திருச்சி: திருச்சி அருகே அரசு பேருந்தும், டிரெய்லர் லாரியும் மோதிய விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஆயுதபூஜை அரசு விடுமுறையொட்டி அரசு வேலை செய்பவர்கள், வெளியூரில் தங்கியிருப்பவர்கள் தங்கள் ஊர்களுக்கு திரும்பியதால் தமிழகம் முழுவதும் உள்ள பேருந்து நிலையங்களும், பேருந்துகளும் நிரம்பி வழிந்தன.
அப்படித்தான் நேற்று மாலை சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்ல கிளம்பியது TN18-K6939 அரசு விரைவு பேருந்து. ஓட்டுனர் தமிழ்செல்வம் பேருந்தை ஓட்ட சொந்த ஊருக்கு போகப்போகிறோம், நாளை ஆயுத பூஜை அன்று சொந்தங்களை பார்க்கலாம் என்கிற சந்தோசத்தில் பேருந்தில் ஏறிய பயணிகள் 46 பேரும் பயண அசதியில் அப்படியே கண்ணுறங்கினார்கள்.
சரியாக 9.40 மணிக்கு பேருந்து திருச்சி–சென்னை பைபாஸ் சாலையில் சமயபுரம் முன்பாக உள்ள இருங்காளூர் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது சாலையில் இடதுபுற ஓரத்தில் இரும்பு தகடுகள், ராடுகள் ஏற்றிய டிரெய்லர் லாரி நின்று கொண்டிருந்தது.
அந்த லாரி மீது, அரசு விரைவு பேருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதியது. அப்போது தங்களை காப்பாற்றிக்கொள்ள பயணிகள் போட்ட சத்தம் அந்த பகுதியையே அலர வைத்தது.
அலறல் சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு ஓடிவந்த பொதுமக்கள், காயமடைந்தவர்களை காப்பாற்றியதோடு, போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, அங்கு வந்த காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் மற்றும் செஞ்சிலுவை சங்கத்தினர், ஆம்புலன்ஸ் வேன்கள் அங்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
பலினவர்கள் பட்டியயால்
இந்த விபத்தில், சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் வாழும் திருமால் என்பவரது மனைவி கோடீஸ்வரி, அவரது 10வயது மகன் ஆர்த்தி ராஜ், கன்னியாகுமரி மாவட்டம், உண்ணாமலைக்கடையைச் சேர்ந்த ஜீனிஸ் கெட்வர்ட், சென்னை கீழ்ப்பாக்கதில் வசித்து வரும் பாம்பன் மலையை சேர்ந்த கன்னியாஸ்திரி அண்ணாள், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தை அடுத்த.
தெற்குபுலியமங்கலத்தை சேர்ந்த கணேசன் மகன் வினோத், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த வாட்டர் டேங்க் ரோட்டை சேர்ந்த மனோஜ், சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த சுபின், திருநெல்வேலி மாவட்டம் சிந்துபூந்துறையை சேர்ந்த ஹரிகணேஷ், நாகர்கோவிலை அடுத்துள்ள அகதீஸ்வரம், கீழக்கோணம் ஜேசு ரத்தினம் மகன் ஆண்டோ சன்ஜ் உள்ளிட்ட 9 பேர் பலியானதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த விபத்தில் பலரது கை, கால்கள் உடல்கள் என பல இடங்கள் துண்டாகிப்போனது. விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த பயணிகளை மீட்டு திருச்சியில் உள்ள அட்லஸ், ரத்னா குளோப் உள்ளிட்ட தனியார் மருத்துவமனைகளுக்கும், திருச்சி அரசு மருத்துவமனை, ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்தில் பலியான கிறிஸ்தவ கன்னியாஸ்திரி அண்ணாள், திருச்சியில் உள்ள தோழியை பார்ப்பதற்காக வந்த போது பலியானார் என்பது தெரியவந்துள்ளது.
இந்த விபத்திற்கு காரணமான லாரி டிரைவர் ரவிச்சந்திரன், அரசு பஸ்சின் டிரைவர்கள் செபாஸ்டின், தமிழ்செல்வம் ஆகியோர் மீது திருச்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு பேருந்து டிரைவர் தமிழ்ச்செல்வன் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பலரை பலி வாங்கிய இந்த கோர விபத்தால் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதை சரி செய்யவே பலமணி நேரம் ஆனது.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் திருச்சி மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி, மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. ராமசுப்பிரமணி, போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்வரி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
கூடவே அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக அரசு தலைமை கொறடா மனோகரன் மற்றும் அதிகாரிகள் திருச்சி அரசு மருத்துவமனையில் காயமடைந்தவர்களையும், விபத்தில் பலியானவர்களின் உறவினர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினர். அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாக அமைச்சர் உறுதியளித்தார்.
