பத்திரிகையாளர் இக்பால் கொலையை அடுத்து போலீஸ் வட்டாரம் தாவூத் இப்ராஹிமின் தலைக்கு குறி வைக்கிறது.

தாவூத்தின் கூட்டாளிகள் ஆயூப், சையது உள்பட அவனுடன் இருந்த எல்லோரும் தலைமறைவு வாழ்க்கையை தேர்ந்தெடுத்து, பல்வேறு இடங்களில் தஞ்சம் புகுந்தனர்.

ஆடுன காலும், பாடின வாயும் சும்மா இருக்காது என்பதால் எங்கு சென்றாலும் வழக்கம் போல அவர்களின் கடத்தல் தொழில்களை விடுவதாக இல்லை.

பகல் பொழுதுகளில் நன்றாக குடிப்பது, சீட்டு விளையாடுவது என அவர்களுக்கு பிடித்த விஷயங்களை செய்து வந்ததனர்.

பகலெல்லாம் அலுவலகம், வேலை என்று உழைத்து களைத்துப்போய் தூங்கும் சாமானியர்கள் போல இல்லாமல் இரவில்தான் தாவூத் அண்ட் கோவிற்கு வேலையே ஆரம்பிக்கும்.

கடத்தல் தொழில் செய்யும் பொழுது ஒரு சில நேர்மையான அதிகாரிகள் கண்டிப்புடன் நடந்து கொள்வார்கள். அவர்களால் பல லட்சங்கள் மதிப்புள்ள கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டதால் கடும் அதிருப்தியில் இருந்தார்கள்.

அவர்களை மடக்கவே புதிய திட்டங்களை தீட்டினான் தாவூத்.

மும்பை 1970களில் பெரும் நகரமாக இருந்தது. அங்கு துறைமுகம் இருந்ததால் அதனை மையமாக வைத்து வடக்கு மும்பை, தெற்கு மும்பை என்று நான்கிற்கும் மேற்பட்ட பகுதிகளாக மும்பையை கூறு போட்டு வைத்து அவர்களுக்கு ஏதுவான தொழில்களை செய்து வந்தனர் மும்பையில் இருந்த ஃமாபியாக்கள்.

ஒவ்வொரு கூட்டத்திற்கும் ஒரு டான் இருந்தான். சிறு, சிறு குழுக்களாக இயங்கி வந்தனர். அவர்களுக்குள் கடும் தொழில் போட்டிகள் இருந்து வந்ததால் சில சமயங்களில் அரசு அதிகாரிகளுக்கு போட்டு கொடுப்பதும் நடப்பதுண்டு.

அது அவர்களுக்குள் பெரும் பகையை உண்டாக்கி, மார்க்கெட் போன்ற பொதுவான இடங்களில் அவர்கள் சந்திக்க நேரும் பொழுது மோதிக்கொள்வது உண்டு.

மோதினால் எப்படியும் குறைந்த பட்சம் ஒரு கொலையாவது விழும். பொது மக்களுக்கு இந்த மாதிரி சம்பவங்களால் பெரும் அச்சமும், பயமும் உண்டானது.

ஆனால் போலீஸ்காரர்களுக்கு இது போன்ற சம்பவம் நடந்தது என்றால் கொண்டாட்டம்தான். இது போன்ற செயல்களில் ரவுடிகள் அழிகிறார்கள் என்று அவர்களுக்குள் பேசிக்கொள்வார்கள்.

மும்பையில் அன்று முதல் இன்று வரை சாராயம் பிசினஸ் கொடிகட்டி பறப்பது யதார்த்தமான ஒன்று. அன்றைய மகராஷ்ட்ரா அரசு மதுவை தடை செய்து இருந்தது.

அதனால் மதுவிற்கு கடும் கிராக்கி இருந்து வந்தது. வடக்கு மும்பையை ஒட்டிய பகுதிகளில் சாராயத்தை காய்ச்சி, அதனை லாரி டியூப்களில் கடத்தி வருவது வழக்கம்.

சாராயம் சின்ன விஷயம் என்றாலும், அதன் மூலம்தான் அதிகபட்சமான நேரடி வருமானம் வந்தது மும்பை மாஃபியாக்களுக்கு.

dawood3-03(1)

இதனால், மும்பையில் கள்ளச் சாராயம் முதல் உயர் ரக மது வரை அவர்களின் தகுதிக்கு ஏற்ப கடத்தி அதை தொழில் செய்து வந்தனர்.

