இலங்கையிலும் ஜெனீவாவிலும் இடம்பெற்ற நடவடிக்கைகள் யாவுமே முன்கூட்டியே ஒரு தலைப்பட்சமாக விவாதித்து கொழும்புடன் கருத்தொருமித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்பதை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளன என்று கவலை தெரிவித்திருக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், எப்படியான பொறிமுறை என்பது ஜெனீவாவில் தீர்மானிக்கப்படுவதற்கு முன்பதாகவே “உள்ளகப் பொறிமுறை’ ஒன்றுக்குப் பணத்தை ஒதுக்க வேண்டிய அவசியம் என்ன? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
வட மாகாண சபைக் கூட்டத்தில் உறுப்பினர் பரம்சோதியால் முன்வைக்கப்பட்ட கேள்விகள் மற்றும் வட மாகாண எதிர்க்கட்சித் தலைவரின் கேள்விகளுக்கு நேற்று வியாழக்கிழமை பதிலளிக்கையில் விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சர் அலுவலகத்திற்கான ஆலோசகர் நியமனம் தொடர்பாக வெளியாகியிருக்கும் சர்ச்சைகள் குறித்துத் தெளிவான விளக்கத்தை முதலமைச்சர் அளித்திருக்கிறார்.
வட மாகாண நிர்வாகத்துடன் பேசாது நல்லிணக்கத்தை மத்திய அரசு எவ்வாறு ஏற்படுத்தும்? எனவும் இராணுவத்தை வெளியேற்றாது, மீள்குடியேற்றம் பற்றி குறிப்பிடுவது, பணத்தை மத்திய அரசு எடுத்துக் கொண்டு தன்னிச்சையாக இக்காணிகளை விடுவிப்பதாக முடியுமல்லவா?
என்றும் சுட்டிக்காட்டியிருக்கும் முதலமைச்சர், பலாத்காரபடுத்தி ஒப்புதல் வாங்க முயற்சிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி தனது கருத்தைத் திரித்துக் கூற முற்பட்டதாகவும் அவர் சாடியுள்ளார்.
சென்ற கூட்டத்தில் இதேபோன்று உறுப்பினர் பரஞ்சோதியால் சில கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அத் தருணத்தில் இராஜதந்திர ரீதியான பாதிப்புகள் ஏற்படக் கூடும் என்பதால் பதிலை அந்தரங்கமாக வெளிப்படுத்தலே உசிதம் என்று கூறியிருந்தேன்.
எதிர்க் கட்சித் தலைவரின் கேள்விகள் ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதியின் 28.08.2015 ஆம் திகதி கடிதத்தையும் என்னுடைய 15.08.2015 ஆம் திகதிய கடிதத்தையும் சுட்டிக்காட்டுவதால் மேற்படி கடிதங்கள் ஏதோ ஒரு விதத்தில் வெளிப்படத்தப்பட்டுள்ளன என்ற விதத்தில் இராஜதந்திர ரீதியான பாதிப்புக்களை நான் கவனத்திற்கு எடுக்க வேண்டியதில்லை என்று நம்புகின்றேன்.
எனவே, அவர்களின் கேள்விகளுக்கு முதலில் சுருக்கமாகப் பதில்கள் அளித்து விட்டு முழுமையான பதிலை பின்னர் தருகின்றேன்.
பதில்: எனது 15.08.2015 ஆம் திகதிய கடிதத்திற்கு அனுப்பப்பட்ட பதிலே 28.08.2015 ஆம் திகதிய வதிவிடப் பிரதிநிதியின் கடிதம். “மேற்கூறப்பட்ட விடயங்கள் ‘ என்று உங்கள் முதலாம் கேள்வியில் கூறப்படுபவை தவறான கருத்துகளைக் கொண்டிருக்கின்றன.
கேள்வி: அவ்வாறாயின் வடக்கு மாகாண முதலமைச்சர் என்ற ரீதியில் தங்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் பாரிய தவறுகள் தொடர்பான பதில் என்ன ?
பதில்: எந்தத் தவறும் எங்கும் குறிப்பிடப்படவில்லை. தவறுகள் செய்யப்படவுமில்லை.
