நடிகர் சங்கத் தேர்தலுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், விறுவிறுப்பாக வாக்குகள் சேகரித்து வருகின்றனர் சரத்குமார் மற்றும் விஷால். இன்றும் நாளையும் ஒவ்வொரு நடிகர் நடிகைகளின் வீடு தேடிச் சென்று வாக்குகளைச் சேகரிக்க முடிவு செய்துள்ளனர்.

நடிகர் சங்க தேர்தலில் ஓட்டுப்போட தகுதியுள்ள வாக்காளர்கள் 3,139 பேர். இவர்களில் 1,175 பேர் வெளியூர்களில் வசிக்கும் தொழில்முறை நாடக நடிகர்-நடிகைகள்.

இவர்களிடம் இரண்டு அணியினரும் நேரில் சென்று வாக்குச் சேகரித்தனர்.. தற்போது 934 பேர் தபாலில் தங்கள் ஓட்டுகளை அனுப்பி வைத்து விட்டனர்.

மீதி 241 பேர் நேரில் வாக்களிக்க வருகிறார்கள். சென்னையில் மட்டும் ஓட்டுப்போட தகுதியுள்ள முன்னணி நடிகர், நடிகைகள் மற்றும் துணை நடிகர்கள் 1,900-க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

இவர்களிடம் இரு அணியினரும் தற்போது ஆதரவு திரட்டி வருகிறார்கள். சரத்குமார் அணிக்கு ஆதரவு திரட்ட நடிகை ஸ்ரீப்ரியா தலைமையில் நடிகைகள் வீடு வீடாகச் செல்கிறார்கள்.

நடிகர்களும் தனி குழுவாகச் சென்று ஓட்டுக் கேட்கிறார்கள். இதுபோல் விஷால் அணியை சேர்ந்த ரோகிணி, பிரசன்னா, நந்தா, ரமணா உள்ளிட்டோர் வீடு வீடாகச் சென்று ஓட்டு கேட்கின்றனர்.

கோடம்பாக்கம், வடபழனி, சாலிகிராமம் போன்ற பகுதிகளில்தான் நடிகர்-நடிகைகள் அதிகம் வசிக்கின்றனர். அந்த பகுதிகளில் இரு அணியினரும் முற்றுகையிட்டு ஓட்டு சேகரித்து வருகிறார்கள்.

எந்தத் தெருவுக்குப் போனாலும் ஏதாவது ஒரு அணியைச் சேர்ந்த நடிகர் நடிகைகள் கூட்டாக வாக்குச் சேகரிப்பதைப் பார்க்க முடிகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version