பின்னர் தமிழீழ விடுதலைக்காக ஆயுதமேந்திய உமா மகேஸ்வரன் தலைமையிலான ப்ளாட் அமைப்புடன் டேவிட் ஐயா இணைந்து பணியாற்றினார்.
1983ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டு வெலிக்கடை சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
அப்போதுதான் உலகை உலுக்கிய வெலிக்கடை சிறை படுகொலைகள் நடந்தேறின. வெலிக்கடையில் தமிழ் அரசியல் கைதிகளாக இருந்த குட்டிமணி, ஜெகன் உள்ளிட்டோர் படுகொலை செய்யப்பட்டனர்.
இதில் டேவிட் ஐயா உயிர் தப்பினார். பின்னர் மட்டக்களப்பு சிறையில் அவர் அடைக்கப்பட்டார். ஈழத் தமிழர் வரலாற்றில் புகழ்பெற்ற மட்டக்களப்பு சிறை உடைப்பு சம்பவத்தின் போது டேவிட் ஐயாவும் சிறையில் இருந்து தப்பி தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து ராமேஸ்வரத்துக்கு அதிகயாக வந்தார்.
மிகப் பெரிய கல்வியாளராக இருந்த போதும் ஒரு அகதி வாழ்க்கையை தமிழகத்தில் வாழ்ந்தார். மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் வே. ஆனைமுத்து அவர்களின் Periyar Era என்ற ஆங்கில ஏட்டில் ஈழ விடுதலைப் போராட்டம் தொடர்பாக பல்வேறு ஆங்கில கட்டுரைகளை எழுதினார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இலங்கைக்கு அவர் திரும்பியிருந்தார். அங்கு கிளிநொச்சியில் உடல்நலக் குறைவால் நேற்று அவர் காலமானார். அவரது உடலுக்கு ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.