கேள்வி: தங்களால் ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதிக்கு 15.08.2015 இல் எழுதிய கடிதத்தையும் அதற்கு அவர்களிடமிருந்து 28.08.2015 திகதியிடப்பட்ட பதிலையும் சபையில் சமர்ப்பிக்க முடியுமா ? முடியாவிடின் ஏன்?
பதில்: மேற்படி கடிதங்களின் போட்டோ பிரதிகள் இணையத்தளங்களுக்கு வேண்டுமென்றே சிலரால் அனுப்பப்பட்டு சுற்றி வருகின்றன. ஆனால், அவற்றை நீதிமன்றில் சமர்ப்பிக்க முடியாது. அது சட்டப்படி முறையற்றதாகும். சிறப்புரிமைச் சட்டத்திற்கு முரணாக அமையும்.
கடிதங்களின் பிரதிகளை வைத்துக் கொண்டு தான் மேற்படி கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. எனக்கும் யாரோ ஒருவரால் ஈமெயிலில் அனுப்பப்பட்ட கடிதம் என கையெழுத்தைக் கொண்டிருந்ததால் உண்மையான பிரதியே அது என்று நம்புகின்றேன் .
ஆனால், எதிர்க் கட்சித் தலைவர் கூறும் கடிதங்கள் எவ்வாறான உள்ளடக்கங்களைக் கொண்டுள்ளன என்பது பற்றி நான் அறியேன்.
என்றாலும் இதில் ஒழிக்கவோ மறைக்கவோ எதுவும் இல்லாததினால் இத் தருணத்தில் முழுமையான ஒரு அறிக்கையை வெளியிடுகின்றேன்.
முதன் முதலில் ஐக்கிய நாடுகள் விதிவிடப் பிரதிநிதியிடம் வட மாகாணம் பற்றி 2013 ஆம் ஆண்டில் தயாரித்தது போல் ஒரு முழுமையான பல்துறை தேவைகள் சார்பான பல் நிறுவன அறிக்கையை நான் கோரியது 2013 ஆம் ஆண்டு கடைசி மாதங்களில்.
(Multi Lateral Needs‘ Based Assessment).
அதே காலகட்டத்தில் எமக்கு சர்வதேச பல் நிறுவனங்களுடனான அனுபவத்தைப் பெற்றவரும் முகாமைத்துவம் பற்றிய அறிவு, அனுபவம், தகைமையும் பெற்ற ஒருவரை எமது ஆலோசகராகப் பெற வேண்டும். அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய முடியுமா என்று வதிவிடப் பிரதிநிதியிடம் கேட்டிருந்தேன்.
இரண்டுக்கும் சாதகமான பதிலை இறுத்தார் வதிவிடப் பிரதிநிதி. நான் தேர்ந்தெடுத்த நபரின் பெயரையும் வதிவிடப் பிரதிநிதிக்குக் கூறியிருந்தேன். அவர் பற்றி பின்னர் கூறுவேன். இதன் பிறகு அப்போதைய ஜனாதிபதியை 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி சந்தித்தேன்.
அப்போது ஆலோசகரின் விடயம் எடுத்துக் கொள்ளப்பட்ட போது ஜனாதிபதி அவுஸ்திரேலியாவில் வசிக்கும் குறித்த ஆலோசகரை நியமிப்பதில் பிரச்சினை ஏதுவும் இல்லை என்று அவரை இரட்டைப் பிரஜா உரிமை பெறச் சொல்லுங்கள் என்றும் மற்றவற்றை திறைசேரி செயலாளருடன் முடிவு செய்து கொள்ளுங்கள் என்றும் கூறினார்.
ஆலோசகரை நியமிப்பதற்கான நடவடிக்கைகளைத் தாம் எடுப்பதாகக் கூறி வதிவிடப் பிரதிநிதி பல்துறை தேவைகள் சார்பான பல் நிறுவன அறிக்கை பெறுவது சம்பந்தமாக எமக்குச் சார்பற்ற விதத்தில் நடந்துகொண்டார்.
அப்போதைய ஜனாதிபதி செயலணியினதும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினதும் எதிர்பார்ப்புக்களின் அடிப்படையில் முன்னர் ஆரம்பிக்கப்பட்ட மனித நலன் சார்பான ஆய்வொன்றினையே தொடர்ந்து நடத்த அவர் நடவடிக்கைகள் எடுத்தார்.
