புளித்துப்போன சீரியல் நாடகத்தில் விறுவிறுப்பான காட்சி வந்தால் எப்படி இருக்கும்? சிரியாவில் நான்கு ஆண்டுகள் கடந்து நீடிக்கும் உள்நாட்டு யுத்தத்தில் திடீரென திருப்பங்களை பார்க்கும்போது சீரியல் நாடகத்தை பரபரப்பாக பார்ப்பது போன்ற உணர்வே ஏற்படுகிறது. வேறொன்றுமல்ல, இப்போதாவது இந்த கொடுமை முடிந்து தொலையுமா என்ற ஒரு நப்பாசை.

ரஷ்யாவுக்கு திடீரென ஞானம் பிறந்துவிட்டது. கடந்த புதன்கிழமை சிரிய வானில் வட்டமிட்ட ரஷ்ய போர் விமானங்கள் ஆங்காங்கே குண்டுமழை பொழிந்துவிட்டு திரும்பின.

இத்தனை காலமும் சிரிய உள்நாட்டு யுத்தத்தில் வெளியுலகுக்கு வேடிக்கை பார்த்துக் கொண்டும் அந்தரங்கத்தில் சிரிய அரசுக்கு உதவி செய்துகொண்டும் இருந்த ரஷ்யா இப்படி சொல்லாமல் கொள்ளாமல் களத்தில் குதிக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

ரஷ்யாவின் வருகையோடு சிரியாவின் பிரச்சினை இன்னும் சிக்கலாகி இருக்கிறது. ஆனால் ஏதோ திருப்புமுனைக்கு வந்துவிட்டது போலும் தெரிகிறது.

சிரியாவில் எல்லோரும் சாக்குப் போக்கு சொல்ல ஒரு பொதுவான எதிரி இருக்கிறது. அது இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்) என்று அழைத்துக் கொண்டு அர்த்தமில்லாமல் சண்டை பிடிக்கும் குழு.

இதனால் இப்போது சிரியாவில் யார், யாரோடு சண்டை பிடிக்கிறார்கள்? ஏன், எதற்கு சண்டை பிடிக்கிறார்கள்? என்று ஏதோ குழப்பமாகிவிட்டது.

syria-aerial_3458434b

(At least 12 Su-25 Frogfoot attack planes lined-up on the secondary runway at al-Assad airbase near Latakia, the same airfield hosting the four Russian Air Force Su-30SM multirole combat planes.)

ரஷ்யாவும் இந்த ஐ.எஸ்ஸை சாக்காக வைத்தே சிரியா மீதான வான் தாக்குதலை ஆரம்பித்திருக்கிறது. ஏற்கனவே அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படை ஒன்று இந்த ஐ.எஸ்.எஸ் க்கு எதிராக ஓர் ஆண்டுக்கும் மேலாக குண்டு போட்டு வருகிறது.

ஒன்று, இரண்டு அல்ல இதுவரை 7000ம் அதிகமான குண்டுகளுக்கு மேல் போட்டுவிட்டது. ஆனால் ஐ.எஸ். என்ற அந்த குழு இன்னும் தனது கறுப்பு கொடியை அசைத்துக் கொண்டு அடிக்கடி கொடூரங்களை நிகழ்த்திக் கொண்டு தன்பாட்டுக்கு உலா வருகிறது.

இந்த இலட்சணத்தில் ரஷ்யாவும் ஐ.எஸ்.மீது குண்டு போட்டு உருப்படியாக என்னத்தை சாதிக்கப்போகிறது.

உண்மையில் ஐ.எஸ். என்பது ராஜதந்திர வார்த்தையில் சொல்வதென்றால் வெறுமனே ஒரு பூச்சாண்டிக் கதை. சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத் வெளியேறிவிட வேண்டும். இந்த வார்த்தையை  ஒருபோதும் திரும்பப் பெற முடியாது.

இப்படிச் சொல்பவர் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா. ஆனால் இதற்கு பதில் கூறும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், அஸாத் தொடர்ந்தும் ஆட்சியில் இருக்க வேண்டும். இந்த வார்த்தையை பாதுகாக்க அவர் எதுவும் செய்வார்.

