மலேசிய நாட்டிற்கு சொந்தமான பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ரஷ்ய ஏவுகணை தான் என்பதை நிரூபிக்கும் அதிர்ச்சி வீடியோ ஒன்றை நெதர்லாந்து பாதுகாப்பு மையம் வெளியிட்டுள்ளது.
2014ம் ஆண்டு யூலை 17ம் திகதி நெதர்லாந்தின் தலைநகரான ஆம்ஸ்டர்டம் விமான நிலையத்திலிருந்து மலேசிய நாட்டிற்கு சொந்தமான Flight MH17 என்ற விமானம் கோலாலம்பூருக்கு புறப்பட்டுள்ளது.
போலந்து, ஜேர்மனி வழியாக சுமார் 33 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து வந்துக்கொண்டு இருந்த அந்த விமானத்தின் பாதையில் வானிலை மோசமாக இருந்துள்ளது.
இதனை தவிர்க்க வழக்கமான பாதையை விட்டு விலகி, உக்ரைன் நாட்டின் எல்லைக்குள் நுழைந்து பறந்துள்ளது.
இதே நேரத்தில், உக்ரைனில் கிளர்ச்சியாளர்களுக்கும் அரசாங்கத்திற்கும் யுத்தம் நடைபெற்று வந்துள்ளது.
கிளர்ச்சியாளர்களுக்கு ரஷ்ய ராணுவம் ஆயுதங்களை வழங்கி உதவி செய்துள்ளது.
அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ச்சியாளர்கள், தரையிலிருந்து ‘Buk’ என்ற அதிநவீன ஏவுகணை ஒன்றை செலுத்தியுள்ளனர்.
இந்நிலையில், ஏவுகணை செலுத்தப்பட்ட சில நொடிகளில், மலேசிய விமானம் அவ்வழியாக மிகவும் தாழ்வான உயரத்தில் பறந்து வந்துள்ளது.
விமானத்தின் முகப்பு பகுதிக்கு அருகில் ஏவுகணை கடந்தபோது, ஏவுகனையில் இருந்த ரேடர் இலக்கை அடைந்துவிட்டதாக கருதி தானாக வெடித்துள்ளது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 298 பயணிகளும் உயிரிழந்தனர்.
ஒரு வருடத்திற்கும் மேலாக நடந்து வந்த விசாரணையில், இன்று நெதர்லாந்து பாதுகாப்பு மையம் இந்த வீடியோ காட்சியை வெளியிட்டு, மலேசிய விமானத்தை தாக்கியது ரஷ்ய ஏவுகணை தான் என நிரூபித்துள்ளது
‘எம்.எச்.17 விமானத்தை வீழ்த்தியது ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைதான்’-(BBC NEWS)
இந்த ஏவுகணை விமானத்தின் இடது புறத்தைத் தாக்கி , விமானத்தின் பிற பாகங்களை உடையச் செய்தது என்று இந்த ஆணையத்தின் விசாரணை அறிக்கை ஒன்று கூறுகிறது. இந்த சம்பவத்தில் 298 பயணிகள் கொல்லப்பட்டனர்.
ரஷ்ய ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்கள் இந்த போயிங் 777 ரக விமானத்தை சுட்டு வீழ்த்தினர் என்று மேலை நாடுகளும், யுக்ரெயினும் கூறுகின்றன.
ஆனால் ரஷ்யாவோ யுக்ரெயின் படைகளே இதைச் செய்ததாகக் கூறுகிறது.
இந்த டச்சு அறிக்கை, யார் இந்த ஏவுகணையை ஏவினர் என்று கூறவில்லை. ஆனால் கிழக்கு யுக்ரெயினின் வான் பரப்பை யுக்ரெயின் மூடியிருக்க வேண்டும் என்று மட்டும் கூறியது. இந்த விபத்து நடந்த நேரத்தில் வேறு மூன்று சிவிலியன் விமானங்கள் அருகே பறந்து கொண்டிருந்தன.
ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூர் சென்று கொண்டிருந்த இந்த விமானம், யுக்ரெயின் அரச படைகளுக்கும் ரஷ்ய ஆதரவுப் பிரிவினைவாதிகளுக்கும் இடையே நடந்து கொண்டிருந்த மோதலின் உச்சகட்டத்தில் விழுந்து நொறுங்கியது.
கொல்லப்பட்டவர்களில் 196 பேர் டச்சு பிரஜைகள், 10 பேர் பிரிட்டிஷ் பிரஜைகள்.
இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு யார் பொறுப்பு என்பது குறித்த கிரிமினல் விசாரணைக்கு ரஷ்யா ஒத்துழைக்கவேண்டும் என்று நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட் கோரினார்.
இந்த விசாரணை நெதர்லாந்து-ரஷ்யா உறவுகள் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று அவர் கூறினார்.
இந்த ஆண்டு முன்னதாக, இந்த ஏவுகணை தயாரிப்பு நிறுவனமான, அல்மாஸ் அண்டெவ், இந்த விமானத்தை வீழ்த்திய புக் ரக ஏவுகணையின் குறிப்பிட்ட மாதிரி, இப்போதெல்லாம் ரஷ்யப் படையினரால் பயன்படுத்தப்படுவதில்லை என்றும், அது யுக்ரெயின் படைகளால் பயன்படுத்தப்பட்டுவருவதாகவும் கூறியது.