விபத்து குறித்து விசாரிக்கையில் நம்மிடம், திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடிக்கு பக்கத்தில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு நடத்துவதாகவும், ஆய்வில் லாரிகளை வழிமறித்து டிரைவர்களிடம் அபராதம் வசூலித்ததால், இதுபோன்று லாரிகள், தேசிய நெடுஞ்சாலையில் ஓரமாக நிறுத்தி விடுவதாகவும் இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றது என்கிறார்கள் அப்பகுதி வாசிகள்.
சமீபகாலமாக இரும்பு தகடுகள் ஏற்றி வரும் லாரிகள், இரும்பு தகடுகள் மீது அடையாளத்திற்காக கூட சிவப்பு நிற துணி கட்டுவதில்லை என்றும், அதிகாரிகளின் சோதனைகளுக்கு பயந்து சாலையோரம் ஏராளமான லாரிகள் நிறுத்தப்படிகின்றன.
அதிகாரிகள் போனதும், லாரிகள் எடுக்கப்படும். அப்படி நிறுத்தப்பட்ட லாரிதான் விபத்துக்குள்ளாகி 9 பேரை பலி வாங்கியுள்ளது. லாரி போன்ற வாகனங்களில் இரும்பு கம்பிகள், தகடுகள், குழாய்கள் போன்றவற்றை ஏற்றி வரும் போது சிவப்பு நிற துணி கட்டியோ அல்லது விளக்குகளையோ எரிய விட வேண்டும் என்பதை அறிவுறுத்த வேண்டும்.
லாரி உள்ளிட்ட வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலைகளில் ஓரமாக நிறுத்துவது தடுக்கனும். இதற்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டும் வாகனங்களை நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்கள்.
கடைசியாக விபத்தில் சிக்கி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சென்னை டி.பி.சத்திரத்தை சேர்ந்த முத்துராஜிடம் பேசினோம், ”எனக்கு சொந்த ஊர் நாகர்கோவில். வேலை விஷயமாக சென்னையில் தங்கியிருக்கோம். தூத்துக்குடி மாவட்டம், நாசரேத்தில் நடக்கும் தசரா விழா ரொம்ப சிறப்பாக இருக்கும்.
அதனால் வருடாவருடம் போவேன். இந்த வருடம் போவதற்காக எனது மனைவி மகேஸ்வரி, என்னோட 2 பசங்க. எங்கண்ணன் திருமாள், அண்ணி கோடீஸ்வரி, அவரது மகள் நித்ய பாலா, மகன் ஆத்திராஜன் ஆகியோரோடு கிளம்பி வந்தோம்.
நாங்க பஸ்சில டிரைவர் சீட்டுக்கு பின் பக்கம் இருக்கிற சிட்டில் உட்கார்ந்து இருந்தோம். விழுப்புரம் வரை சந்தோசமாக பேசிக்கிட்டு வந்து, கொண்டுவந்த சாப்பாட்டை சாப்பிட்டுட்டு பயண கலக்கத்தில் தூக்கிட்டோம்.
பஸ்ல எல்லோரும் தூங்கிய படி பயணம் செய்தாங்க. திடீரென பயங்கர சத்தம் கேட்டது. சுதாரிப்பதற்குள், இடது பக்கம் அப்படியே வெட்டிக்கிட்டே போச்சு, பஸ் கண்ணாடி, பஸ் தகரம் எல்லாம் தெறித்து விழுந்தன.
எங்க அண்ணியும், அண்ணன் பையனும் சம்பவ இடத்தியேலேயே செத்து கிடந்ததை பார்த்தேன்.
கூடவே என் மனைவிக்கும், அண்ணனுக்கும் அடிபட்டிருக்கு, என் பைசங்களுக்கு காயமில்லை. என் அண்ணன் மகள் எங்கிருக்கா என்ன ஆச்சுன்னு தெரியல. அண்ணன் திருமால், என் மனைவி காயம்பட்டு ஹாஸ்பிட்டல்ல இருக்காங்க, இப்படி ஆளுக்கொரு திசையாய் கிடக்கிறோம்.
ஆயுத பூஜை விழாவுக்கு போன எங்களை இப்படி ஆளாக்கிட்டானே அந்த கடவுளுக்கு கூட கண்ணில்லையா” என கதறினார்.
ஒரு விபத்து விலை மதிப்பில்லா உயிர்களை பறித்துள்ளதுதான் வேதனை.
சி.ஆனந்தகுமார்