காஷ்மீரில் மாட்டிறைச்சி விருந்து வைத்த சுயேச்சை எம்எல்ஏ மீது பாஜக உறுப்பினர்கள் நேற்று தாக்குதல் நடத்தினர். இதனால் சட்டப்பேரவையில் மோதல் ஏற்பட்டது.

பொதுநல வழக்கு ஒன்றில் ஜம்மு காஷ்மீரில் மாட்டிறைச்சிக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மாட்டிறைச்சி விற்பனைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை 2 மாதங்கள் தளர்த்தி உத்தரவிட்டது.

இதையடுத்து ரங்கேட் தொகுதி சுயேச்சை எம்எல்ஏ ஷேக் அப்துல் ரஷீத் என்பவர், எம்எல்ஏ.க்கள் தங்கும் விடுதியில் கடந்த புதன்கிழமை மாட்டிறைச்சி விருந்து வைத்தார். இதனால் ஒரு தரப்பினர் கடும் அதிருப்தி அடைந்தனர்.

இந்நிலையில் காஷ்மீர் சட்டப்பேரவை நேற்று கூடியது. அப்போது மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கும் மசோதா குறித்து விவாதம் நடக்க இருந்தது.

ஆனால், பாஜக எம்எல்ஏ.க்கள், ஷேக் அப்துல் ரஷீத்தை சூழ்ந்து கொண்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் ரஷீத்தை பாஜக எம்எல்ஏக்கள் சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது.

அப்போது சபையில் இருந்த காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர்கள் ரஷீத்தை மீட்க சென்றனர். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ரஷீத்துக்கு ஆதரவாக கோஷமிட்டனர்.

இதனால் சபையில் கூச்சல் குழப்பம் நிலவியது. பின்னர் அரசைக் கண்டித்து எதிர்க்கட்சியினர் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தனர்.

இதுகுறித்து தேசிய மாநாட்டு கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லா கூறும்போது, “சுயேச்சை எம்எல்ஏ மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தை ஜீரணிப்பது முடியாத விஷயம்.

மதிப்பிற்குரிய உறுப்பினர் ஒருவர் சட்டப்பேரவையில் தாக்கப் பட்டுள்ளார். இந்த சம்பவம் ரஷீத்தை கொல்வதற்கு அவர்கள் விரும்புகிறார்கள் என்பதையே காட்டுகிறது” என்று கண்டனம் தெரிவித்தார்.

ஒமர் அப்துல்லா மேலும் கூறும்போது, “மாட்டிறைச்சி பிரச்சினையில் நமது சென்டி மென்ட்ஸ்களும் அடங்கி உள்ளன. எங்கள் மதத்தை உங்கள் மீது நாங்கள் திணிக்க மாட்டோம்.

மது அருந்துவது, பன்றி இறைச்சி உண்பதை என் மதம் தடை செய்துள்ளது. அதற்காக மது அருந்துபவர்களையும் பன்றி இறைச்சி உண்பவர்களையும் நான் அடித்து உதைக்க முடியுமா. எம்எல்ஏ மீது தாக்குதல் நடந்த சம்பவம் குறித்து முதல்வர் அறிக்கை அளிக்க வேண்டும்” என்றார்.

சம்பவத்துக்கு முதல்வர் முப்தி முகமது சயீது கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “காஷ்மீர் சட்டப்பேரவை நல்ல பாரம்பரியம் மிக்கது. சென்டிமென்ட்களை கட்டுப் பாட்டுக்குள் வைத்திருக்க வேண் டும். தனது கட்சி உறுப்பினர்கள் முறைதவறி நடந்ததற்காக மன்னிப்பு கேட்கும்படி துணை முதல்வர் நிர்மல் சிங்கை (பாஜக) கேட்டு கொண்டுள்ளேன்” என்றார்.

இதற்கு பதில் அளித்து துணை முதல்வர் நிர்மல் சிங் கூறும்போது, “சட்டப்பேரவையில் நடந்த சம்பவத்தை நாங்கள் சரியென சொல்ல மாட்டோம். அதேநேரத்தில் எம்எல்ஏவிடுதியில் மாட்டிறைச்சி விருந்து அளித்ததும் தவறு” என்றார். ஆனால் மன்னிப்பு கேட்கவில்லை. பாஜக எம்எல்ஏ ரவீந்திர ரெய்னா கூறும்போது, “இந்துக்களின் மத உணர்வுகளை ரஷீத் புண்படுத்தி விட்டார். நான் அவரை அடிக்கவில்லை” என்றார்.

இதற்கிடையில் வெளியில் சென்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீண்டும் சட்டப்பேரவைக்கு வந்தனர். அப்போது, துணை முதல்வர் நிர்மல் சிங் பேசும் போது, “சபையில் நடந்த சம்பவத் துக்காக நான் மிகவும் வருத்தம் தெரிவிக்கிறேன். இது துரதிருஷ்டவசமானது. இந்த சம்பவத்துக்கு ஏற்கெனவே நான் கண்டனம் தெரிவித்துள்ளேன்” என்றார்.

Share.
Leave A Reply

Exit mobile version