இந்தப்பொழுதுகள் எனக்கு
போதாமல் இருக்கிறது
உன்னை நினைத்துக் கொள்ளவும்
உனது ஞாபகங்களை சேமித்து வைக்கவும்
போதாமல் இருக்கிறது பொழுதுகள்….

பறவையின் எச்சத்தில்
உன்டான விருட்சம் போல
உன் பார்வையில் துளிர்த்து
தளைத்துக்கிடக்கிறது காதலாசை

எப்போதும் என் மனம்
நடுக்கடற் பரப்பில் திசை தெரியாது
பறக்கும் பட்டாம்பூச்சி போன்றே
பதறுகிறது…..

கொஞ்ச நாட்களாக
நமது நெருக்கம் பட்டுப்போய் விட்டது
உனது கொஞ்சலும் எனது கெஞ்சலும்
சுவாசமிழந்து தவிக்கிறது…

நிகழ்காலத்தின் நம் பிரிவில் இருந்து
அடக்க முடியாத தனிமையில் இருந்து
அழுது ஆறிப்போன வார்தையில் இருந்து
என் கவிதையின் கடசி சொற்களில் இருந்து
மீண்டும் மீண்டும் ஐனனித்து எழுகிறது அன்பு

காலத்தை நழுவவிட்ட
ஒரு சோம்பேறி போல
இந்தப் பொழுதுகள் கனதியாகிக் கிடக்கிறது
நீ மிச்சம் வைக்கும் எதிலும் நான்
முழுமையடைந்து கிடக்கின்றேன்…

ஒரு துர்மரணக்காரனின்
கடைசி நிமிடங்கள் போல்
எப்போதும் என்னை ஒரே நிலையில்
வைத்துக்கொள்கிறது காதல்….

இந்த மனம் என்ற பாத்திரத்தை
உன் தீராத காதலால் நிரப்பிவிடு
அதுவோ என் வறண்ட கிராமத்தில்
விழும் மழைத்துளிகளை
விழுங்குவது போல
உன் காதலை விழுங்கிக் கொள்கிறது

பெரும் விஷ்பரூபம் கொண்ட
நம் பேராசைக் காதலால் மிஞ்சப்போவது எது
உனது வலிகளுக்கு என்னை மருந்தாக்க
துணிந்து விட்டேன்.

-நேதாமோகன்-

Share.
Leave A Reply

Exit mobile version