ஜனாதிபதி செயலணியானது இராணுவ உயர் அதிகாரிகளை போரின் முடிவின் போது பாரிய அளவில் உள்ளடக்கி நியமிக்கப்பட்ட ஒரு செயலணி.
அது முழுக்க முழுக்க இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கப்பட்ட ஒரு செயலணி. பொருளாதார அமைச்சினதும் அந்த செயலணியினதும் நெறிப்படுத்தலின் கீழேயே அவர் நடவடிக்கைகளை எடுத்தார்.
இலங்கையின் ஐக்கிய நாடுகள் சபை கிளை மட்டுமே அந்த ஆய்வை நடத்தியது. 2003 ஆம் ஆண்டில் நடந்தது போல் உலக வங்கியோ , ஆசிய அபிவிருத்தி வங்கியோ இந்தச் செயற்பாட்டில் பங்குபற்றவில்லை.
இது பற்றி எம்முடன் நாம் பதவிக்கு வந்த பின் கலந்தாலோசிக்கவுமில்லை. தொடர்ந்தும் மத்திய அரசாங்கத்துடன் சேர்ந்தே வட மாக õணத்தில் என்ன செய்ய வேண்டும் என்ற முடிவுகளை அவர் எடுத்தார். இதன் போது போருக்குப் பின்னரான எமது மக்களின் புனருத்தாரணம், அபிவிருத்தி பற்றி அவர் ஆராயவில்லை.
அதனால் தான் நாங்கள் 2003 ஆம் ஆண்டில் செய்தது போல் பல்துறை தேவைகள் சார்பான பல் நிறுவன ஆய்வுக் கோரிக்கையை முன்வைத்திருந்தோம்.
அதை அவர் பொருட்படுத்தவில்லை. எனினும் நாங்கள் இது பற்றி ஐக்கிய நாடுகள் சபையினால் இங்கு அனுப்பப்பட்ட Madame Agenes அவர்களால் தலைமை வகிக்கப்பட்ட குழுவிற்கு சென்ற வருடம் பெப்ரவரி மாதத்தில் எமது கரிசனைகளை வெளியிட்டோம்.
ஆற்றுப்படுத்து குழுவான Steering Committeeயினுள் எம்மையும் சேர்த்து ஏற்றுக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தோம். அது நடைபெறவில்லை.
முழுமையான ஆய்வானது ஆங்காங்கே இராணுவத்தினரால் வட மாகாணத்தில் அவர்களால் இழைக்கப்பட்ட பல தவறான செயல்களை வெளிப்படுத்தக் கூடும் என்பதே அரசாங்கத்தின் மறுப்புக்குக் காரணம் என்று நினைக்க இடமிருக்கின்றது.
இவை பற்றி பிறிதொரு மூலத்தின் வாயிலாக அறிந்துகொண்ட நான், எமக்குத் தெரியாமல் எம்முடைய கோரிக்கையை அசட்டை செய்து, மத்திய அரசாங்கத்துடன் சேர்ந்து உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டு எங்களைப் பற்றிய ஆய்வு நடத்துவது தவறு என்று கூறினேன்.
மத்தியுடன் தான் தாங்கள் தொடர்பு வைத்திருக்கலாம், மாகாணத்துடன் அல்ல என்றும் வேண்டுமெனில் மத்தியுடன் தொடர்புகொள்ளுமாறும் எனக்குக் கடிதம் அனுப்பினார். இவ்வளவு காலமும் இருந்து விட்டு இப்போது இதுபற்றி ஏன் கூறுகின்றீர்கள் என்று அவரிடம் கேட்டேன்.
அதன் பின் நாங்கள் ஜனாதிபதிக்கு எமது கோரிக்கையை சென்ற வருடம் மத்தியில் அனுப்பினோம். அவர் அதற்குப் பதில் அனுப்பவில்லை. ஆக மொத்தம் வட மாகாணம் சம்பந்தமாக பல்துறை தேவைகள் சார்பான பல் நிறுவன ஆய்வில் ஈடுபட அரசாங்கமும் விரும்பவில்லை, வதிவிடப் பிரதிநிதியும் விரும்பவில்லை.
