அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச பிரிவிலுள்ள புளியம்பத்தை கிராமத்தில் இரு சிறு பிள்ளைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 31 வயதுடைய தந்தை ஒருவரை பொதுமக்கள் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவம் நேற்று (30) புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
இதுபற்றி மேலும் தெரியவருவதாவது,
மீள்குடியேற்ற கிராமமான புளியம்பத்தை கிராமத்திலுள்ள குறித்த 14 வயது மற்றும் 15 வயது பிள்ளைகளின் சகோதரனுக்கு சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் சிறுவனுக்கு துணையாக இருப்பதற்கு தாய் சென்றுள்ளதனால், இரு பெண் பிள்ளைகளும் தனிமையில் தந்தையுடன் வீட்டில் இருந்துள்ளனர்.
இந்த நிலையில் தந்தையால் இரு பெண்பிள்ளைகளும் புதன்கிழமை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளமை அயலவர்களுக்கு தெரியவந்ததையடுத்து தந்தையாரை இரவு கிராமத்து பொதுமக்கள் பிடித்து பொலிசாரிடம் ஓப்படைத்தனர்.
இதனையடுத்து பொலிசார் அவரை கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட பிள்ளைகளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்
இதேவேளை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஒரு மகள் ஏற்கனவே கடந்த 6 வருடங்களுக்க முன்னர் தந்தையால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு சிறுவர் இல்லம் ஒன்றில் சேர்க்கப்பட்டு அங்கு இருந்து வந்த நிலையில், மீண்டும் இணைந்து வாழும் நிலையிலேயே இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவரை இன்று வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.