இதுபோன்ற தொழிலில் ஆரம்பித்து பிறகு எல்லா முன்னணி கள்ளக்கடத்தல் தொழிலையும் செய்து வந்தவன் பாசு தாதா என்பவன்.

இவனிடம் வேலை பார்த்து இவனுக்கு எல்லாமாக இருந்து வந்தவன் காலித் பயில்வான். பல்வேறு வழக்குகள் பிரச்னையில் பாசு தாதா சிக்கிக்கொண்டதால், அவனுக்குப் பிறகு காலித் பயில்வான் தனியாக தொழில் செய்து வளர்ந்து வந்தான்.

அவனுக்கு ஒரு குறிப்பிட்ட தொகைக்கு ஈடான வெள்ளிக்கட்டிகள் ஒரு பகுதியில் இருந்தது. அதனை வெளியே எடுக்க முடியாமல் திணறி வந்தான். அப்பொழுது தாவூத்தின் உதவியை நாடியதும் அவனுக்கு தாவூத் உதவி செய்தான்.

நடுக்கடலில் வெள்ளிகட்டிகள் கொண்ட சரக்கு கப்பல், கஸ்டம்ஸ் கண்ணில் படாமல் மும்பைக்கு வர வேண்டும். சிக்கினால் தொழில் உள்பட யார் யார் அதன் பின்னணியில் இயங்குகிறார்கள் என்பதோடு இல்லாமல், பல்வேறு நிலுவை வழக்குகளும் சிக்குபவர்கள் மீது விழும் என்பது தெரிந்தும் தாவூத் துணிந்து செயலில் இறங்கினான்.

அதற்காக அவன் நேரடியாக களத்தில் இறங்கவில்லை. கஸ்டம்ஸ் குடியிருப்பில் புகுந்த தாவூத்தின் ஆட்கள், அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் கஸ்டம்ஸ் உயர் அதிகாரி ஒருவரின் ஆசை மகளை தூக்கிக்கொண்டு போனார்கள்.

சினிமா பாணியில் நடந்தது போல இருக்கு என்று நினைக்கலாம். இங்கு நடந்த உண்மை சம்பவங்கள்தான் சினிமாவில் பின்பு காட்சிகளாக எடுக்கப்பட்டன.

பின்பு அந்த வெள்ளிக்கட்டிகள் அனைத்தும் வெளியே கொண்டு வரப்பட்டன. அந்த சம்பவத்திற்க்கு பிறகு போலீஸ், தாவூத்தை சல்லடை போட்டு தேடியது. சிக்கவில்லை.

பத்திரிகையாளர் இக்பால் கொலை செய்யப்பட்ட சம்பவம் உள்பட பல்வேறு வழக்குகளில் தாவூத் சிக்கினால்தான் பல்வேறு சம்பவங்களை வெளியே கொண்டு வரமுடியும் என்பதால் தாவூத்தை பிடிக்க முடியாமல் திணறி வந்தது போலீஸ். அதற்கு பிறகு தாவூத்திற்கு பல்வேறு வழிகளில் உதவினான் காலித்.

தாவூத்தின் அடாவடி சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. தாவூத்திற்கு போதை ஊசி போடும் பழக்கம் இருந்தது.

பல்வேறு சமயங்களில் போதை ஊசியை போட்டால் அவன் என்ன செய்வான் என்று அவனுக்கே தெரியாது. ஓநாய் போன்று மிகக் கொடூரமாக நடந்து கொள்வான் தாவூத்.

ஒரு முறை போதை ஊசி பயன்படுத்திவிட்டு காலித்துக்கு எதிரியாக இருந்த, வேறு முகாமை சேர்ந்த ஒருவனை போட்டுத் தள்ள திட்டம் தீட்டினான்.

திட்டம் தீட்டியதுடன் அதற்காக ஐந்து நிமிடம் கூட தாமதிக்காமல் அவனது இருப்பிடம் நோக்கி சென்றான் தாவூத். அங்கு அவன் இல்லை என்பதால் அவன் வழக்கமாக குடிக்க செல்லும் பார் ஒன்றிக்கு திபு திபுவென்று ஆட்களுடன் நுழைந்த தாவூத்தும், அவனது ஆட்களும்  அந்த பாரை நாசம் செய்கிறார்கள்.

எதிரிகளும் பயங்கரமாக மோதிக்கொண்டார்கள். துப்பாக்கி வெடிக்கிறது. தாவூத் ஆட்களில் ஒருவன் கொல்லப்படுகிறான்.