சிரியாவின் இப்போதைய பிரச்சினையை சரளமாக விளக்குவதென்றால் ஒபாமா, புடினின் இந்த கூற்றுகள் போதுமானதாக இருக்கும். ரஷ்யா இப்போது சிரியாவில் வான் தாக்குதல் நடத்துவதற்கும் இதுதான் காரணம்.

சிரிய ஜனாதிபதி கோரிக்கை விடுத்து அதற்கேற்ப ரஷ்ய பாராளுமன்றத்தில் அங்கீகாரம் பெற்ற புடின், சிரியாவில் வான் தாக்குதலை ஆரம்பித்திருக்கிறது.

அதற்கமைய சட்டப்படி நாங்கள் மாத்திரமே சிரியாவில் தாக்குதல் நடத்துகிறோம் என்றும் அமெரிக்க கூட்டணியின் தாக்குதல் சட்ட விரோதமானது என்று பெறுமை வேறு.

Smoke rises after airstrikes by military jets in Talbiseh, Homs province

இப்படி ஐ.எஸ்ஸ¤க்கு எதிராக வான் தாக்குதலை ஆரம்பித்ததாக ரஷ்யா மேம்போக்காக சொன்னபோதும் அது ஐ.எஸ்ஸக்கு எதிராக மாத்திரம் வான் தாக்குதல் நடத்தவில்லை.

பஷர் அல் அஸாத் அரசுக்கு எதிரான அனைத்து தரப்பின் மீதும் கண்டபடி குண்டு போட்டு வருகிறது. அதில் அமெரிக்காவின் சி.ஐ.ஏ. பயிற்சி அளித்த கிளர்ச்சியாளர்கள், அல் கொய்தாவுடன் தொடர்புபட்ட அல் நுஸ்ரா முன்னணி போன்ற கடும்போக்கு இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள், மிதவாத இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் என்று அனைத்து தரப்பும் அடங்கும்.

மறுபக்கம் அமெரிக்க கூட்டணி சிரியாவில் ஐ.எஸ். மீது மாத்திரமே தாக்குதல் நடத்துகிறது. அதன் மற்றொரு எதிரியான அஸாத் அரசு மீது கை வைக்கவில்லை.

இதன்படி பார்த்தால் சிரிய யுத்தத்தில் அமெரிக்காவும் ரஷ்யாவும் ஒரு கூட்டணியில் இருக்கின்றன. அதாவது இராண்டாவது  உலக மகா யுத்தத்தில் ஹிட்லருக்கு எதிராக அமெரிக்காவும் சோவியட் ஒன்றியமும் கூட்டணி சேர்ந்ததன் பின்னர் இந்த இரு தரப்பும் கூட்டணி அமைப்பது இதுவே முதல் முறையாகும்.

மறுபக்கம் ரஷ்யாவும் அமெரிக்காவும் எதிர் எதிர் முனைகளில் சண்டை போடுகின்றன. அமெரிக்கா அஸாத் அரசை தாக்க மிதவாத கிளர்ச்சியாளர்களுக்கு அனைத்து வகை உதவிகளையும் செய்யும்போது ரஷ்யா அந்த கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்துகிறது.

எனவே ஒரே யுத்தத்தில் எதிரியாகவும் நண்பராகவும் செயற்படுதல் ஒரு புதிரான கூட்டணியை ரஷ்யாவும் அமெரிக்காவும் அமைத்திருக்கிறது.

அதேபோன்று இப்போது சிரிய யுத்தம் ஓர் உலக மகா யுத்தம் அளவுக்கு விரிந்து விட்டது. அதாவது உலகின் முக்கிய சக்திகள் அனைத்தும் இப்போது நேரடியாக சிரிய யுத்தத்தில் பங்கேற்றிருக்கின்றன.

