சுப்பிரமணியம் சிவகாமி என்கிற தமிழினி, வெலிக்கடையிலுள்ள கொழும்பு காவல் சிறைச்சாலை (சி.ஆர்.பி) யிலிருந்து வவுனியா பூந்தோட்டத்திலுள்ள பாதுகாப்பான தங்குமிடம் மற்றும் மறுவாழ்வு மையத்துக்கு (பி.ஏ.ஆர்.சி) ஜூன் 26ல் மாற்றம் செய்யப்பட்டார்.

கொழும்பு தலைமை நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி ஜூன் 22 முதல் நடைமுறையாகும் வண்ணம் விடுத்த கட்டளைப் பிரகாரம் தமிழீழ விடுதலைப் புலிகளின்(எல்.ரீ.ரீ.ஈ) முன்னாள் பெண் தலைமை அரசியல் பொறுப்பாளரான தமிழினி இவ்வாறு மாற்றம் செய்யப்பட்டார்.

ஒரு கூட்டுறவு பயிற்சி மையத்தைப் போலச் செயற்படும் பூந்தோட்டத்திலுள்ள பாதுகாப்பான தங்குமிடம் மற்றும் மறுவாழ்வு மையத்தில்(பி.ஏ.ஆர்.சி) ஒரு குறிப்பிட்ட காலம் புனர்வாழ்வு பெற்றபின்னர் இறுதியில் விடுதலையாகப்போகும் தமிழினியின் இந்த மாற்றல் உத்தரவு ஒரு முன்னோடியான செயற்பாடாக கருதப்படுகிறது.

எல்.ரீ.ரீ.ஈ யில் கேணல் தரத்திலுள்ள பதவி வகித்தவரான 40 வயது நிரம்பிய தமிழினி, தற்போது கைதாகி காவலிலுள்ள புலிகள் அங்கத்தினர்களில் மிகவும் மூத்த பெண் அங்கத்தவராவார்.

தமிழினி, எல்.ரீ.ரீ.ஈயின் மகளிரணி அரசியற் பொறுப்பாளராகவும் மற்றும் புலிகளின் ஆண் அரசியல் பொறுப்பாளராக பதவி வகித்த பாலசிங்கம் மகேந்திரன் என்கிற நடேசனின் பெண் உதவியாளராகவும் கடமையாற்றியிருந்தார்.

எல்.ரீ.ரீ.ஈ யின் இறுதிக்கட்டப் போரில், கந்தையா ஞானபூரணி அல்லது விதுஷா என்று அழைக்கப்படும் மாலதி படையணின் கட்டளை தளபதி, மற்றும் சோதியா படையணியின் கட்டளை தளபதியான துர்கா என்கிற கலைச்செல்வி பொன்னுத்துரை, என்பவர்களுடன் தமிழினியும் சேர்ந்து எல்.ரீ.ரீ.ஈ யின் சிறந்த மூன்று முதல்தர பெண் அங்கத்தவர்களாக விளங்கினார்கள்.

tamilini-2அதேவேளை விதுஷா 1986லும், துர்கா 1989லும், தமிழினி 1991லும் எல்.ரீ.ரீ.ஈ யில் இணைந்திருந்தார்கள்.

பூந்தோட்டத்திலுள்ள மையத்துக்கு மாற்றல் பெறும் தமிழினிதான் முழு சுதந்திரம் பெற்றவர்களில் முன்னோடியாகத் திகழ்கிறார் எனக் கருதப்படுகிறது.

ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பூந்தோட்டத்தில், புனர்வாழ்வு பயிற்சி பெறுவதை அவர் எதிர்நோக்கியுள்ளார். அதன்பின்னர் முன்னாள் சுதந்திர பறவைகள் அமைப்பின் அங்கத்தவரான தமிழினி ஒரு சுதந்திரப் பறவையாக விடுதலையாவதற்கு சாத்தியம் உள்ளது.

தமிழினியின் கொழும்பிலிருந்து வவுனியாவுக்கான மாற்றல் உத்தரவு மற்றும் அவர் எதிர்நோக்கியுள்ள விடுதலை என்பன, தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களின் விடுதலை பற்றிய முட்கள் நிறைந்த சிக்கலான விடயம் சம்பந்தமாக அரசாங்கத்தின் குறிப்பிடத் தக்க நெகிழ்வான போக்கினை இந்தக் கட்டத்தில் வெளிப்படுத்துவதற்கான அறிகுறியாகவே உள்ளது.

மிகவும் முக்கியமாக இந்த நிகழ்வுகள் இனிவரும் நாட்களில் எல்.ரீ.ரீ.ஈ யுடன் தொடர்புள்ளதற்காக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மற்றும் பலபேர்களின் விடுதலை சம்பந்தமாக நம்பிக்கை கொள்வதை எடுத்துரைக்கும் வாய்ப்பு உள்ளது.

