சமூக வலைதளங்களில் முன்னிலை வகிக்கும் பேஸ்புக் இளைஞர்கள் மட்டுமல்லாது சமூகத்தின் அனைத்து தரப்பினராலும் பெரும்பான்மையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த சமூக வலைதளங்களை சிறுவர்கள் சிறுமிகள் பயன்படுத்துவதும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

சமூக வலைதளங்களில் ஏற்படும் நட்பு வட்டங்களை சில ஏமாற்றுப் பேர்வழிகள் தவறாக பயன்படுத்துவதால் தங்கள் வாழ்க்கையை சீரழித்துக்கொள்ளும் செய்திகளையும் நாளிதழ்களில் அதிக அளவு இன்று காண முடிகிறது.

இது போன்ற ஒரு சம்பவம்தான் மும்பையில் நடைபெற்றுள்ளது. பேஸ்புக் மூலமாக அறிமுகமான நண்பனின் பிறந்த நாள் விழாவுக்கு சென்ற 15 வயது சிறுமியை, பேஸ்புக் நண்பர் தனது சக நண்பர்களுடன் இணைந்து கொடூரமாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தின் விபரங்கள் வருமாறு:

மும்பையின் தானே பகுதியை சேர்ந்த கவுஸ்துப் சவான்( 21) என்ற இளைஞர் பேஸ்புக் மூலமாக 15 வயது சிறுமி ஒருவரிடம் அறிமுகமாகியுள்ளார்.

2-3 மாதங்கள் சிறுமியிடம் நன்றாக பேசி நட்பை ஏற்படுத்திய சவான், திடீரென தனது பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

விபரீதம் அறியாத சிறுமி, நண்பரின் அழைப்பை ஏற்று பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள அங்குள்ள வணிக வளாகம் ஒன்றுக்கு சென்றுள்ளார்.

அங்கிருந்து சிறுமியை ஏற்றிக்கொண்டு ஒரு இடத்திற்கு கொண்டு சென்ற சவான், அங்கு சக நண்பர்களுடன் மது அருந்தி விட்டு சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார். இதற்கு நண்பர்களும் உறுதுணையாக இருந்துள்ளனர்.

பின்னர் மாலை 6 மணியளவில் இளைஞர்கள் சிறுமியை திருப்பி அனுப்பியுள்ளனர். வீடு திரும்பிய சிறுமி தனக்கு வயிறு வலிப்பதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சிறுமியின் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். அங்கு சிறுமி வல்லுறவுக்குட்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது.

சமூகத்தில் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் என்பதால் பொலிஸ் நிலையத்தில் உடனடியாக முறைப்பாடு செய்யாமல் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் நண்பர்களிடம் ஆலோசனை கோரியுள்ளனர்.

இருந்த போதிலும், திங்கட் கிழமை சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் சிறுமியின் குடும்பத்தினர் முறையிட்டதை தொடர்ந்து தானேவைச்சேர்ந்த காவுஸ்துப் சவான் (24), தீபாலி ஆஹீர் (25), மந்தர் (30), ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாலியல் குற்றம் ,ஆட்கடத்தல், வேண்டுமென்ற காயத்தை ஏற்படுத்துதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் பொலிஸார் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.

 

Share.
Leave A Reply

Exit mobile version