சில தினங்களாக தமிழ்ச் சூழலில் நிலவிவந்த பரபரப்புக்கள், பதற்றங்கள் அனைத்தும் ஒருவாறு முடிவுக்கு வந்திருக்கின்றன.
அதேபோன்று சர்வதேச விசாரணை முடிந்துவிட்டது என்று ஒரு தரப்பினரும், இல்லை முடியவில்லை என்று இன்னொருசாராரும் விவாதித்துவந்த நிலையில், தற்போது அதற்கும் ஒரு தெளிவான பதில் கிடைத்திருக்கிறது.
மேற்படி அறிக்கையில் இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கான நீதி விசாரணை மேற்கொள்வதற்கு இலங்கையின் உள்ளக நீதிக் கட்டமைப்புக்கள் ஆற்றல்கொண்டதல்ல என்னும் யதார்த்தம் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
அந்த அடிப்படையிலேயே இடம்பெற்ற குற்றங்களை விசாரிப்பதற்கென கலப்பு நீதிமன்ற முறைமையை மனித உரிமைகள் பேரவை முன்மொழிந்திருக்கிறது.
இதன் மூலம், இடம்பெறும் விசாரணைகளின் போது இலங்கையின் நீதிபதிகளும் அதேவேளை சர்வதேச நீதிபதிகளும் பங்குகொள்வர்.
மேலும், சர்வதேச விசாரணையாளர்கள், வழங்கறிஞர்களும் இதில் பங்குகொள்வர். ஆனால், இது மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகள் மட்டுமேயாகும்.
இனிவரப் போகும் நாட்களில் மேற்படி விசாரணை அறிக்கையானது, பூகோள அரசியல் முரண்பாடுகள் என்னும் தராசுகொண்டு நிறுத்துப் பார்க்கப்படும்.
அவ்வாறு அளவிடப்பட்ட பின்னர் எஞ்சப் போவதுதான் இலங்கையின் மீதான பிரேரணையாக வெளிவரும். ஆனால், மனித உரிமைகள் பேரவையின் விசாரணைக் குழு அதன் பணியை மிகவும் நேர்த்தியாக நிறைவுசெய்திருக்கிறது என்பதில் இரு கருத்திற்கிடமில்லை.
மேற்படி விசாரணை அறிக்கையில் இலங்கையின் புதிய ஆட்சியாளர்களின் அணுகுமுறைகள் வரவேற்கப்பட்டிருக்கின்றன.
ஜெனிவா அரசியலுக்கு தலைமை தாங்கும் அமெரிக்கா ஒரு உள்ளக பொறிமுறை ஒன்றிற்கே ஆதரவாக இருக்கிறது. இதனை வெறும் மனித உரிமைகள் கண்கொண்டு பார்ப்போமானால் எமது கணிப்புக்கள் அனைத்தும் தவறாகும்.
இந்த இடத்தில் பிறிதொரு விடயத்தையும் காணலாம், ஜ.நா. விசாரணை அறிக்கை வெளிவரவிருந்த சூழலில், தமிழக சட்டப் பேரவையில் ஜெயலிலிதா சர்வதேச விசாரணைக்கு ஆதரவாக, தீர்மானம் ஒன்றை வேற்றியிருக்கிறார்.
இவை தனியான ஆய்வுக்குரியவை. தமிழ்நாட்டின் அரசியல் உணர்வுத்தளம் எப்போதுமே கொழும்பின் ஆட்சியாளர்களுக்கு எதிர்நிலையில்தான் இருந்துவந்திருகிறது.
அப்படியொரு எதிர்நிலைதான் கடந்தகாலத்தில் இந்தியத் தலையீட்டிற்கான அகக் காரணியாகவும் இருந்தது.
ஒவ்வொரு பலம்பொருந்திய நாடுகளும் அதற்கென பிரத்தியேக வேலைத்திட்டங்களை கொண்டிருக்கின்றன. எனவே, இதனையும் ஒரு புவிசார் அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்க முடியும் என்று ஒருவர் கூறினால் அதனையும் நிராகரிக்க முடியாது.