நாங்கள் எமக்கு ஆலோசகர் தருவது பற்றி அப்போதைய நிதி, திட்டமிடல் அமைச்சின் செயலாளருடன் பேசிக் கொண்டோம். அவர் அதற்கு ஆட்சேபனை எதுவுந் தெரிவிக்கவில்லை. மாறாக எழுத்து மூலம் அனுசரணையையும் ஒப்புதலையும் வழங்கியிருந்தார். இது பற்றி வதிவிடப் பிரதிநிதி அறிந்திருந்தார்.
வதிவிடப் பிரதிநிதியின் வேண்டுகோளின் பேரில் ஆலோசகரின் பின்னணி சேவைக் குறிப்பும் (Curriculum Vita – CCV), வேலை பற்றிய விபரங்கள் (Terms of Reference OTOR) ஆகியன அவருக்கு அனுப்பப்பட்டன.
தான் மேற்படி விடயத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறினார். வழங்கப்பட்ட ஆவணங்களை அவருடைய காரியாலயம் பரிசீலித்து அதன் பிரகாரம் நியமனத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அதன் பின்னர் இவ்விடயம் சம்பந்தமாக ஒரு தேக்க நிலை ஏற்பட்டது. அவ்வேளையில் நான் சிபார்சு செய்த ஆலோசகரை இந் நியமனம் சம்பந்தமான நிலவரத்தை அறியும்படியும் ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதியின் பொறுப்பான அலுவலர்களிடம் இருந்து அதனை அறிந்து கொள்ளுமாறும் அவரைப் பணித்தேன்.
அதன்பின்னர் வதிவிடப் பிரதிநிதியின் அலுவலர் என்னைக் கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்தில் எனது காரியாலயத்தில் இங்கு வந்து சந்தித்து ஆலோசகரின் நியமனம் ஐக்கிய நாடுகள் சபையினால் வருங்காலத்தில் நடைமுறைப்படுத்த இருக்கும் அபிவிருத்தித் திட்டங்களுடன் இணைந்து தான் நடைமுறைப்படுத்தப்படும் என்று முதன் முறையாக கூறினார்.
அவ்வேளையில் நான் ஆலோசகரின் நியமனம் வடமாகாணத்தின் அபிவிருத்தி வேலைத் திட்டங்களுடன் இணைக்கப்படாமல் ஆரம்பத்தில் ஏற்றுக் கொண்டது போல் தனிப்பட்ட ஒரு செயற்பாடாக முதலமைச்சரின் அலுவலகத்திற்குரிய ஒரு தேவையாக ஏற்று நடைமுறைப்படுத்தப்படுவது தான் பொருத்தம் என்று கூறினேன்.
அவரோ வடமாகாணத்திற்கு வகுக்கப்படும் செயற்பாடுகளின் ஒரு அங்கமாகவே ஆலோசகரின் நியமனத்தை மாற்ற எத்தனித்தார்.
ஆனால் அந்தச் செயற்பாடுகளுக்கும் ஆலோசகர் நியமனத்திற்கும் சம்பந்தமில்லை என்று நான் கூறினேன். உண்மையும் அதுதான்.
அதன் பிறகு பல மாதங்கள் காக்க வைத்துவிட்டு ஐக்கிய நாடுகள் சபை இவ்வருடம் மார்ச் மாதத்தில் தரவேண்டிய ஜெனீவாத் தீர்மானத்தை செப்ரெம்பருக்கு பிற்போட்ட பின்னர் சமாதானத்தைக் கட்டியெழுப்பும் நிதி பற்றி எமக்கு ஏப்ரில் மாதத்தில் அறிவித்தார்.
அப்போது குறித்த நிதி பற்றி எமக்குக் கருத்து வேறுபாடுகள் இருப்பதை வதிவிடப் பிரதிநிதிக்கு அறிவித்தேன்.
அதன்பின்னர் நான் இலங்கை வெளிவிவகார அமைச்சரின் அனுசரணையுடன் வதிவிடப் பிரதிநிதியின் மேலிடத்தை நியூயோர்க்கில் இவ்வருடம் ஜூலை மாதத்தில் சந்தித்தேன்.
அங்கு அவரின் அந்த நேரடி சிரேஷ்ட அலுவலர் கருத்துக் குறிப்பின் ஒரு பிரதியைத் தந்து அதனை எப்படியாவது ஏற்க வேண்டும் என்று கோரினார். இன்றே நீங்கள் அதனை ஏற்க வேண்டும்.