எல்.ரீ.ரீ.ஈ யில் தமிழினி வகித்த பங்கு, அவரது கைது, தடுத்து வைப்பு, அவரது விடுதலைக்கான எதிர்பார்ப்புடனான மாற்றல் உத்தரவு என்பன, முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ தொண்டர்கள் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ யுடன் தொடர்புள்ளவர்களது தொடரும் தடுப்புக்காவல், மற்றும் சிறைவாசம் போன்ற அதி முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களின் தற்போதைய விவகாரங்களின் நிலையில் சுவராஸ்யமான ஒரு நுண்ணறிவுள்ள விடயம் இருப்பதை வெளிப்படுத்துகிறது.

தமிழினியின் நிலை, தற்போது நிலவும் சூழ்நிலையின் மனிதாபிமான பரிமாணங்களை எடுத்து விளக்குகிறது. அது தீர்க்கப்பட்டு வருவதிலுள்ள சாதகமான நிலை,  உராய்வுள்ள பகுதிகளில் மோதலுக்குப் பதிலாக ஒரு ஒத்துழைப்பு உணர்வு தோன்றியுள்ளதை அடையாளப்படுத்துகிறது.

தமிழினியை சுதந்திரத்தின் வாசலுக்கு அழைத்து வருவதற்கு வழிவகுத்த நடவடிக்கைகள் பற்றி இந்த எழுத்தாளர் வெகு தூரத்திலிருந்தே அறிந்து கொண்டிருக்கிறார்.அது அவசியம் சொல்ல வேண்டிய ஒரு கதை.

பரந்தன்

தமிழினியின் இயற்பெயர் சுப்பிரமணியம் சிவகாமி என்பதாகும். அவர் 1972 ஏப்ரல் 23ல் பரந்தனில் பிறந்தார்.அவரது குடும்பம் தனது வேர்களை யாழ்ப்பாணத்தில் கொண்டிருந்தாலும், அது கிளிநொச்சிக்கும் ஆனையிறவுக்கும் இடையில் உள்ள பரந்தனுக்கு இடம் பெயர்ந்தது.

பின்னர் அவரது குடும்பம் கிளிநொச்சி,உதய நகரில்,  கனகபுரம் வீதிக்கு அருகிலுள்ள ஒரு வீட்டுக்கு நகர்ந்தது. அவரது குடும்பத்தின் ஏனைய அங்கத்தினர்கள் அவரது தயாரும் மற்றும் இரண்டு சகோதரிகளும் ஆவர், சகோதரிகள் இருவரும் திருமணம் செய்திருந்தனர்.

தாயும் ஒரு சகோதரியும் கிளிநொச்சியில் வசிக்கும் அதேவேளை மற்றைய சகோதரி நோர்வேயில் வசிக்கிறார்.

அவருடைய மற்றொரு சகோதரியும் எல்.ரீ.ரீ.ஈயில் அங்கத்தவராகவிருந்து செப்டம்பர் 1998ல் பரந்தனில் நடைபெற்ற “ஒப்பறேசன் சத்ஜய – 2 “ போரின்போது கொல்லப்பட்டார்.

சிவகாமி சுப்பிரமணியம் பரந்தன் இந்துக் கல்லூரியில் க.பொ.த சாதாரண தரம் வரை கல்வி பயின்றார். அதன் பின் தனது க.பொ.த உயர்தரக் கல்விக்காக கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் இணைந்தார்.

உயர்தர வகுப்புகளை பின்வற்றிவரும் வேளையில் பாடசாலையில் புலிகளின் ஆட்சேர்ப்பாளர்களினால் நிகழ்த்தப்பட்ட பேச்சுக்களினால் கவரப்பட்டு அவர் எல்.ரீ.ரீ.ஈ யின் மீது மோகம் கொண்டார்.

1991 ஜூலை 27ல் அவர் முறைப்படி எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்தில் சேர்ந்து, யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருந்த எல்.ரீ.ரீ.ஈ யின் இரண்டு இராணுவ தளங்களான கிளாலி மற்றும் நீர்வேலியில் அவர் தனது இராணுவ பயிற்சியினை மேற்கொண்டார்.

அவர் அடையாள அட்டை இலக்கம் 1736 ன் கீழ், எல்.ரீ.ரீ.ஈ யில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். தமிழினி என்கிற இயக்கப் பெயரை சிவகாமி ஏற்றுக் கொண்டார் .குடாநாட்டின் வலிகாமப் பிரதேசத்தின் பல பகுதிகளிலும் அவர் தங்கியிருந்தார்.பின்னர் அவர் கிளிநொச்சி மற்றும் கிளாலி பிரதேசங்களுக்கு நகர்ந்தார்.