என்றாலும் அமெரிக்காவும் மேற்குலகும் சிரியா விடயத்தில் ஒரு மேம்போக்கான நிலைப்பாட்டில், என்ன செய்வது என்று புரியாமல் அடிக்கடி குண்டு போட்டுவிட்டு வரும்போது ரஷ்யாவும் அது ஆதரவளிக்கும் அஸாத் அரசும் தொடர்ந்து தனது நிலையை பலப்படுத்தி வருகிறது.

சிரியாவில் ரஷ்யாவின் ஒரே இலக்கு அஸாத் அரசை பாதுகாப்பதாகும். அஸாத் தோற்றால் மத்தியதரைக் கடலில் இருக்கும் அதன் ஒரே கடற்படைத் தளத்தை இழந்துவிடும்.

சிரியாவின் துறைமுக நகரான டார்டவுஸில் அந்த கடற்படை தளம் இருக்கிறது. அதேபோன்று மத்திய கிழக்கில் ஆழ வேரூன்றி கால்பதித்த இடமாக சிரியா மாத்திரமே இருக்கிறது. அஸாத்தை இழந்தால் ரஷ்யாவுக்கு அதுவும் கை நழுவிப் போய்விடும்.

அஸாத் ஆட்சியில் தொங்கிக் கொண்டிருந்தாலும் அவரால் முன்னர் போல் முழு நாட்டையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாது. புட்டினுக்கு இது நன்றாக தெரியும்.

இந்த நிலையில் அஸாத்தின் கோட்டையாக இருக்கும் லடக்கியா பிராந்தியத்தையாவது தொடர்ந்த தக்கவைத்துக் கொள்ள ரஷ்யா முடியுமான உதவியை செய்யும். அதிர்ஷ்டவசமாக இந்த பிராந்தியத்தில் தான் ரஷ்யாவின் கப்பற்படை தளமும் இருக்கிறது.

புடினின் சதுரங்க பலகையில் மத்திய கிழக்கு என்பது மேற்குலகுக்கு எதிராக காய் நகர்த்தக் கூடிய கறுப்பு வெள்ளை பெட்டிகள்.

எனவே மத்திய கிழக்கு பற்றி எரிந்தாலும் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டாலும் மேற்குலகைப் போன்று புட்டினுக்கும் கவலையில்லை. மத்திய கிழக்கில் அமெரிக்காவின் தோல்வி என்பது எனது அமோக வெற்றி என்று புட்டின் நினைக்கிறார்.

அத்தோடு அஸாத் ஆட்சியில் தொங்கிக் கொண்டு அங்கு தனது கப்பற் படை தளத்தையும் தக்கவைத்துக் கொண்டால் மேலதிக லாபம் என்று நினைக்கிறார். இந்த ஆட்டத்தில் எத்தனை செலவானாலும் ரஷ்யாவை தனது பக்கம் விளையாடச் செய்வது போட்டியில் தொடர்ந்து நிலைத்து நிற்க உதவும் என்று அஸாத் நினைக்கிறார்.

இந்த நிலையில் ரஷ்யாவின் சிரியா மீதான வான் தாக்குதல் ஒரு தீர்க்கமான காய் நகர்த்தலாக இருக்கப்போகிறது.

பனிப் போருக்கு பின்னர் ரஷ்யா வெளிநாட்டில் தனது படையை பயன்படுத்துவது இது முதல் முறை என்பதில் இருந்தே ரஷ்யாவின் நோக்கம் புரிகிறது. கடைசியாக 1980களில் ஆப்கானிஸ்தானுக்கு படையை அனுப்பி வாங்கிக் கட்டிக் கொண்டது வேறு கதை.

ஆனால் சிரியாவில் இப்போதைய நிலையில் ரஷ்யாவுக்கு சாதகமான சூழல் ஏகமாக காணப்படுகிறது. அமெரிக்கா ஓர் ஆண்டாக சிரியாவில் வான் தாக்குதல் நடத்தினாலும் அதற்கு தரையில் வலுவான படை ஒன்று இருக்கவில்லை.

