உத்தரப்பிரதேசத்தின் தாத்ரியில் மாட்டு மாமிசத்தை சாப்பிடதாகக் கூறப்பட்டு இஸ்லாமியர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதையடுத்து அந்தப் பகுதியில் ஏற்பட்ட பதற்றம் இன்னும் நீடித்துவருகிறது.
அக்லாக்கின் குடும்பத்தினர் திங்கட்கிழமையன்று இரவு நடந்த சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை.
அன்று இரவு அதாவது, அக்டோபர் 28ஆம் தேதி முஹம்மது அக்லாக் என்ற அந்த ஐம்பது வயது நபரின் வீட்டில் மாட்டின் மாமிசம் இருந்தது என்று ஒரு கும்பல் அவரது வீட்டிற்குள் புகுந்து அவரை அடித்துக் கொன்றது.
அன்று இரவு பத்தரை மணியளவில், விவசாயக் கூலியான முஹம்மது அக்லாக்கின் குடும்பம் வழக்கம்போலவே, சாப்பிட்டுவிட்டு படுக்கச் செல்லும்போதுதான் அந்த தாக்குதல் நடந்தது.
முஹம்மது அக்லா தனது மகன் படுத்திருந்த அறைக்கு பக்கத்து அறையில் அப்போது தூங்கிக்கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் பெரும் ஆவேசத்துடன் ஓடிவந்த கும்பல் ஒன்று கம்பு, கத்தி, நாட்டுத் துப்பாக்கிகளுடன் அவர்களுடைய வீட்டில் நுழைந்தது.
அக்லாவின் குடும்பம் ஒரு பசுவைக் கொன்று சாப்பிட்டுவிட்டதாக கும்பலைச் சேர்ந்தவர்கள் கூச்சலிட்டனர்.
“எல்லாப் பக்கமிருந்தும் அவர்கள் வந்தார்கள். சுவரின் மீது ஏறினார்கள். வாசல் வழியாக வந்தார்கள். வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து நாங்கள் பசுவைக் கொன்றதாகக் குற்றம்சாட்டினார்கள் என்கிறார் அக்லாக்கின் 75 வயதுத் தாயான அஷ்கரி அக்லாக்.
“அந்தப் பகுதியில் இருக்கும் யாரும் பார்க்காமல் நாங்கள் எப்படி வீட்டிற்குள் பசுவைக் கொண்டுவர முடியும். இந்தப் பகுதியில் நாங்கள் மட்டும்தான் இஸ்லாமியக் குடும்பம்” என்கிறார் அவர்.
வீட்டிற்குள் நுழைந்த அந்தக் கும்பல், குளிர்சாதனப் பெட்டியில் இருந்த மாமிசத்தை காட்டி கேள்வியெழுப்பியது. ஆனால், அது ஆட்டின் மாமிசம் என்று அக்லாக்கின் கூடும்பத்தினர் கூறினர். ஆனால், அந்தக் கும்பல் அதனை ஏற்கவில்லை.
அக்லாக்கின் குடும்பத்தினர் எவ்வளவோ கெஞ்சியும் பெண்கள் உள்ளிட்ட அனைவரையும் அடிக்க ஆரம்பித்தது அந்தக் கும்பல்.
சிலர் அக்லாக் தூங்கிக்கொண்டிருக்கும் அறைக்குள் நுழைந்தனர்.
அவருக்கு அருகில் இருந்த தையல் எந்திரத்தைத் தூக்கி அவர் தலையில் போட்டனர். பக்கத்து அறையில் இருந்த அவரது மகனையும் வெளியில் இழுத்துவந்தனர். அதற்குப் பிறகு கொடூரமாக இருவரையும் கும்பல் தாக்கியது.
அந்தக் குடும்பத்திற்கு அருகில் இருந்த இந்துக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இதனைத் தடுக்க முயன்று முடியாமல் போகவே காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
ஒரு மணி நேரம் கழித்து காவல்துறை அங்கு வந்தபோது, அக்லாக் இறந்துபோயிருந்தார். அக்லாக்கின் மகனான தானிஷ் மிக மோசமாக காயமடைந்திருந்தார்.
