நுவரெலியா மாவட்டத்தில் உள்ள கொத்மலை பிரதேச செயலக அதிகாரத்துக்கு உட்பட்ட  கொத்மலை, ரம்பொடை வெதமுல்ல கயிறுகட்டி (Lily’s Lane Estate) தோட்டத்தில் இடம்பெற்ற பாரிய மண்சரிவில் ஐந்து பெண்கள் பலியாகியுள்ளதாகவும் இவர்களது சடலங்கள் கொத்மலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இருகால்களும் உடைந்த நிலையில் செல்லையா கணேசன் (வயது 50) என்பவர் மீட்கப்பட்டு ஆபத்தான நிலையில் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரியவருகிறது.

இதேவேளை, மூன்று சிறுவர்கள் காணாமல் போயுள்ளனர். இவ் அனர்த்தத்தில் 9 குடும்பங்களைச் சேர்ந்த 30 பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தொடர் மலையில் 300க்கும் மேற்பட்டவர்கள் நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று பிற்பகல் 2.30 மணிக்கும் 3 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இடம்பெற்ற இந்த பாரிய மண்சரிவில் தனி வீடொன்றும் (குவாட்டஸ்) 6 வீடுகளை கொண்ட லயனும் (தோட்டக்குடியிருப்பு) சேதமடைந்துள்ளன.

கயிறுக்கட்டி தோட்டத்து கோயிலுக்கு அண்மையில் உள்ள ஒத்தசைட் (ஒரு பக்கத்தில் மட்டும் 6 வீடுகளை கொண்ட லயன் அறை) அல்லது ஆற்றோர லயன் என்று கூறப்படுகின்ற தோட்டக்குடியிருப்புகளே இவ்வனர்த்தத்தில் சிக்கியுள்ளன.

ஆறு வீடுகளை கொண்ட லயனும், அந்த லயனுக்கு மேல் உள்ள தனி வீடுமே பாதிக்கப்பட்டுள்ளன. லயன் அறைகளின் பின்பக்கம் முற்றாக சேதமடைந்து, பாராங் கற்களுடன் கூடிய மண், வீடுகளை உடைத்துக்கொண்டு முன்பக்கமாக வந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மண்சரிவுக்குள் அகப்பட்டுள்ளவர்களை மீட்பதற்கு பெக்கோ இயந்திரம் வரவழைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

மரணமடைந்த மூவரில் சிறுவரொரும் 50 வயதான முதியவர் ஒருவரும் அடங்குவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் மேலும், தெரியவருவதாவது,

ஒத்தசைட் லயத்துக்கு மேலே உள்ள தனிவீட்டுக்கு அருகில் பாரிய இடியொன்று விழுந்துள்ளது. கடும் மழைக்கு மத்தியில் அந்த சத்தத்துடன் அள்ளுண்டு வந்த மண்ணும், பாராங்கற்களும் தனிவீட்டை அப்படியே சேதப்படுத்தி, புரடிக்கொண்டு லயத்தின் பின்புறமாக விழுந்துள்ளது.

அந்த தனி வீட்டில், பாடசாலை மாணவர்கள் உட்பட எட்டுபேர் இருந்ததாக ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

லயத்தின் பின்புறத்தில் விழுந்து சரிந்த மண்ணும் பாராங்கற்களும், வீடுகளை உடைத்துக்கொண்டு முன்பக்கமாக வந்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.

பாரிய மண்சரிவு என்பதால் உடனடியாக மீட்பு நடவடிக்கைகளில் இறங்க முடியாதுபோய்விட்டதாக தெரிவித்த, பிரதேச வாசிகள், மண்சரிவில் சிக்குண்டுள்ளோரை மீட்பதற்காக பெக்கோ இயந்திரத்தை கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.

அந்த பகுதியில் வழமையை விடவும் கடுமையான மழை பெய்துகொண்டிருப்பதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

இதேவேளை, மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், தொழிலாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கை இன்று மாலை 6 மணியுடன் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இவ் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தோட்ட பாடசாலை, ஆலய மண்டபம், சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீட்பு பணிகளுக்கு இராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் சீரற்ற பாதைக் காரணமாக மீட்பு பணி தாமதமாகியுள்ளதாகவும் தெரியவருகிறது.

ரம்பொடவில் இடம்பெற்ற மண் சரிவில் ஜந்து பெண்கள் பலி (காணொளி)

Share.
Leave A Reply

Exit mobile version