மிக விலை உயர்ந்த ரகத்திலான வெளிநாட்டு நாய்களை வீட்டினுள் தனியான கட்டில், சொகுசு வாழ்க்கை என வளர்க்கப்பட்டு வரும் நிலையில், தனது சொந்த தந்தையை பல வருடங்களாக நாய் கூட்டினுள் அடைத்து வைத்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது வேறெங்கும் அல்ல, எமது நாட்டிலேயேதான்.
பலகொல்ல, கென்கல்ல, பங்ஜபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதான பெண் ஒருவரே இவ்வாறு தனது தந்தையை நாய்க்கூட்டில் வைத்துள்ளார்.
குறித்த பெண்ணின் தாய் மற்றும் கணவர் வெளிநாட்டில் தொழிலுக்காக சென்றுள்ள நிலையில், தானும் தனது குழந்தைகள் இருவரும் குறித்த வீட்டில் வசித்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
தனது தந்தை சிறுநீர் மற்றும் மலம் கழித்து வீட்டை அசுத்தப்படுத்துவதாலேயே அவரை நாய்க்கூட்டினுள்ள வைத்ததாக இந்தப் பெண் பொலிஸில் தெரிவித்துள்ளார்.
செல்லப்பிராணயாக வளர்க்கும் வெளிநாட்டு நாய்கள் மற்றும் அதன் குட்டிகள் என்பன, சுதந்திரமாகவும் சொகுசாகவும் வீட்டினுள் வளர்ந்துவரும் நிலையில், இந்தப் பெண் தனது 73 வயது தந்தையை நாய்க்கூட்டினுள் அடைத்து வைத்திருந்துள்ளார்.
நாய்க் கூட்டில் வசித்து வந்துள்ள குறித்த பெண்ணின் தந்தை, முன்னர், கண்டியிலுள்ள மிகப் பிரபலாமான உயர் வகை ஹோட்டலில் பணிபுரிந்தவர் என்பதோடு. அவரது ஒரேயொரு பிள்ளையே இந்தப் பெண் ஆவார்.
பேசுவதற்குக் கூட முடியாமல், மிகவும் மோசமான உடல்நிலையில் காணப்பட்ட குறித்த நபரை மீட்ட பொலிஸார் மெணிக்ஹின்ன வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.