ஆரம்பத்தில் தமிழினி எல்.ரீ.ரீ.ஈ யின் போராட்ட அமைப்புகளின் ஒரு அங்கமாகவிருந்து, அநேகமான சிறு சிறு சண்டைகளில் பங்குபற்றியிருந்தார்.

பெரிய போர் ஒன்றில் அவரது அனுபவம் இடம்பெற்றது, செப்ரம்பர் 1993ல் இராணுவம் யானையிறவில் இருந்து முன்னேறி கிளாலியை கைப்பற்ற முனைந்த ‘ஒப்பிறேசன் யாழ்தேவி’ நடவடிக்கையின் போதுதான்.

எல்.ரீ.ரீ.ஈ, நவம்பர் 1993ல் பூனறியான் மற்றும் நாகதேவன்துறை முகாம்களை தாக்குவதற்காக ‘ஒப்பறேசன் தவளை’ என்கிற குறியீட்டுப் பெயருடன் நீரிலும் நிலத்திலும் தாக்குதல் நடத்திய போரிலும் அவர் பங்குபற்றியிருந்தார்.

பூனறியானில் எல்.ரீ.ரீ.ஈ, இராணுவத்தினரது ஒரு ரி – 55 யுத்த டாங்கியை இராணுவத்திடமிருந்து கைப்பற்றியிருந்தது.

தமிழினி, எதிர்பாராத விதமான சுரங்கப் பாதைகள் அமைக்க வேண்டியிருந்த கடமைகள் ஒதுக்கப்பட்டிருந்த படைப்பிரிவின் ஒரு அங்கமாக இருந்தார்.

அவர்கள் அவசர அவசரமாக காட்டு நிலப்பகுதியினூடாக இந்த ரி – 55 யுத்த டாங்கியை துரித போக்கு வரத்து செய்வதற்கு வசதியாக ஒரு பாதையை அமைக்க வேண்டியிருந்தது.

தமிழினியுடன் ஒரு கலந்துரையாடல் நடத்திய எல்.ரீ.ரீ.ஈ யின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் மற்றும் அவரது மனைவி அடேல் பாலசிங்கம் ஆகியோர், தமிழினியால் கவரப்பட்டு,அரசியல் பிரிவுக்கு அவரை மாற்றம் செய்வித்தனர்.

பெண்களால் நடத்தப்படும் ஒரு கயிற்றுத் தொழிற்சாலைக்கும் மற்றும் ஒரு பண்ணைக்கும் தமிழினி பொறுப்பாக நியமிக்கப்பட்டார்.

எல்.ரீ.ரீ.ஈயின் மகளிர் இதழான சுதந்திரப் பறவைகளின் ஆசிரியர் குழாம் அங்கத்தினர்களில் ஒருவராகவும் அவர் நியமிக்கப்பட்டார். அடேல் பாலசிங்கத்தினால் பெரிதும் செல்வாக்கு செலுத்தப்பட்ட தமிழினி ஒரு தீவிர பெண்ணியவாதியாக மாறினார்.

1995 – 96 ல் இராணுவத்தால் நடத்தப்பட்ட ‘ஒப்பறேசன் ரிவிரச’ வின் வெற்றியை தொடர்ந்து எல்.ரீ.ரீ.ஈ முழுதாக வன்னிக்கு இடம்பெயரவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளானது.

தமிழினி தொடர்ந்தும் அரசியல் பிரிவிலேயே கடமையாற்றினார், ஆனால் இராணுவம் வன்னியை திரும்ப கைப்பற்றுவதற்காக 1997 – 98 ல் ‘ஒப்பறேசன் ஜயசிக்குரு’ நடவடிக்கையை ஆரம்பித்தபோது, தமிழினி படைப்பிரிவில் இணையும்படி கட்டாயப் படுத்தப்பட்டார்.

அவர் மாங்குளம் பகுதியில் பணியாற்றி மிகவும் சிரமங்களை அனுபவித்தார்.ஒரு கட்டத்தில் அவர்களுக்கு சமைத்த உணவுகள் தீர்ந்து போனதால் உயிர்வாழ்வதற்காக காடுகளில் வளரும் பழங்களை நாட்கணக்கில் உண்ணவேண்டிய நிலைக்கு ஆளானார்கள்.

தமிழினி, பாலசிங்கம் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ யின் அரசியல் தலைவரான சுப்பையா பரமு தமிழ்செல்வன் ஆகியோரிடையே நல்ல அபிப்ராயத்தை பெற்றிருந்தார்.

அது அவரை உயர் பதவிகளில் வேகமாக உயர்த்தி இறுதியில் ஜூன் 2000 ம் ஆண்டளவில் அவரை பெண்கள் பிரிவின் அரசியல் தலைவராக மாற்றியது.

