பெங்களூர்: மனைவியின் பிறந்த நாள் தினத்தன்று, அவரை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடிய கணவர் 24 மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.
கள்ளத்தொடர்பு விவகாரத்தில் அந்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
காதல் மணம்
பெங்களூரு நகரின், மைசூர் ரோடு, பேட்டராயனபுரா பகுதியை சேர்ந்தவர் நாராயண ரெட்டி. இவரது மனைவி விஜயலட்சுமி (23). 4 வருடங்கள் முன்பு காதல் மணம் செய்த இத்தம்பதிக்கு 3 வயதில் மகன் உள்ளான். விஜயலட்சுமி, சககார நகர் பகுதியிலுள்ள ஒரு மருத்துவமனையில் ரிஷப்சனிஸ்ட்டாக வேலை பார்த்துவந்தார்.
பிறந்த நாள்
கடந்த வியாழக்கிழமை விஜயலட்சுமி 23வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இரவு 12 மணியளவில் கேக் வெட்டப்பட்டுள்ளது.
அதன்பிறகு, விஜயலட்சுமிக்கு, கணவன் நாராயணரெட்டி அதிகமாக மது ஊற்றி கொடுத்ததாக கூறப்படுகிறது. அவரும் அதை குடித்துவிட்டு தூங்க சென்றுள்ளார்.
கழுத்தறுப்பு
பெட்ரூமில், விஜயலட்சுமியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நாராயண ரெட்டி, கத்தியை எடுத்து அவரது கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பிறந்த நாள் கேக் வெட்டிய சில மணித்துளிகளில் விஜயலட்சுமியின் கழுத்து வெட்டப்பட்டுள்ளது.
இதன்பிறகு பாத்ரூம் ஜன்னல் வென்டிலேட்டர் வழியாக, நாராயணரெட்டி அறையை விட்டு வெளியே வந்துள்ளார்.
தற்கொலை நாடகம்
காலையில் எதுவும் தெரியாதது போல மனைவி இறந்ததை பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுப்பது போல கொடுத்துள்ளார்.
இரவு கேக் வெட்டியதும், பைக்கில் ஜாலி ரைட் போக மனைவி வற்புறுத்தியதாகவும், வண்டி இன்சூரன்ஸ் காலாவதியாகிவிட்டதால், தன்னால் அழைத்துச் செல்ல முடியாது என்று கூறியதாகவும், இதனால் கோபத்தில் சென்று விஜயலட்சுமி தனது அறை கதவை தாழிட்டுக்கொண்டதாகவும் உள்ளேயே கத்தியால் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் நாராயணரெட்டி வாக்குமூலம் அளித்தார்.
நாராயண ரெட்டி வாக்குமூலம் அடிப்படையில், போலீசார் மர்மச்சாவு என்ற வகையில் வழக்கு பதிந்தனர். ஆனால், பிரேத பரிசோதனை செய்த டாக்டரோ, விஜயலட்சுமி, தன்னைத்தான் கத்தியால் அறுத்தது போன்ற காயம் போல இல்லை என்றும், வேறு ஒருவர் கழுத்தை அறுத்தது போன்ற காயம்தான் தென்படுவதாகவும் அறிக்கையில் அளித்துள்ளார்.
கள்ளக்காதல்
இதனால் சந்தேகமடைந்த போலீசார், நாராயண ரெட்டியை துருவிதுருவி விசாரித்தனர். அப்போது, மனைவியை கொலை செய்துவிட்டு, பூட்டிய அறைக்குள் இருந்து பாத்ரூம் வழியாக வெளியே வந்த தகவலை அவர் ஒப்புக்கொண்டார்.
மகேஷ் என்பவருடன் விஜயலட்சுமிக்கு கள்ளக்காதல் ஏற்பட்டதாகவும், அதை கண்டித்தபோது தகராறு ஏற்பட்டதாகவும், எனவே கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தாய் கொலையான நிலையில், தந்தை சிறையிலுள்ளதால், 3 வயது குழந்தை தாத்தா-பாட்டி பராமரிப்பில் விடப்பட்டுள்ளது.