இல்லை என்றால் உங்களுக்குப் பணம் கிடைக்காது என்று கூறினார். நான் இது பற்றி எமது அமைச்சர்களுடன் கலந்தாலோசித்தே முடிவு எடுக்க முடியும் என்ற போது நீங்கள் அவர்களுடன் பேசினால் அது அரசியலாகப் போய்விடும். நீங்களே முடிவெடுங்கள் என்று பல அலுவலர்கள் முன்னிலையில் என்னைப் பலவந்தப்படுத்தப் பார்த்தார், நிர்ப்பந்தத்திற்கு உட்படுத்தினர். நான் அதற்கு இடமளிக்கவில்லை.
அதன் பின் அடுத்த சில நாட்களில் அவருக்கு மேலிருந்த அதிகாரியுடன் பேசினேன். அவர் வித்தியாசமான ஒருவர். நான் கூறிய அனைத்தையும் கேட்டுவிட்டு மேற்படி கருத்துக் குறிப்பு உங்களுக்குப் பாதகமாய் இருப்பதாக நீங்கள் நினைத்தால் அதைக் காரணம் காட்டி அதற்கு இசைவைத் தெரிவிக்க முடியாது என்று கூறுங்கள் என்றார். அவ்வாறே நான் செய்தேன்.
இப்பொழுது அந்தக் கருத்துக் குறிப்புப் பற்றிக் கூறுகின்றேன். 4 விடயங்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன. இதன் குறிக்கோள் சமாதானத்தை ஏற்படுத்தல்.
அதற்காக மனித உரிமைகளை மேம்படுத்தல், நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், பொறுப்புக் கூறல், நடைமுறைப் பிரச்சினைகளைத் தீர்த்தல் போன்றவற்றை நடைமுறைப்படுத்தப் போவதாகக் குறிப்பிட்டிருந்தார்கள். அதற்காக அக்கருத்துக் குறிப்பு அடையாளங் கண்ட ஏற்பாடுகள் பின்வருமாறு ;
1.மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பாக உள்ளகப் பொறிமுறையை உருவாக்குதல் (சர்வதேசப் பொறிமுறையை ஐக்கிய நாடுகள் ஏற்றிருந்தால் இந்த விடயம் பலன் அற்றுப்போயிருக்கும்)
2.நல்லிணக்கத்தை உருவாக்கல்.
3.மீள்குடியேற்றம் பற்றிய நடவடிக்கைகள்
4.வடமாகாண சபைக்குத் தேவையான சிலவற்றை அடையாளம் கண்டு அவற்றிற்காகப் பணத்தை ஒதுக்கி வைத்தல்.
முதலாவது ஏற்பாடு சம்பந்தமாக 750 ஆயிரம் டொலர்கள், இரண்டாவது சம்பந்தமாக 550 ஆயிரம் டொலர்கள், மூன்றாவது சம்பந்தமாக 1,200 ஆயிரம் டொலர்கள், நான்காவது சம்பந்தமாக 500 ஆயிரம் டொலர்களும் குறிப்பிடப்பட்டிருந்தன. (மொத்தமாக 3000ஆயிரம் டொலர்கள்)
இவை பற்றிய என்னுடைய கருத்து முரண்பாடுகள் பின்வருமாறு அமைந்தன;
ஜெனீவா தீர்மானத்தைத் தள்ளி வைத்த பின்னரே இப்பேர்ப்பட்ட நிதி பேசப்படுகிறது. இது முழுமையாக மத்திய அரசாங்கத்திற்கு சார்பாகவே அமைந்துள்ளது.
நாங்கள் சர்வதேச பொறிமுறைகளைக் கோரியிருக்கும் வேளையில் உள்ளகப் பொறிமுறை ஒன்றினை அமைக்க நடவடிக்கைகள் எடுப்பது எமக்கு சந்தேகத்தைத் தருகிறது.
ஏற்கனவே உள்ளகப் பொறிமுறை ஒன்றிற்கு அத்திவாரம் இட்டாகியதோ என்று எண்ண வேண்டியிருக்கின்றது. இதனால்த்தான் நான் கடைசி நேரத்திலும் உள்ளகப் பொறிமுறை எமக்கு ஏற்படுத்தப் போகும் பாதிப்புப் பற்றிக் குறிப்பிட்டு ஜெனீவாவில் பங்குபற்றிய அனைத்து பிரதிநிதிகளுக்கும் 30.09.2015 அன்று ஒரு கடிதம் அனுப்பியிருந்தேன். அதனை இங்கு என் அறிக்கையுடன் இணைத்துச் சமர்ப்பிக்கின்றேன். அது எமது பதிவேட்டில் இருப்பது நல்லது என்று கருதுகின்றேன்.