இதை தவிர இராணுவம் 2001ல் ஆனையிறவை திரும்ப கைப்பற்றுவதற்காக ‘ஒப்பறேசன் அக்கினிகில்ல’ நடவடிக்கையை தொடுத்தபோது தமிழினி திரும்பவும் போராட்டத்தில் ஈடுபட வேண்டியதாயிற்று.

கிளிநொச்சி

ஒஸ்லோ அனுசரணையுடனான யுத்த நிறுத்தம் 2002 பெப்ரவரியில் ஏற்பட்ட பின், எல்.ரீ.ரீ.ஈ நிரந்தரமான ஒரு அரசியல் செயலகத்தை கிளிநொச்சியில் ஸ்தாபித்தது.

எல்.ரீ.ரீ.ஈ யின் கட்டமைப்புக்குள்ளேயே சமத்துவத்துக்காக போராடி அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருந்த தைரியமுள்ள பெண்ணியவாதியாக தமிழினி திகழ்ந்தார்.

முன்னர் பெண்களின் அரசியற் பிரிவு, பிரதான அரசியற் பிரிவின் ஒரு பகுதியாகவே நடத்தப்பட்டு வந்தது. இப்போது தமிழினி சுதந்திரமாக கடமையாற்றுவதற்காக போராடி அதைப் பெற்றிருந்தார்.

அவர் மேலும் தனது பதவிக்கான அந்தஸ்து அடையாளத்தையும் பெற்றிருந்தார்.ஒரு டபிள் காப் வாகனம் அதை தொடரும் வாகன அணி மற்றும் மெய்ப்பாதுகாவலர்கள் என அந்த அந்தஸ்து அடையாளம் கொண்டிருந்தது.

யுத்த நிறுத்த காலமும் ஒரு வழியை விட பல வழிகளிலும் தனது எல்லையை விரிவு படுத்த தமிழினிக்கு பெரிதும் உதவியாக இருந்தது.

கொழும்பில் நடைபெறும் பெண்ணுரிமை சம்பந்தமான கருத்தரங்குகள் மற்றும் கலந்துரையாடல்களில் கலந்து கொள்வதற்காக அவர் எல்.ரீ.ரீ.ஈ பெண் அங்கத்தவர்களை கொண்ட ஒரு குழுவை வழி நடத்தி வந்தார்.

2003 மற்றும் 2005ல் ஐரோப்பாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தூதுக்குழுக்களிலும் அவர் பங்கேற்றார்.

ஐரோப்பாவில் இருந்த வேளையில் தமிழினி அநேக புலம்பெயர் குழுக்களுடனும் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தார்.அநேகமான கூட்டங்களில் அவர் உரையாற்றி பார்வையாளர்களிடத்தில் பயங்கரமான தாக்கத்தையும் ஏற்படுத்தியிருந்தார்.

இந்தக் கட்டத்தில்தான் தமிழினிக்கும் ஒரு முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவருக்கும்,அவரை நான் ‘கே’ என்று இங்கு குறிப்பிடுகிறேன், இடையில் ஒருவகையான காதல் உணர்வு அரும்பு விட்டது.

முன்னர் எல்.ரீ.ரீ.ஈ தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆண் அங்கத்தவர்களையும் மற்றும் பெண் அங்கத்தவர்களையும் சோடி சேர்த்து அவர்கள் திருமணம் செய்ய அனுமதித்த போது, தமிழினி திருமணம் செய்ய மறுத்திருந்தார்.

இப்போது அவரது வெளிநாட்டு சொற்பகால வாசத்தின்போது, தற்போது ஐரோப்பாவில் குடியேறியிருக்கும் முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவரான ‘கே’ நெருங்கிப் பழக நேர்ந்தது.

அவர்களிடையே ஒரு பரஸ்பர கவர்ச்சி மற்றும் குறைந்தது, ஒரு வகையான காதல் உணர்வு ஏற்பட்டது. ‘கே’ யும் வன்னிக்கு வந்து கிளிநொச்சியில் சிறிதளவு காலம் தங்கியிருந்தார். அவர்கள் இன்னமும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

யுத்த நிறுத்தம் முடிவடைந்து யுத்தம் வெடித்து தீவிரமடையத் தொடங்கியது. மெதுவாக மற்றும் உறுதியாக இராணுவம் முன்னேறி, எல்.ரீ.ரீ.ஈ பின்வாங்கத் தொடங்கியது.

இறுதியாக புலிகள், முல்லைத்தீவு மாவட்டத்தின் காரைத்துறைப்பற்று உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்கு உட்பட்ட குறுகிய பட்டை போன்ற நிலப்பரப்புக்குள் அடைபட நேர்ந்தது.

