பார்சிலோனா: கர்ப்பத்தில் இருக்கும் 16 வார சிசுவால் இசையைக் கேட்க முடியும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைகளால் சத்தத்தைக் கேட்க முடியும் என்பதால் நம்மூரில் வளைகாப்பு என்ற பெயரில் கர்ப்பிணிகளுக்கு கை நிறைய கண்ணாடி வளையல்களை அணிவித்து விடுகின்றனர்.

அந்த வளையோசையைக் கேட்டு வயிற்றிலிருக்கும் குழந்தை வளரும் என்பது நம்பிக்கை. ஆனால், இவ்வாறு இசையைக் கேட்கும் வயிற்றில் இருக்கும் குழந்தைகள் அதற்குப் பாட்டுப் பாடுவது போல் வாயசைப்பது வீடியோ ஒன்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது


பார்சிலோனா… ஸ்பெயின் நாட்டிலுள்ள பார்சிலோனா ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், இசையைக் கேட்டு வயிற்றில் உள்ள குழந்தை ஒன்று வாயை அசைத்து பாட முயற்சிப்பது போல் உள்ளது.

16 வார சிசு… இதன்மூலம் 16 வார கருவிற்கு காது நன்றாக வளர்ச்சியடைந்து, கேட்கும் திறன் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால், இதுவரை 18 வாரத்திலேயே சிசுவிற்கு காதுகேட்கும் எனக் கூறப்பட்டு வந்தது.
பாட முயற்சி?
இந்த ஆய்வை தலைமையேற்று நடத்திய டாக்டர் மாரிசா லாப்சி இது தொடர்பாக கூறுகையில், ‘கர்ப்பத்தில் இருக்கும் 16 வார சிசு இசையைக் கேட்டு வாயை மற்றும் நாக்கை அசைப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பார்ப்பதற்கு அக்குழந்தைப் பாட அல்லது பேச முயற்சிப்பது போல் தெரிகிறது.

 

பேபிபாட்…
இந்த ஆய்விற்காக பேபிபாட் என்ற இசைக்கருவி உருவாக்கப்பட்டது. இந்தக் கருவி மூலம் கருவில் இருக்கும் போதே குழந்தையின் பேடும் திறமைகளை வளர்த்துக் கொள்ளமுடியும் என்பது சிறப்பம்சமாகும்.

சிறப்பு ஸ்பீக்கர்கள்… இந்த ஆய்வானது 14 வாரம் முதல் 39 வார கர்ப்பிணிகளைக் கொண்டு நடத்தப்பட்டது. சில சிறப்பு ஸ்பீக்கர்கள் மூலம் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு இசையைக் கேட்க வைத்து அவர்களின் ரியாக்‌ஷன்களை அல்ட்ரா சவுண்ட் மூலம் ஆய்வாளர்கள் கண்காணித்தனர்.

தலையை ஆட்டி… இந்த ஆய்வில் சாதாரணமாக இசையைக் கேட்டு 45 சதவீத சிசுக்கள் தலையையும், கால் மூட்டுக்களையும் அசைத்ததாகவும், 30 சதவீத சிசுக்கள் வாயை அசைத்து நாக்கை சுழற்றியதாகவும், 10 சதவீத சிசுக்கள் நாக்கை சுழற்றியதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

87 சதவீதம்… அதே சமயம் கர்ப்பப்பைக்கு அருகே சிறப்பு ஸ்பீக்கர்கள் மூலம் இசையைக் கேட்ட போது 87 சதவீதம் சிசுக்கள் தலையையும், மூட்டுப்பகுதியையும் அசைத்ததாகவும், ஒரே நேரத்தில் வாய் மற்றும் நாக்கை அசைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இசையை நிறுத்தியதும்… ஆனால், இந்த அசைவுகள் எல்லாம் மியூசிக்கை நிறுத்தியதும் உடனடியாக நிறுத்தப்பட்டு விட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஹெட் போன் மூலம் இசையை கர்ப்பிணிகளின் வயிற்றிற்கு அருகே வைத்த போது, சிசுக்களின் செயல்பாட்டில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

இரட்டைக் குழந்தைகளும்…
கர்ப்பத்தில் இருந்த இரட்டைக் குழந்தைகளும் கூட இவ்வாறு இசையைக் கேட்டபோது ஒரேவிதமான அசைவுகளை மேற்கொண்டதாம்.

Share.
Leave A Reply

Exit mobile version