முன்னாள் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சரான காலஞ்சென்ற கே. வேலாயுதம் அவர்களின் பூதவுடல் ஊவா மாகாணத்தில் பதுளை மாவட்டத்தில் பசறை பிரதேச சபை மைதானத்தில் நேற்று மாலை 4.00 மணியளவில் கொட்டும் மழையில் தகனம் செய்யப்பட்டது.
இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான கே. வேலாயுதம் சென்னையிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த செவ்வாய்கிழமை இயற்கை எய்தினார்.
பூதவுடல் பதுளையில் உள்ள அன்னாரின் வீட்டில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது அதன் பின் அன்னாரின் பூதவுடலுக்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலதரப்பினரும் அஞ்சலி செலுத்தி வந்தனர்.
இந்த நிலையில் அன்னாரின் பூதவுடல் வீட்டிலிருந்து 17.10.2015 அன்று காலை ஊவா மாகாண சபை கட்டடத் தொகுதிக்கு அஞ்சலிக்காக கொண்டு செல்லப்பட்டது.
அங்கு அமரர் கருப்பையா வேலாயுதம் அவர்களுக்கு ஊவா மாகாண சபை கட்டடத் தொகுதியில் வைத்து அமைச்சர்களான மனோ கணேசன், திகாம்பரம் ஆகியோர் தமது அஞ்சலியை செலுத்தினார்கள்.
அத்தோடு ஊவா மாகாண சபை உறுப்பினர் செந்தில் தொண்டமானும் ஊவா மாகாண பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் ஆகியோரும் தமது அஞ்சலியை செலுத்தினார்கள்.
மேலும் பூதவுடல் பசறை பிரதேச சபை மைதானத்தில் தகனம் செய்யப்படும் போது அங்கு அமைச்சர்களான லக்ஷமன் கிரியல்ல, ஹரின் பெர்ணாண்டோ மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள், ஊவா மாகாண சபை உறுப்பினர்களும் தங்களது அஞ்சலியை செலுத்தினார்கள்.
அத்தோடு ஆயிரங்கணக்கான மக்கள் அணிதிரண்டு வந்து தங்களது அஞ்சலியை செலுத்தியமை குறிப்பிடதக்கது.