நான் அதில் குறிப்பிடும் பிரச்சினைகள் விரைவில் எழுவன என்பது எனது கருத்து.
நல்லிணக்கத்திற்கான பணம் மத்திய அரசாங்கத்திற்கே கொடுக்கப்படுகின்றது. எமக்கல்ல. எம்முடன் எதுவும் கலந்தாலோசிக்கப்படவும் இல்லை. மத்தி கூறும் நல்லிணக்கத்திற்கு எங்களைப் படிய வைக்கப் பார்க்கின்றது ஐக்கிய நாடுகள் சபை.
மேலும் மீள்குடியேற்றத்திற்குப் பணம் ஒதுக்கப்படுகின்றது. ஆனால் அது பற்றிய எந்த விதமான கலந்துரையாடல்களும் இதுவரை எம்முடன் நடைபெறவில்லை. அதுபற்றிய எமது தேவைகளும் கரிசனைகளும் கண்டறியப்படவுமில்லை.
ஒரு விதப் பின் நினைவாகவே எமக்கும் சொற்ப பணம் குறித்தொதுக்கப்பட்டுள்ளது. எங்களை மற்றைய மூன்றுக்கும் ஒத்துப் போக வைக்கவே இந்தப் பணத்தை முன்வைத்துள்ளீர்கள். ஆனால் எல்லாமே மத்தியுடனான ஒழுங்குகளே.
நாங்கள் எம்மை உட்படுத்திய ஒரு வேலைத் திட்டத்திற்கு அன்றி, ஐக்கிய நாடுகள் சபை தன்னிச்சையாக மத்திய அரசாங்கத்தின் நன்மைக்காகச் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடமுடியாது என்று கூறினேன்.
அத்துடன் உண்மை விளம்பல், நீதி, நட்ட ஈடு செய்தல், திரும்ப நிகழாது தடுக்கும் உத்தரவாதங்கள் ஆகியவற்றிற்குப் பொறுப்பான ஐக்கிய நாடுகள் சபை விசேடப் உயர்மட்ட பிரதிநிதி Pablo de Greiff இவ்வருடம் ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி இங்கு வந்து சென்ற போது குறிப்பிட்ட பல விடயங்கள் ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதியால் கருத்துக்கெடுக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக் காட்டினேன்.
ஆங்கிலத்திலான அவ் அறிக்கை தற்பொழுது என்வசம் இருக்கின்றது. எமது கௌரவ உறுப்பினர்களின் நலனுக்காக அவர் குறிப்பிட்ட விடயத் தலையங்கங்களை மட்டும் இங்கு தருகின்றேன்.
1. (இலங்கையில்) விசாரணை ஆணைக்குழுக்கள் தேவைக்கதிகமாக நியமிக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள நம்பகத்தன்மை இழப்பு
2. நல்லிணக்கத்திற்குக் குறுக்கு வழிகள் கிடையாது
3. மனித உரிமைகள் பற்றி அரசின் வலுவான கொள்கைப் பிரகடனந் தேவை
4. (போரின் பின்னரான) நிவாரணங்கள் முழுமையானதாக அமைய வேண்டும்
5. கலந்து பேசல், பங்குபற்றுதல் (அவசியம்)
6. காணாமற் போனோர் , தொல்லை தரல், வன்முறை, தடுத்து வைத்தல், காணி மற்றும் உளவியல் சார்ந்த சமூக உதவிகள் பற்றி உடனே நடவடிக்கை எடுத்தல் அவசியம்.
அவற்றுள் முக்கியமாக கலந்துபேசல், பங்குபற்றுதல் ஆகியன எத்துணை அவசியம் என்பதை விசேட ஐக்கிய நாடுகளின் பிரதிநிதி குறிப்பிட்டும் எம்முடன் கலந்து பேச அப்போது பின்நின்றார் வதிவிடப்பிரதிநிதி.