அடிப்படையில் எங்களுடைய பிரச்சினை என்பது வெறும் மனித உரிமைகள்சார் விடயமல்ல. மாறாக, ஆட்சி மாற்றம் அதனைத் தொடர்ந்து ஏற்பட்டிருக்கும் தேசிய அரசு, அதனை ஒரு குறிப்பிட்ட காலம்வரையில் பேணிப்பாதுகாக்க வேண்டிய தேவை, இதன் பின்னாலுள்ள புவிசார் அரசியல் முரண்பாடுள் என்று பல விடயங்களுடன் இது தொடர்புபட்டிருக்கிறது.
இவ்வாறான பல விடயங்களையும் பாதிக்காத வகையில் விளைவுகளை நிறுத்துப்பார்க்கும் ஒரு அணுகுமுறையின் ஊடாகத்தான் இலங்கையின் இறுதி யுத்தம் தொடர்பான விசாரணை பொறிமுறை தீர்மானிக்கப்படும்.
மேலும், இலங்கையின் இறுதி யுத்தம் தொடர்பில் போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளன என்று கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் கூட, அதற்கான பொறுப்புமிக்கவர்கள் யாரென்பது, குறித்த அறிக்கையில் வெளிப்படுத்தப்படவில்லை.
பொதுவாக, தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை அரச படைகள் என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றனவே ஒழிய, அரச படைகளில் இப்படியான குற்றங்களை இழைத்தவர்கள் யார் என்பதை விசாரித்து, அவர்களை நீதியின் முன்கொண்டுவருவதற்கான பொறிமுறை பற்றித்தான் அறிக்கையில் பிரஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது.
விசாரணை அறிக்கையின் தமிழீழ விடுதலைப் புலிகளால் இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பிலும் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
அவ்வாறாயின் அந்தக் கோணத்திலும் விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும். விடுதலைப் புலிகளின் முன்னணி தலைவர்கள் அனைவரும் இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்டு விட்டார்கள் என்று கூறப்பட்டாலும், அவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் என்பதற்கான ஆதாரங்களை தேடும் விசாரணையாகவும் இது அமைய வேண்டியிருக்கிறது.
இந்த விடயங்கள் அனைத்தும் இடம்பெற வேண்டுமாயின் அதனை வேறு எங்கும் விசாரிக்க முடியாது. இலங்கையில்தான் விசாரிக்க வேண்டும்.
அந்த வகையில் ஒரு உள்ளக பொறிமுறை அவசியம் என்னும் வாதத்தையே அமெரிக்கா தலைமையிலான ஆதரவு சக்திகள் முன்வைக்கும்.
ஆனால், இந்த பொறிமுறையில் கலப்பு நீதிமன்ற முறைமையை உள்ளடக்கப்படுவதை இலங்கை அரசு ஏற்றுக் கொள்ளுமா என்பதும் கேள்வியே!
தேசிய அரசும், முன்னைய மஹிந்த அரசு வாதிட்டது போன்று, இலங்கையின் இறைமை தொடர்பிலேயே வாதிடும்.
ஒரு நட்பு நாடு என்னும் வகையில் இலங்கைக்கு அவகாசம் வழங்கும் ஒரு புறச் சூழலே பிரகாசமாக தெரிகிறது.
இந்த விடயங்களின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறானதொரு பாத்திரத்தை ஆற்றப் போகிறது?
உண்மையில் சிலர் கூட்டமைப்பை விமர்சிப்பது போன்று இதில் பெரியளவில் கூட்டமைப்பால் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது.
கடந்த ஒரு மாதகாலமாக கூட்டமைப்பின் மீது மேற்கொள்ளப்பட்ட விமர்சனங்கள் இரண்டு வகைத்தானது. ஒன்று, கூட்டமைப்பு உள்ளக விசாரணை ஒன்றையே கோரி நிற்கிறதென்று ஒரு சாரார் விமர்சிக்க, இன்னொரு சாராரோ, கூட்டமைப்பின் செயற்பாடுகளை டக்ளஸ் தேவானந்தாவோடு ஒப்பிட்டு விமர்சித்திருந்தனர்.
