டனர்.

இந்த மீன் குறித்து மரைக்காயர் பட்டினத்தில் உள்ள மத்திய மீன் ஆராய்ச்சி துறை ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறியது:

இந்த மீனின் விலங்கியல் பெயர் Epinephelus. தமிழில் களவாய் மீன் என்று அழைக்கப்படுகிறது. மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தாழங்களவாய், புள்ளிக் களவாய், மரக்களவாய் ஆகிய மூன்று வகை மீன்கள் காணப்படுகின்றன.

களவாய் மீன்களுக்கு ஆண் தன்மையும், பெண் தன்மையும் கலந்தே பிறக்கின்றன. இதனால் ஆணாக விரும்பினால் ஆணாகவும், பெண்ணாக விரும்பினால் பெண்ணாகவும் மாறும் வாய்ப்பு இயற்கையாகவே அவற்றுக்கு உண்டு.

ஆண் மற்றும் பெண் தன்மைகளோடு முதல் 4 ஆண்டுகளில் இருக்கும். அதைத் தொடர்ந்து களவாய் மீன் 2 அடி நீளம் வளர்ச்சி அடைந்து பெண்ணாக இனமுதிர்ச்சி அடையும். மீண்டும் தன்னுடைய 15-வது வயதில் ஆண் மீனாக மாறுகிறது.

களவாய் மீன்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டால், அதிக வயதான பெண் மீன்கள், ஆணாக மாறாமல் பெண்ணாகவே இருந்து தன்னுடைய இனத்தைப் பெருக்க துணை செய்யும் என்றார்.

Share.
Leave A Reply

Exit mobile version