இந்த விளைவு 2009 எப்ரல் 4 – 5 திகதிகளில் நடைபெற்ற ஆனந்தபுரம் யுத்தத்தின் பின் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது, அந்தச் சமரில் புலிகளின் வட பகுதி தளபதி தீபன் கொல்லப்பட்டிருந்தார்.

பெண் தளபதிகளான விதுஷா மற்றும் துர்காவும் இந்தச் சண்டையில் உயிரிழந்தார்கள். இந்தச் சமரில் பங்குபற்றிய தமிழினியும் இறந்திருக்கலாம் என்கிற அச்சம் ஏற்பட்டது,ஆனால் பின்னர் அவர் சிறிய காயங்களுக்கு மட்டும் உள்ளானார் எனத் தெரிவிக்கப்பட்டது.

நீண்ட காலமாக அவரோடு கைகோர்த்து நின்ற அவரது தோழிகள் விதுஷா மற்றும் துர்காவின் மரணங்கள் தமிழினியை உடைத்து நொறுக்கியது.

தோல்வி தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டதை அவரும் உணர்ந்தார்,ஆனால் இயக்கத்தின்மீது தனக்கு இருந்த விசுவாசத்தின் காரணமாக தொடர்ந்தும் முற்றுகைக்கு உள்ளாகியிருந்த புதுமாத்தளன் பகுதியிலேயே இருந்தார்.

வவுனியா

முடிவை நெருங்கிக் கொண்டிருந்த 2009 மே மாத மத்தியில், அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பாதுகாப்பு தேடி போய் ஆயுத படைகளிடம் சரணடைய விரும்புபவர்களை போகவிட வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு எல்.ரீ.ரீ.ஈ உயர்பீடம் ஆளானது.

மே மாதம் 15ந் திகதி தமிழினி,அவளது தாயார், மற்றும் சகோதரி, ஆகியோரும் அப்படியே செய்தனர். தமிழினி தனது ஆயுதங்கள், சீருடை,அடையாள அட்டை மற்றும் கதை சொல்லும் சயனைட் குளிகைகள் போன்றவற்றை கைவிட்டு,தனது குடும்ப அங்கத்தினர்களுடன் பெருமளவிலான பொதுமக்கள் உட்புகுதலுக்குள் சங்கமமானார்.

அவர்கள் அனைவரும் எல்.ரீ.ரீ.ஈ யை சேராத குடிமக்கள் என வகைப்படுத்தப்பட்டு,2009 மே 20ல் வவுனியாவுக்கு கொண்டு வரப்பட்டார்கள். அவர்கள் ஒரு நலன்புரி முகாமுக்குள் அடைக்கப்பட்டார்கள்.

ஆனால் உயர் பதவி வகித்த தமிழினி விரைவிலேயே முகாமிலிருந்தவர்களால் அடையாளம் காணப்பட்டார். அதிகாரிகளுக்கு அது பற்றிய துப்பு வழங்கப்பட்டு,2009 மே 27ல் தமிழினி கைதானார்.

குற்றவியல் புலனாய்வு திணைக்கள (சி.ஐ.டி) காவல்துறையினரால் விசாரிக்கப் படுவதற்காக தமிழினி கொழும்புக்கு கொண்டு வரப்பட்டார்.

தேசிய மற்றும் இராணுவ உளவுத்துறையினராலும் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். பின்னர் அவர் அவசரகால சட்டவிதிகளின்கீழ் அப்போதிருந்த கொழும்பு பிரதம நீதவான் நிசாந்த ஹப்புஆராச்சியின் முன்பாக 2009 ஜூன் 17ல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

எல்.ரீ.ரீ.ஈயில் அவரது நடவடிக்கை சம்பந்தப்பட்ட கோவை ஒன்றும் அதிகாரிகளினால் சமர்ப்பிக்கப்பட்டது.

அவரைப்பற்றிய மேலதிக விசாரணைகள் நடத்தப்பட வேண்டியிருப்பதாக நீதிமன்றத்திடம் கூறப்பட்டது. பிரதம நீதவான் அவர் மீண்டும்2009 ஜூலை 17 ந்திகதி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட வேண்டும் என்று கட்டளையிட்டார். அதைத் தொடர்ந்து மேலும் இரண்டு வாரங்கள் அனுமதிக்கப்பட்டன.

தமிழினியின் சகாப்தத்தில் குறிப்பிடத்தக்க அம்சமாக விளங்குவது, எல்.ரீ.ரீ.ஈ யின் மகளிரணி அரசியல் தலைவர் ஒரு நியாயமான நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுகிறார், என்பதை உறுதிப்படுத்துவதற்காக, நீதிமன்றம் ஒரு பாராட்டத்தக்க ஆர்வத்தை மேற்கொண்டதுதான்.

