நாமக்கல்: சேலம் எஞ்ஜினீயர் கோகுல்ராஜை தான் தான் கொலை செய்ததாக சிபிசிஐடி போலீசாரிடம் சரணடைந்த யுவராஜ் ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து அவரை திருச்செங்கோட்டிற்கு அழைத்துச் சென்று போலீசார் மேலும் விசாரணை நடத்தினர்.
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த இன்ஜினியர் கோகுல்ராஜ் கடந்த ஜூன் 24ம் தேதி பள்ளிபாளையம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
திருச்செங்கோடு மலைக்கோயிலுக்கு தன்னுடன் படித்த மாணவியுடன் வந்த போது அவர் கடத்தி கொலை செய்யப்பட்டார்.
இது குறித்து திருச்செங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 17 பேரைக் கைது செய்தனர். இதில் 5 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் (34) 100 நாட்களுக்கு மேலாக தலைமறைவாக இருந்தார்.
ஆனால், அடிக்கடி வாட்ஸ் அப்பில் ஆடியோ வெளியிட்டு போலீசாருக்கு சவால் விட்டுக் கொண்டிருந்தார். போலீசாரால் பிடிக்க முடியாத நிலையில் கடந்த 11ம் தேதி நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் யுவராஜ் சரண் அடைந்தார். அவரை 5 நாள் நீதிமன்ற காவலில் எடுத்து போலீசார் விசாரித்தனர்.
முதல் 3 நாட்கள் கோகுல்ராஜ் கொலை பற்றி தனக்கு எதுவும் தெரியாது என தொடர்ந்து கூறி வந்தார். இந்நிலையில் நேற்று யுவராஜின் டிரைவர் அருணை (22) போலீசார் காவலில் எடுத்து சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
அப்போது கோகுல்ராஜை கொலை செய்தது யார், என்ன நடந்தது என்பதை அருண் போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து நேற்று இரவு யுவராஜிடம் சிபிசிஐடி எஸ்.பி நாகஜோதி, ஏடிஎஸ்பி ஸ்டாலின் ஆகியோர் விசாரித்தனர்.
அப்போது அவர் உண்மையை ஒப்புக் கொண்டார். ‘‘கோகுல்ராஜை கொலை செய்யவில்லை. அவரை சாகும்படி கூறினேன்,” என முதலில் மழுப்பிய யுவராஜ், போலீசாரின் அதிரடி விசாரணைக்கு பிறகு உண்மையை ஒப்புக் கொண்டார்.
இந்நிலையில் இன்று அதிகாலை யுவராஜை சிபிசிஐடி ஏடிஎஸ்பி ஸ்டாலின் மற்றும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் திருச்செங்காடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயிலுக்கு அழைத்து சென்றனர்.
அங்கு கோகுல்ராஜ், தனது தோழியுடன் பேசிக் கொண்டிருந்த இடம், அவர்களை யுவராஜ் பிரித்து சென்ற காட்சியை நினைவுபடுத்தி போலீசார் விசாரித்தனர்.
அப்போது யுவராஜ் நடந்ததை கூறினார். இதையடுத்து பள்ளிபாளையம் அருகே யுவராஜ் சடலமாகக் கிடந்த இடத்துக்கும் அழைத்துச் சென்று போலீசார் விசாரித்துள்ளனர்.
சிபிசிஐடி போலீஸ் விசாரணையின் போது பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. யுவராஜ் கேரளாவில் உள்ள மண்ணாறு காட்டுப்பகுதியில் தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.
அடிக்கடி சங்ககிரி, ஈரோடு பகுதிகளுக்கு மாறுவேடத்தில் வந்து சென்றுள்ளார். கடந்த 100 நாட்களில் 5 முறை சங்ககிரியில் உள்ள தனது வீட்டுக்கு வந்து சென்றுள்ளார்.
வாட்ஸ் அப் மூலம் ஆடியோவை வெளியிட விலை உயர்ந்த ஆப்பிள் செல்போனை பயன்படுத்தியுள்ளார். ஒரு முறை ஒரு செல்போனை பயன்படுத்திய பிறகு அதை உடைத்துள்ளார்.
இதனால் அவரின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் போனது. கடந்த 10ம் தேதி இரவு நாமக்கல் வந்துள்ளார். இங்குள்ள கம்ளாய் என்ற இடத்தில் இருந்து ஒரு டிவியில் லைவ் நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.
அதற்கு முன் கேரளாவில் இருக்கும் போது வயர்லெஸ் இணைப்பு மூலம் டிவி நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதனால் அவரின் இருப்பிடத்தை போலீசாரால் தெரிந்து கொள்ளவே முடியவில்லை.
யுவராஜின் போலீஸ் காவல் நாளையுடன் முடிகிறது. மதியம் 2 மணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நாமக்கல் சி.ஜே.எம் கோர்ட்டில் அவரை போலீசார் ஆஜர்படுத்துகின்றனர்.
யுவராஜ் கொலைக்கு பயன்படுத்திய 2 வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன. கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜின் போலீஸ் காவல் நாளை முடிவுக்கு வருவதால், போலீசார் குற்றப் பத்திரிக்கையை கோர்ட்டில் விரைவில் தாக்கல் செய்ய உள்ளனர்.
Share.
Leave A Reply

Exit mobile version