ஆனால், யாரை ஒழிக்க வேண்டும் என்று கிளம்பி போனார்களோ அவனை மட்டும் இல்லாமல், அவனுக்காக வேலை பார்த்த ஐந்து நபர்கள் உள்பட அனைவரையும் கொடூரமாக கொலை செய்கிறார்கள் ஒரே இரவில்.

தனது நண்பனுக்கு எதிரியாக இருந்த சாம்ராஜ்யத்தை ஒழித்து விட்ட சந்தோஷத்தில் தாவூத் சென்றான். மறுநாள் அனைத்து செய்தித்தாள்களிலும், ‘கடத்தல் மாஃபியாகளுக்குள் மோதல்; ஆறுபேர் பலி!’  என்கிற செய்தி வந்தது. யார் இந்த சம்பவத்தை செய்தது என்று ஒட்டு மொத்த மும்பையும் குழம்பியது.

ஒரு வாரம் கழித்துதான் நடந்த கொலைக்கு காரணம் தாவூத் என்று தெரிய வந்தது. அதோடு ஒட்டு மொத்த மும்பையில் இருக்கும் மாபியாக்களுக்கு தாவூத் பற்றி தெரிய வருகிறது.

தாவூத்தின் தலைக்கு போலீஸ் குறி வைத்து துரத்தியது. இன்னொரு பக்கம் தாவூத் தனக்கு வேலை செய்ய வேண்டும் என்று குஜராத், மாகி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்வேறு முக்கியமான தாதாக்கள் அழைப்பு விடுத்தனர்.

தாவூத் யார் பக்கமும் போகவில்லை. தாவூத்துடன் நட்பு வைத்து ஒருநாள் விருந்து உண்டாலும், தனக்கு பயன்படும் என்று மும்பையை சுற்றி வந்தனர் பல்வேறு கடத்தல் மன்னர்கள்.

சிலர் தாவூத்தின் வளர்ச்சியை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், அவனை அவனுடைய நண்பனை வைத்து கொலை செய்ய வேண்டும் என்று திட்டம் தீட்டினார்கள்.

இதனால் தாவூத்திற்கு அடைக்கலம் கொடுத்து வந்தவர்களும், தம்மால்தான் தாவூத் வளர்ந்தான் என்று பேசத் தொடங்கினர்.

அதனால் காலித் பயில்வான் உள்பட பல்வேறு நபர்களும் தாவூத்தை பழி வாங்க காத்திருந்தனர். தாவூத், தனது தலை தப்பிக்க வேண்டும் என்றால் உடன் இருக்கும் தலையை பலி கொடுக்க அஞ்சமாட்டான்.

பல்வேறு சண்டைகளில் தனது குருப்பில் இறந்தவர்களுக்காக பெரியதாக வருந்தியதில்லை என்ற முனகல்கள் தாவூத்தின் குரூப்பில் இருந்து வந்தது.

இக்பால் கொலை வழக்கில் பல்வேறு முக்கியமான புள்ளிகளுக்கும் தொடர்பு இருந்தது. இக்பால் கடத்தல் தொழிலின் ஆணி வேர் யார் என்பதை எழுதி இருந்தார்.

அதனால் பல்வேறு தலைகள் அந்தக் கொலையில் இருந்து தப்பிக்க, தாவூத் கூட்டாளியான ஆயூப்பை கொலை செய்ய திட்டம் தீட்டினார்கள்.

அவர்கள் குறித்த தேதியில் கொடூரமாக நடுத்தெருவில் கொலை செய்யப்பட்டான். கைகள், உடம்பு என்று உடம்பில் பல்வேறு இடங்களில் கத்தியால் கிழித்து குதறி இருந்தார்கள்.

நடுத்தெருவில்,  ‘காப்பாற்றுங்கள்…!’ என்று கத்திக்கொண்டு, ஓட ஓட ரத்தம் தெறிக்கும் அளவிற்கு கொலை செய்யப்பட்டான் ஆயூப்.

முதல் முறையாக தாவூத்தின் ஆள் ஒருவன் பயங்கரமாக கொலை செய்யப்பட்டான். இந்த சம்பவம் தாவூத்தை உலுக்கியதா?

அடுத்து நடந்தது என்ன?

-சண்.சரவணக்குமார்

இந்த தொடரின் முந்திய அத்தியாயங்களை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்…
இலக்கியாவின் செய்திகளை உடனுக்குடன் பார்வையிட..
https://www.facebook.com/ilakkiyainfo/likes

Share.
Leave A Reply

Exit mobile version