தமிழினி நன்றாக உபசரிக்கப்படவேண்டும் மற்றும் மேலதிக விசாரணை உண்மையிலேயே அவசியமானால் மட்டுமே அவர் மேலும் தடுப்புக் காவலில் வைக்கப்படவேண்டும் என்று நீதிமன்றம் ஒரு ஆராய்ந்தறிய வேண்டிய குறிப்பினை தெரிவித்திருந்தது.

முன்னாள் கொழும்பு தலைமை நீதவான் ஹப்புஆராச்சி,விசாரணைக்காக மேலும் திகதி வழங்குவதற்கு முன்னர் அவசரகால விதிகளின் கீழுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி சி.ஐ.டி தலைமையகத்துக்கு 2009 ஆகஸ்ட் 5ல் நேரடியாக விஜயம் செய்து அங்குள்ள நிலமைகளைப் பார்வையிட்டார்.

அவரும் தற்பொழுது கொழும்பு தலைமை நீதவானாகவுள்ள ரஷ்மி சிங்கப்புலியும், சட்ட அமலாக்க அதிகாரிகள் தங்கள் விசாரணையை நடத்துவதற்காக  குறுகிய கால அவகாசத்தையே வழங்கி வந்ததின் மூலம் தமிழினியை நீடித்த காவல்துறை தடுப்புக்காவலில் வைக்கும் போக்கினை தடுத்து வந்தார்கள்.

விசாரணைகள் முடிவடைந்ததின் பின்னர் தமிழினியின் விடயக்கோவை சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு சென்றது,அவர் கைதாகி காவலில் வைக்கப்பட்டார்.

தமிழினியின் வழக்கு மற்றும் பலருடைய வழக்குகளைப்போல முடிவில்லாத நிலைக்கு சென்று விடக்கூடாது என்பதை உறுதி செய்வதற்காக நீதிமன்றம் தொடர்ந்தும் குறுகிய கால தவணைகளையே வழங்கி வந்தது.

அவர் ஒரு டசன் தடவைகளுக்கும் அதிகமாக நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டார்.சட்டமா அதிபரின் திணைக்களம் தொடர்ந்தும் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தது.அதற்கான முக்கிய காரணம் பாதுகாப்பு நிறுவனங்களின் பக்கமிருந்து தீர்க்கமான முடிவெடுக்கும் தன்மை குறைவாக இருந்ததே ஆகும்.

விசாரணைகள்

தடுப்புக்காவலில் உள்ள முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களின் விசாரணைகளை கண்காணித்து வந்த பாதுகாப்பு அமைச்சகம் அவர்களை கையாள்வதில் இரட்டை தன்மையான கொள்கையை கடைப்பிடித்து வந்தது.

ஒவ்வொரு வழக்கும் அதன் தனிப்பட்ட தகுதி மற்றும் பரிசீலனை அடிப்படையிலேயே நடைமுறை படுத்தப்பட்டு வந்தது.

அதன்படி அவை கடினமானவை மற்றும் மென்மையானவை என தரப்படுத்தப்பட்டன. பச்சாத்தாபத்துக்கு உட்படுத்த முடியாதவர்கள்,கரும்புலிகளின் தற்கொலை வாக்குறுதிகளை மேற்கொண்டவர்கள், மற்றும் கொடூரமான பயங்கரவாத செயல்களில் தொடர்புள்ளதாக கண்டறியப்பட்டவர்கள், ஆகியோர்கள் கடின வகையாக தரம் பிரிக்கப்பட்டார்கள்.

நேரடியாக யுத்தத்தில் போராடியவர்கள் உட்பட மற்றவர்கள் மென்மை வகையாக கருதப்பட்டார்கள்.

தடுப்புக்காவலில் உள்ள முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் 1235 பேர்கள் ஆரம்பத்தில் கடும் போக்கானவாகளாக வகைப்படுத்தப்பட்டு பூசா உள்ளிட்ட மூன்று வௌவேறு தடுப்புக் காவல் மையங்களில் வைக்கப்பட்டார்கள்.

11,989 பேர்கள் மென் போக்காளர்களாக தரம் பிரிக்கப்பட்டு, பாதுகாப்பான தங்குமிடம் மற்றும் மறுவாழ்வு மையம்(பி.ஏ.ஆர்.சி) என பெயர் கொண்ட பதினெட்டு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டனர்.

அவர்களுக்கு புனர்வாழ்வு பயிற்சி வழங்கப்பட்டு தளர்த்தப்பட்ட நடவடிக்கை அடிப்படையில் குழுக்களாக பிரிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்கள்.

மேலும் மேலும் ஆட்கள் விடுதலையாகிச் செல்வதால் மென் போக்காளர்களது நலன்புரி மையங்கள் மூடப்பட்டு வருகின்றன.

