15 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்று அம்முயற்சி கைகூடாத நிலையில் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்த 54 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தை ஒருவரைக் கைது செய்துள்ளதாக நவகத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.

நவகத்தேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரம்பகனயாம பிரதேசத்தில் வசிக்கும் இச்சந்தேக நபர் அப்பிரதேசத்தில் வசிக்கும் இரு பிள்ளைகளின் தாயுடன் சட்டவிரோத தொடர்பு கொண்டிருந்துள்ளார்.

அப் பெண்ணின் இரு பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு அப்பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் வீடு ஒன்றிற்குள் சில தினங்களுக்கு முன்னர் மாலை 7 மணியளவில் குறித்த சந்தேக நபர் சென்றதை அவதானித்த ஒருவர் இரகசியமாக பின்தொடர்ந்து சென்று அவதானித்ததாகவும், அவ்வீட்டிற்குச் சென்ற சந்தேக நபர் தான் அழைத்துச் சென்ற 15 வயதுடைய மாணவியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்ற போது தான் சப்தமிட்டு கத்தியதால்  சந்தேக நபர் அவ்விடத்திலிருந்து  தப்பிச் சென்றதாகவும் பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு ஒருவர் தகவல் வழங்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது அவ்வாறான எந்த சம்பவமும் இடம்பெறவில்லை என குறித்த மாணவியும் அவளது தாயும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

பின்னர் இது தொடர்பில் தகவல் வழங்கிய நபர் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்தததையடுத்து குறித்த மாணவியும் அவளது தாயும் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு நீண்ட நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன் போது தான் சந்தேக நபருடன் சட்டரீதியற்ற முறையில் வாழ்வதாகவும், இரு தினங்களுக்கு முன்னர் அப்பெண்ணின் ஆறு வயது மகளை டியுசன் வகுப்புக்கு அழைத்துச் சென்று திரும்பிக் கொண்டிருந்த குறித்த 15 வயது மாணவியை சந்தேக நபர் புதிதாகக் கட்டப்பட்டுக் கொண்டிருந்த வீட்டுக்கு அழைத்துச் சென்றமையும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனை அவதானித்த அயலவர் ஒருவர் சப்தமிட்டதால் அம்மாணவி துஷ்பிரயோகத்திற்கு உட்படாமல் தப்பியுள்ளதோடு சந்தேக நபரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளமையும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளன.

சந்தேக நபர் அப்பிரதேசத்தில் வசிக்கும் பல பெண்களை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியிருப்பதாகவும், அவர் மீதிருந்து பயத்தின் காரணமாக இச்சம்பவங்கள் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணைகளின் பின்னர் குறித்த மாணவி வைத்திய பரிசோதனைக்காக நவகத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து புத்தளம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நவகத்தேகம பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version