பின்னர் இலங்கையிலும் ஜெனீவாவிலும் நடந்த நடவடிக்கைகள் யாவும் முன்னரே ஒருதலைப்பட்சமாக விவாதித்து இலங்கை அரசாங்கத்துடன் கருத்தொருமித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளே என்பதை ருசுப்படுத்துவதாக அமைந்துள்ளதை எமது கௌரவ பிரதிநிதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் இன்று கொண்டு வர இருக்கும் மற்றொரு பிரேரணையை வாசிக்கும்படி அவரையே நான் இத் தருணத்தில் கேட்டுக் கொள்கின்றேன். மக்கள் பிரதிநிதிகளின் எவ்விதப் பங்களிப்பும் இல்லாது மாவட்டத்தின் எதிர்காலத் திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளதாகக் கூறுகின்றார். அதைத்தான் நானும் அன்று சுட்டிக் காட்டினேன்.
ஜெனீவாவில் எப்பேர்ப்பட்ட பொறிமுறை என்று தீர்மானிக்க முன்னர் உள்ளகப் பொறிமுறை ஒன்றிற்குப் பணத்தை குறித்தொதுக்க வேண்டிய அவசியம் என்ன?
அத்துடன் நல்லிணக்கத்தை எவ்வாறு மத்திய அரசு எங்களுடன் பேசாது ஏற்படுத்தப் போகின்றது? பணத்தைக் குறித்தொதுக்க முன் எமது நடவடிக்கைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும். உண்மைகளை அரசு அறிந்து கொள்ளாமல் நல்லிணக்கத்தினை எவ்வாறு ஏற்படுத்தப் போகின்றது?
இராணுவத்தினரை வெளியேற்றாது, மீள்குடியேற்றம் பற்றிக் குறிப்பிடுவது பணத்தை மத்தி எடுத்துக் கொண்டு தன்னிச்சையாக சில காணிகளை விடுவிப்பதாக முடியுமல்லவா?
நான்கு விடயங்களும் எம்முடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்க வேண்டிய விடயங்கள். எங்களைப் பலாத்காரப்படுத்தி எங்களின் ஒப்புதலை வாங்கவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பணம் எங்களுக்குத் தரப்படமாட்டாது மத்திக்கே கிடைக்கும். ஆனால் எங்கள் ஒப்புதலை மட்டும் கேட்கின்றார்கள்.
எனவே எனது மனவருத்தத்தைக் கடைசியாக நான் பேசிய சிரேஷ்ட ஐக்கிய நாடுகள் அலுவலருக்குத் தெரியப்படுத்தி விட்டேன். அவரும் அதனைப் புரிந்து கொண்டிருந்தார்.
உண்மையில் அதன் பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் ஒருவர் வடமாகாண சபையிடம் கேட்டே வட இலங்கையில் அபிவிருத்திகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.
வதிவிடப் பிரதிநிதி தனக்கு மேலிடத்தில் இருந்து நெருக்குதல் ஏற்பட்டதால், நான் கோரிய நபரைத் தான் ஏற்காததால்த் தான் நான் சம்மதம் தெரிவிக்கவில்லை என்றும் அந் நபரை ஏற்றால்த் தான் கருத்துக் குறிப்பை ஏற்க முடியும் என்று நான் கூறியிருந்ததாகவும் திரித்துக் கூறத் தலைப்பட்டார். அதற்கு அவருக்குத் தக்க பதில் தயாரித்துள்ளேன்.
அதாவது முன்னர் ஏற்றுக் கொண்ட ஒரு விடயத்தைக் காலங்கடத்தி வைத்து கருத்துக் குறிப்புக்கு நான் அனுசரணை வழங்கினால்த் தான் குறிப்பிட்டவரை நியமிக்க முடியும் என்று கூறியவர் நீங்களே அன்றி நான் அல்ல என்றும் கருத்துக் குறிப்புக்கு ஒப்புதல் அளிப்பதானால் அவரை முதலில் நியமியும் என்று நான் எத்தருணத்திலும் கூறவில்லை என்றும் அவ்வாறு கூறியிருந்தால் அதைக் காட்டும் என்றும் அவருக்குக் கூறிவைத்தேன்.