உண்மையில் மேற்படி இரண்டு வகையான விமர்சனங்களும் அடிப்படையிலேயே சிறுபிள்ளைத்தனமானது. சிலர் வாதிடுவது போன்று கூட்டமைப்பு சர்வதேச விசாரணை வேண்டும் என்று பத்திரிகைகளில் அறிக்கை விட்டவுடன், சர்வதேச விசாரணை வந்துவிடப் போவதில்லை.
நான் மேலே குறிப்பிட்டது போன்று பலம்பொருந்திய நாடுகள் ஒன்றை ஆதரிப்பது அல்லது எதிர்ப்பதன் மூலம் வரப்போகும் இறுதி விளைவை நிறுத்துப் பார்த்துத்தான் ஒவ்வொரு முடிவுகளையும் எடுப்பர்.
கூட்டமைப்பின் விருப்பங்கள், கோரிக்கைகளுக்கு ஏற்ப அவர்கள் தங்களின் முடிவுகளை மாற்றிக்கொள்ளப் போவதில்லை.
ஆட்சி மாற்றத்திற்கு பின்னரான இலங்கையின் மீது, அமெரிக்கா கூடுதல் ஆர்வத்தை காண்பித்துவருகிறது. யுத்தம் முடிவுற்றதும் இலங்கையின் மீது மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததும் அமெரிக்காதான்.
அமெரிக்காவினால் இலங்கையின் மீது கொண்டுவரப்பட்ட பிரேரணைகளின் விளைவுதான் தற்போது வெளிவந்திருக்கும் விசாரணை அறிக்கை.
இலங்கையின் மீது கொண்டுவரப்பட்ட மூன்றாவது பிரேரணையின் மூலமாகவே இவ்வாறானதொரு விசாரணையை மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரால் முன்னெடுக்க முடிந்தது.
மேற்படி பிரேரணை, பேரவையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இந்தியாவும் அமெரிக்காவும் இவ்வாறானதொரு விசாரணை அவசியம் என்பதை ஏற்றுக் கொண்டிருந்தன.
இந்த விடயத்தை அன்று அமெரிக்காவோ அல்லது இந்தியாவோ தேவையற்றது என்று கருதி நிராகரித்திருந்தால், இன்று இவ்வாறானதொரு விசாரணை அறிக்கை வெளிவந்திருக்காது.
இந்த விடயங்களை கருத்தில் கொள்ளாமல் கூட்டமைப்பை விமர்சிக்க முற்படுவது தவறு. அமெரிக்காவுடன் ஒத்துழைத்துச் செல்ல முடியாதென்று கூட்டமைப்பால் கூற முடியும்.
அவ்வாறானதொரு அறிக்கையை வெளியிடுவது சிரமமான காரியமும் அல்ல. ஆனால், இதனால் விளையப் போகும் நன்மை என்ன? அவ்வாறு கூட்டமைப்பு கூறுமாக இருந்தால் அது இலங்கை அரசு பொறுப்புக் கூறலில் இருந்து தப்புவதற்குத்தானே வழிவகுக்கும்!
அதற்கான வாய்ப்பை விசாரணை அறிக்கை வழங்கியிருக்கிறது. கூட்டமைப்பின் மீது ஆக்கபூர்வமான விமாசனங்களை இப்பத்தி மறுக்கவில்லை. ஆனால், விடயங்களின் ஆழத்தை புரிந்துகொள்ளாத விமர்சனங்கள் பொறுப்பற்றவை.