புனர்வாழ்வு அமைச்சிலுள்ளோரின் தகவலின்படி,தற்பொழுது மருதமடு,கண்டக்காடு,வெலிகந்த,மற்றும் பூந்தோட்டம் ஆகிய நான்கு பாதுகாப்பான தங்குமிடம் மற்றும் மறுவாழ்வு மையத்தில் (பி.ஏ.ஆர்.சி) 635 ஆட்கள் வைக்கப்பட்டுள்ளார்கள்.

தமிழினியின் தனித்துவமான விடயம் பாதுகாப்பு அதிகாரிகளிடத்தில் ஒரு குழப்பமான எண்ணத்தையே தோற்றுவித்தது.

தமிழினி மோதலில் பங்கெடுத்திருந்தாலும்,எந்தவிதமான பயங்கரவாத சூழ்நிலையுடனும் அவர் தொடர்பு கொண்டிருந்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது.

எல்.ரீ.ரீ.ஈ யினால் கொழும்பிலோ அல்லது தென் மாகாணங்களிலோ மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளில் அவர் சம்பந்தப்பட்டிருக்கவில்லை.

அதற்கும் மேலாக தமிழினி, எல்.ரீ.ரீ.ஈயின் மகளிரணி அரசியற் பிரிவின் பிரபலமான தலைவர், மற்றும் காவலில் இருக்கும் மிகவும் உயர் பதவியிலுள்ள பெண்புலி அல்லது முன்னாள் பெண்புலி என்பதை கருதாது, ஒரு இராணுவ போராளி என்பதிலும் பார்க்க அவரை அரசியல் செயற்பாட்டாளர் எனக் கணிப்பதற்ககே அதிகம் வாய்ப்பு உள்ளது.

அந்தப் பின்புலத்தில் பாதுகாப்பு அதிகாரிகளின் பக்கமிருந்து தமிழினியை இலக்கு வைத்து தண்டிக்க வேண்டும் என்கிற கட்டாயமோ அல்லது அவசியமோ கிடையாது.

அவரது உயர் தரத்திலான பதவி மூப்பினையும் கருதாது, அவரை குற்றம் சுமத்தி நீதிமன்றின் முன் நிறுத்தி நீண்டகால சிறைத்தண்டனை வழங்கி அவரை தண்டிக்க வேண்டும் என பாதுகாப்பு நிறுவனத்தில் உள்ள மிகச் சிலரே விரும்புகிறார்கள்.

மிக மோசமான பொதுமக்கள் படுகொலையில், ஒரு மூத்த அரசியல் தலைவரின் படுகொலையில்,அல்லது வெடி பொருள் தாக்குதல் மூலம் கணக்கற்ற மரணங்களை விளைவித்த சம்பவத்தில் தமிழினி சம்பந்தப்பட்டிருந்தால் அப்போது நிலமை வேறு விதமாக இருந்திருக்கும்.

ஆனால் அவை தொடர்பாக அவரது கரங்கள் சுத்தமாக உள்ளன எனவே அவரை நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க வேண்டுமென்ற அளவுக்கு மீறிய ஆவல் எதுவும் இருக்காது.

எனினும் அவரை காவலில் இருந்து விடுவிப்பதில் ஒரு உறுத்தலும் இருக்கிறது. அந்தப் பிரச்சினை தமிழினியின் கடந்த காலத்தில் இல்லை, ஆனால் வருங்காலத்தில் அவரது நடவடிக்கைகள் எவ்வாறு இருக்கும் என்பதில்தான் அது தங்கியுள்ளது.

அவரது விடுதலைக்குப் பின்னர் அவர் என்ன செய்யப் போகிறார்? எல்.ரீ.ரீ.ஈயில் அவர் ஒரு உயர் பதவி வகித்த உயர் தகுதிகளைக் கொண்ட தலைவராக இருந்திருக்கிறார்.

அரசாங்கத்துக்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொள்வதற்கு உலகத் தமிழ் புலம்பெயர் அமைப்புகளிலுள்ள எல்.ரீ.ரீ.ஈ மற்றும் எல்.ரீ.ரீ.ஈ சார்பான சக்திகள் அவரை பயன்படுத்திக் கொள்ளுமா?

அவர் வெளிநாடு செல்ல நேர்ந்தால், வெளிநாட்டிலுள்ள ஆர்வலர்கள் அவரை ஒரு பிரச்சார இயந்திரமாக பயன்படுத்திக் கொள்ளுவார்களா? ஸ்ரீலங்காவிலுள்ள தமிழ் அரசியற்கட்சிகளிலுள்ள கடும்போக்காளர்கள்,மோதல் போக்கான அரசியலில் தங்கள் நிலைகளையும் தரங்களையும் மேலுயுயர்த்த அவரை சேர்த்துக் கொள்வார்களா?