கோவிலில் வந்த அறிவிப்பு
அருகில் உள்ள ஒரு கோவிலில் செய்யப்பட்ட அறிவிப்பே இந்தச் சம்பவத்திற்கு மூலகாரணமாக கூறப்படுகிறது.
யாரோ ஓருவர் அந்தப் பகுதியில் பசுவைக் கொன்று சாப்பிட்டதாக கோவிலில் இருந்த ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டது. ஆனால், யார் அந்த அறிவிப்பைச் செய்தார்கள் என்பது தெரியவில்லை.
அப்படி ஒரு அறிவிப்பு செய்யப்பட்டதை, தான் கேட்டதாக அந்தக் கோவிலுக்கு அருகில் கடை வைத்திருக்கும் பங்கஜ் குமார் தெரிவித்தார்.
“நான் கையைக் கழுவிக்கொண்டுவருவதற்கு முன்பாக பெரிய கும்பல் அந்த வீட்டிற்கு முன்பு குவிந்துவிட்டது. யாரும் எதுவும் செய்யமுடியவில்லை” என்கிறார் பங்கஜ்.
அடையாளம் தெரியாத சிலர் கோவிலுக்குள் குதித்து அங்கிருந்த ஒலிபெருக்கியைப் பயன்படுத்திவிட்டார்கள் என்றும் கோவிலுக்குப் பொறுப்பானவர்களுக்கு அன்று “உடல்நிலை சரியில்லை”யென்றும் சில உள்ளூர்க்காரர்கள் கூறுகின்றனர்.
அந்தக் கோவிலின் அர்ச்சகரையும் அவரது உதவியாளரையும் காவல்துறை விசாரணைக்கு உட்படுத்தியிருக்கிறது.
“எங்களுக்கு இது பெரும் அதிர்ச்சி. நாங்கள் மட்டும்தான் இங்கே ஒரே இஸ்லாமியக் குடும்பம் என்றாலும், நான்கு தலைமுறைகளாக நாங்கள் இங்கு வசிக்கிறோம். இதற்கு முன்பாக இப்படி பிரச்சனை ஏற்பட்டதில்லை” என்கிறார் அக்லாகின் 55 வயது சகோதரரான ஜமீல் அகமது.
அக்லாக்கின் குடும்பத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் ஆறு பேர் தற்போது கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். மேலும் நான்கு பேர் தேடப்பட்டுவருகின்றனர்.
இந்த கைது நடவடிக்கைக்குப் பிறகு அங்கு பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. காவல்துறைக்கு எதிராக போராட்டங்களும் நடத்தப்பட்டன.
அந்தப் போராட்டங்களின் போது வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதோடு. அருகிலிருந்த கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டன.
வானத்தை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தி, காவல்துறை நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளது.
செவ்வாய்க் கிழமையன்றும் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டதால் அருகிலுள்ள பகுதியிலிருந்து காவல்துறையினர் அங்கு வரவழைக்கப்பட்டனர்.
ஊரடங்கு உத்தரவு போடப்படவில்லையென்றாலும் தெருக்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
சட்டமன்றத் தேர்தல் காரணமா?
தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாக காவல்துறை அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
உத்தரப்பிரதேசத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருப்பதையடுத்து, அரசியல் நோக்கத்துடனேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த சப்பீர் குஜ்ஜர் தெரிவித்தார்.
“இரு சமூகங்களைப் பிரிப்பதற்காக வெளியிலிருந்து வந்த சக்திகள் வேண்டுமென்றே செய்த வேலை இது.
பல வருடங்களாக இந்தப் பகுதியில் வசித்துவரும் குடும்பத்தினர் குறிவைக்கப்பட்டதற்கு வேறு காரணங்களைச் சொல்ல முடியவில்லை.
சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க இதுபோன்ற சம்பவங்கள் அதிகரிக்கலாம்” என்கிறார் அவர்.
2017ஆம் ஆண்டில் உத்தரப்பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது.
தொடர்புடைய செய்தி
மாட்டுக்கறியை “சாப்பிட்ட” சந்தேகத்தில் ஒருவர் அடித்துக் கொலை; 6 பேர் கைது