இதே போன்றுதான் கூட்டமைப்பின் தலைவர் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதையும், கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் குழுக்களின் பிரதித் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருப்பதையும் அடியொற்றி கூட்டமைப்பு அரசுடன் ஒத்துப் போய்விட்டதாக விமர்சிக்க முற்படுவதானது இன்னொரு தவறான புரிதலாகும்.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் என்றுமில்லாத அதேவேளை, ஏனைய நாடுகள் எதிலும் நிகழாத ஒரு விடயமாக, இலங்கையின் இரண்டு பிரதான எதிரும் புதிருமான கட்சிகள் ஒன்றிணைந்து தேசிய அரசு ஒன்றை ஏற்படுத்தியிருக்கின்றன.
ஆனால், இந்த தேசிய அரசோடு கூட்டமைப்பால் இணைந்து பயணிக்க முடியாது. அதேவேளை, ஒரேயடியாக எதிர்ப்பு அரசியலையும் பிரயோகிக் முடியாது.
இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு அணுகுமுறையே கூட்டமைப்பிற்குத் தேவை. அந்த அடிப்படையில் கூட்டமைப்பு வகுத்துக்கொண்ட, தந்திரோபாய அணுகுமுறையின் வெளிப்பாடுகள்தான், மேற்படி பதவிநிலைகள்.
சூழ்நிலைமைக்கு ஏற்பத்தான் செயல்பட முடியும். நாடாளுமன்ற தேர்லைத் தொடர்ந்து இலங்கையின் மூன்றாவது கட்சியான கூட்டமைப்பிடமிருந்து இப்படியொரு அணுகுமுறையைத்தான் அமெரிக்க தலைமையிலான மேற்குலகும் இந்தியாவும் எதிர்பார்த்திருந்தது.
இப்போதிருக்கின்ற சூழல் மாற்றமடையும் போது அதற்கேற்றவாறான அணுகுமுறைகள் தொடர்பில் நாம் பின்னர் பார்க்கலாம். நிலைமைகளை வெறும் ‘அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி’ என்னும் கோணத்தில் பார்ப்பது தவறான விளைவுகளேயே அறுவடையாக்கும்.
ஆட்சி மாற்றத்திற்குப் பின்னரான இலங்கையானது, அதிகம் மேற்குலக மற்றும் இந்தியாவின் அதிக கரிசனைக்குரிய நாடாகவே இருக்கிறது. இது முன்னரும் இருந்த ஒன்றுதான்.
ஆனால் ஆட்சி மாற்றம் ஒன்றின் மூலம் சீன நகர்வுகளுக்கு முட்டுக்கட்டை போடப்பட்டிருக்கும் புறச் சூழலில், மீண்டும் நிலைமைகள் மாற்றமடைவதை, பதற்றங்கள் ஏற்படுவதை மேற்படி நாடுகள் நிச்சயம் விரும்பாது.
இந்த நிலையில், கூட்டமைப்பு தமிழ் மக்களின் நலனில் நின்று நடவடிக்கைகளை முன்னெடுக்கும் அதேவேளை, மேற்குலக இந்திய நலன்களுக்கு குந்தகமான முடிவுகளையும் எடுக்க முடியாது.
அப்படி எடுப்பதால், தேசிய அரசின் நல்லிணக்க முயற்சிகளுக்கு கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்னும் குற்றசாட்டே மேலெழும்.
தற்பொழுது கூட்டமைப்பு மேற்கொண்டுடிருக்கும் தீவிர எதிர்ப்பற்ற அணுகுமுறையால், அரசு அப்படியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியாதளவிற்கு சிறைப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், இந்த விடயங்கள் அனைத்தையும், தமிழ் மக்களுக்கான ஒரு நியாயமான அரசியல் தீர்வு நோக்கி, சாதகமாக கையாளுவதில்தான் கூட்டமைப்பின் வெற்றி தங்கியிருக்கிறது.
இதற்கு முதலில் கூட்டமைப்புக்குள் ஒரு தெளிவான கொள்கைசார் உடன்பாடு அவசியம். சர்வதேச விசாரணை தொடர்பிலும் ஒரு தெளிவான கலந்துரையாடல் இருந்திருக்குமாயின் தேவையற்ற விவாதங்கள் ஏற்பட்டிருக்காது.
– யதீந்திரா