இலங்கையில் நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேசத்தில் ஏற்பட்ட மண் சரிவையடுத்து தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ள வெதமுல்ல தோட்ட மக்கள், பழைய இடங்களுக்கு திரும்பும் சூழ்நிலை தற்போதைக்கு இல்லை என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கூறுகின்றது.
மண்சரிவில் இறந்தவர்களின் மரணச் சடங்குகள்
மண் சரிவு ஏற்பட்ட அந்த பகுதியில் துப்பரவுப் பணிகள் முடிந்த பின்னரே அங்கு திரும்பக் கூடியதாக இருக்கும் என இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தின் துணை இயக்குநரான பிரதீப் பொடிப்பிலி கூறுகின்றார்.
தற்போது 200க்கும் அதிகமானவர்கள் வெளியேறி பாடசாலையொன்றில் தங்கியுள்ள நிலையில் அவர்களுக்கான அடிப்படை நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
நாட்டின் பல பாகங்களிலும் நிலவும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக பதுளை, இரத்தினபுரி மற்றும் கேகாலை உட்பட 7 மாவட்டங்களில் மண் சரிவு அபாயம் இருப்பதாக இன்று ஞாயிற்றுக்கிழமை பகல் அரசாங்கத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அந்த அபாயம் மாலையில் நீங்கிவிட்டதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தின் துணை இயக்குநர் குறிப்பிட்டார்.
இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் மண் சரிவு அபாயம் நீக்கிவிட்டதாக அறிவித்தாலும் குறிப்பாக மண் சரிவு அபாயத்தை எதிர்கொள்ளும் பிரதேச மக்கள் அது தொடர்பான அச்சத்துடனே காணப்படுகின்றார்கள்.
அதேவேளை கொத்மலை வெதமுல்ல தோட்ட மண் சரிவு சம்பவத்தில் சிக்கி உயரிழந்த பெண்கள் , குழந்தைகள் உட்பட 7 பேரின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெற்றன.