சிரிய கிளர்ச்சியாளர்களுக்கு அது பயிற்சி அளித்தும் ஆயுத உதவிகள் செய்த போதும் அவர் பெரிதான முன்னேற்றம் காணாமல் இருப்பை தக்கவைத்துக் கொள்ளவே தடுமாறுகின்றனர்.

அஸாத் அரசுக்கு எதிராக அமெரிக்காவுக்கு வேண்டப்படாத அல் நுஸ்ரா முன்னணி போன்ற இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களே யுத்த களத்தில் சிறப்பாக செயற்பட்டு வருகின்றனர்.

ஆனால் ரஷ்யாவுக்கு அந்த நிலை இல்லை. பஷர் அல் அஸாத்தின் தரைப்படைகள் யுத்த களத்தில் தீவிரமாக செயற்படும் சூழலிலேயே ரஷ்யா அங்கு வான் தாக்குதல் நடத்துகிறது. எனவே அது குண்டு போடுவதில் எதோ ஒரு வகையில் அர்த்தம் இருக்கிறது என்று குறிப்பிடலாம்.

நான்கு ஆண்டுகள் அஸாத்தின் அரச படை எத்தனையோ வீழ்ச்சியை கண்டபோதும் அதுவே இன்றும் களத்தில் பலம் மிக்கதாக இருந்து வருகிறது.

இப்போதைய நிலையில் அரச படை, குறிப்பிட்ட நிலைகளை தக்கவைத்துக் கொண்டு அதனை பாதுகாக்கும் யுத்த தந்திரத்தையே கடைப்பிடித்து வருகிறது. மறுபுறம் கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஐ.எஸ். அரச படையை பின் வாங்கச் செய்ய முயற்சித்து வருகிறது.

இந்த நிலையில் ரஷ்யாவின் வான் தாக்குதல் சிரிய அரச படையின் யுத்த தந்திரத்தில் பெரிய மாற்றங்களை கொண்டுவர வாய்ப்பு உண்டு.

சிரிய அரச படையுடன் ஆயிரக்கணக்கான ஈரான் படையினரும் கடந்த ஒருசில தினங்களாக இணைந்து வருவதாக லெபனான் ஊடே செய்திகள் கசிந்துள்ளன.

ஏற்கனவே லெபனானின் பலம் மிக்க ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லாவும் சிரிய யுத்தத்தில் அஸாத் அரசுக்கு தோள் கொடுக்கிறது. அத்தோடு ரஷ்ய படையும் சிரியாவில் ஆங்காங்கே நிலைகொண்டிருப்பதற்கான புகைப்பட ஆதாரங்கள் கடந்த ஒரு சில வாரங்களில் கசிந்தன.

இதனையெல்லாம் வைத்து பார்க்கும்போது அஸாத் அரசுக்கு ஆதரவான கூட்டணி இந்த யுத்தத்தை உண்டு, இல்லை என்று ஒரு முடிவை காண்பதற்கு தயாராகி வருவது போல் தெரிகிறது.

மறுபக்கம் அஸாத்துக்கு எதிரான கூட்டணி இன்னும் ஒரு ஸ்திரமான முடிவு இல்லாமல் தவிக்கிறது. குறிப்பாக சிரியாவுக்குள் ஒரு பொதுவான அசாத் எதிர்ப்பு சக்தியை உருவாக்க அமெரிக்காவுடன் சவூதி அரேபியா, துருக்கி போன்ற அஸாத் எதிர்ப்பு நாடுகள் தவறி விட்டன.

அதற்கு பதிலாக ஐ.எஸ். குழு கெட்ட வைரஸ் போல் அனைத்தையும் விழுங்கி சாப்பிடுவது அஸாத்துக்கு சாதகமாகி விட்டது.

எனவே இத்தனை கால சிரிய யுத்தத்தில் ரஷ்யாவின் நேரடி தலையீடு ஒரு தீர்க்கமான மாற்றத்திற்கான தருணத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

விடுதலை புலிகளுக்கு அமெரிக்காவில் ஏவுகணை வாங்க, FBIயின் வலையில் விழுந்த கதை –(பகுதி- 2)

Share.
Leave A Reply

Exit mobile version