அதிகாரிகள்

மறுபக்கத்தில் தமிழினியை காலவரையறையற்ற காவலில் வைத்திருக்க முடியாது என்பதையும் பாதுகாப்பு அதிகாரிகள் நன்கறிவார்கள்.

ஏற்கனவே தொடர்ச்சியான இடைவெளிகளில் அவரை நீதிமன்றத்தில் நிறுத்திய நிகழ்ச்சி அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள்மீது எதிர்மறையான ஒரு தோற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது.

தமிழினிமீது வழக்கு தொடாந்து நீண்டகால சிறைத்தண்டனையை அவருக்கு பெற்றுக் கொடுப்பதுகூட விரும்பத் தக்கதல்ல, ஏனெனில் அரசியற் பிரிவு தலைவர் ஒருவருக்கு கடுமையான தண்டனை வழங்குவது, ஆட்சியினரை பற்றிய தவறான பிரதிபலிப்பை ஏற்படுத்தும்.

இவைகளைத் தவிர தனது கடந்தகால எல்.ரீ.ரீ.ஈ செயற்பாடுகள் பற்றி தமிழினி மிகவும் வெளிப்படையான முறையில் ஒளிவு மறைவின்றி வெளிப்படுத்தியிருப்பதும் மற்றும் அவரது தற்போதைய இக்கட்டான நிலைமையும் அவர்மீது அளவற்ற அனுதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.மிகச் சிலரே அவர் தண்டிக்கப்பட வேண்டும் என விரும்பினார்கள்.

அதிகாரிகள் தமிழினியின் நிலைகண்டு வேதனை அடைந்தார்கள். தமிழினியின் வழக்கில் சம்பந்தப்பட்ட ஒரு சிரேட்ட பாதுகாப்பு அதிகாரி நேர்மையாக ஒப்புக்கொண்டது “அவரை நீண்டகாலம் தடுப்புக்காவலில் வைத்திருக்க வேண்டும் என்கிற எண்ணமோ விருப்பமோ எங்களுக்கு இல்லை என்று நான் சொன்னால் என்னை நம்புங்கள்.

தமிழினியை விடுதலை செய்யவே நாங்கள் விரும்புகிறோம், ஆனால் எங்கள் கவலையெல்லாம் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய முக்கியமான பின்விளைவுகளைப் பற்றியதே.

அவர் விடுதலை செய்யப்பட்ட பின்னர் எதிர்மறையான செயற்பாடுகளில் அவர் ஈடுபடமாட்டார் என்பதை நாங்கள் எப்படி உறுதிப்படுத்துவது?”

அப்போ தமிழினி பற்றி பாதுகாப்பு நிறுவனம் எதிர்நோக்கும் பிரச்சினை இதுதான் எனினும் இந்தப் பிரச்சினை “கடவுளின் இயந்திரம்” எனும் உபகரணத்தை பயன்படுத்துவதன் மூலம் தீர்க்க முடியும்.

கடவுளின் இயந்திரம் எனும் அர்த்தமுடையது டியுஸ் ‘எக்ஸ் மக்கீனா’ எனும் இலத்தீன் சொற்றொடராகும்.

“இது ஒரு கதைக்கருவில் வரும் உபகரணம், தீர்க்க முடியாத பிரச்சினைகள், சில புதிய நிகழ்வு, தன்மை, திறன்,அல்லது பொருள் என்பனவற்றின், திட்டமிடுதல் மற்றும் எதிர்பாராத தலையீடு காரணமாக திடீரென முற்றிலும் மாறுபட்ட வகையில் தீர்க்கப்படுவதை காணலாம்” அதன் மூலக்கருவை பழைய கிரேக்க நாடகங்களில் காணலாம், அங்கு மேடையில் கடவுள் பாத்திரத்தை நடிப்பவர்களை மேலுயுயர்த்தவும் கீழிறக்கவும் ஒரு பாரந்தூக்கி பயன்படுகிறது.

கிரேக்க நாடகங்களில் சோக கதாபாத்திரங்களில் நடிக்கும் பிரபலமான ஈயுரிபிடியஸ் இந்த கடவுளின் இயந்திரத்தை கதைக்கரு மற்றும் ஆதாரம் ஆகிய இருவழிகளிலும் பயன்படுத்துவதில் மிகவும் பிரபல்யமானவர்.

தமிழினியின் நவீன கால துன்பியல் கதாபாத்திரத்தில் யார் அல்லது எது கடவுளின் இயந்திரமாக இருக்கப் போகிறது?

டி.பி.எஸ்.ஜெயராஜ்

(இக் கட்டுரை மறுபிரசுரம் செய்யப்படுகிறது)

Share.
Leave A Reply

Exit mobile version