அத்துடன் அவர் வழியாக எமக்கு ஆலோசகர் பற்றிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லை என்று அவருக்குக் கூறிய பின்னரும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஆலோசகர் கிடைத்திருந்தால் என்ன? கிடைக்காதிருந்தால் என்ன? எமக்குத் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கருத்துக் குறிப்புக்கு நான் எப்போதும் சம்மதித்திருக்க மாட்டேன்.
இப்பொழுது எமது ஒப்புதல் இல்லாமலே பணத்தை மத்தி கையேற்றிருப்பதாகத் தெரிகின்றது. அதை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாகவே எதிர்க்கட்சித் தலைவரின் இன்றைய மற்றைய பிரேரணை அமைந்துள்ளது.
மேலும் ஆலோசகராக என்னால் சிபார்சு செய்யப்பட்ட நபர் என் குடும்பச் சொந்தக்காரர் அல்ல. அவரை நான் 1977 ஆம் ஆண்டு இனக் கலவரத்தின் பின்னர் சந்தித்தேன்.
2001 ஆம் ஆண்டில் தமிழர் தேசியக் கூட்டமைப்பைத் தாபிக்கக் கொழும்பில் நியமிக்கப்பட்ட ஐந்து பேரில் அவரும் ஒருவர். தமிழர் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கத் தயாரிக்கப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்த முதல் வரைவாவணம் அவராலேயே தயாரிக்கப்பட்டு கையளிக்கப்பட்டது.
இது எனக்குத் தெரியும். மேலும் நான் ஆலோசகராக இனங் கண்ட நபர் முன்னர் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழைய வட கிழக்கு மாகாணத் திட்டம் ஒன்றின் பிரதி முகாமையாளராக பணியாற்றியுள்ளார் (UNDP நிறுவனத்தில்).
அவர் சமாதான ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த காலத்திலும் சுனாமிப் பேரலையின் பின்னரும் பல விதமான புனருத்தாரணம், புனர்நிர்மாணம் போன்ற செயற்பாடுகளிலும் தொடர்பாடல்களிலும் அனுபவமும், ஆற்றலும் பெற்றிருப்பவர்.
அத்துடன் முதலமைச்சர் ஒருவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமுடையவராக நடக்கக் கூடியவர் அவர். மிகவும் சிக்கலான உள்ளக வெளியக அரசியல்ச் செயற்பாடுகளை கவனத்தில் எடுத்துக் கொண்டு போருக்குப் பின்னரான சூழலில் ஒரு முதலமைச்சரின் ஆலோசகராக செயற்படக் கூடிய அறிவு, திறமை, அனுபவம், தகைமை, ஆற்றல்கள் அனைத்தையும் வழங்கக் கூடிய ஒருவராக உள்ளார்.
மேற்கூறிய காரணங்களின் நிமித்தந் தான் நான் அவரை சிபார்சு செய்தேன். அவரைப் போன்று எமது வடகிழக்கு மாகாண மக்கள் மீது அன்றிலிருந்து இன்று வரை கரிசனை கொண்ட, முகாமைத்துவத்தில் பாண்டித்தியம் பெற்ற, ஐக்கிய நாடுகள் பணிகளில் அனுபவம் முதிர்ந்த, புனருத்தாரணம், புனர்நிர்மாணம் போன்ற செயற்பாடுகளிலும் தொடர்பாடல்களிலும் அனுபவமும், ஆற்றலும் பெற்ற, நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடக்கக்கூடிய இன்னொருவரை அடையாளம் காட்டினால் அவரைச் சிபார்சு செய்ய நான் ஆயத்தமாக இருக்கின்றேன்.
உங்கள் கேள்விகளுக்கு முழுமையான பதிலைத் தந்துள்ளேன்.
-வடமாணசபை முதல்வர்-சி.வி .விக்கினேஸ்வரன்-
இதிலிருந்து தமிழர்கள் புரிந்து கொள்ளவேண்டியது யாதெனில்..
உள்ளக பொறிமுறையை தமிழர்கள் ஏற்றுக்கொள்ள வைப்பதகு தமிழரசுக்கட்சியிருக்கு (சுமந்திரன், சம்பந்தன்..) மற்றும் புலபெயர் அமைப்புகளுக்கு இலங்கையரசு, அமெரிக்கா மற்றும் ஐ.நா.சபையினர் எவ்வளவு பணம் கொடுத்திருப்பார்கள் என்பதை எண்ணிப்பாருங்கள்..,