உள்நாட்டின் அரசை அச்சுறுத்தும் மாஃபியாக்களும், கடத்தல்காரர்களும் இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் நிறைந்து இந்தியாவை நாசம் செய்து வந்தார்கள்.
வைரம், தங்கம், கருப்பு பணம் என்று கடத்தி வந்தவர்கள் நாளடைவில், அவர்களுக்குள் இருக்கும் பிசினஸ் மோட்டிவ்களுக்காக ஆட்களையும் கடத்த தொடங்கினர்.
இதனால் கிரைம் ரேட் ஏகத்திற்கும் எகிறியது. ஒரு சிலரை போலீஸ் என்கவுண்டர் செய்து பார்த்தது. வேர்களை வெட்டாமல் விழுதுகளை வெட்டி என்ன பயன்? இருந்தாலும் தாதாக்களின் ஆட்டம் அடங்கவில்லை. நாளுக்கு நாள் அதிகரித்த தாதாக்களால் அரசுக்கு பெரும் நெருக்கடி உருவானது.
அதன்பிறகு 1971-ல் கொண்டு வரப்பட்ட மிசா சட்டம் மூலம் பல்வேறு சட்ட விதிகளை கையாண்டு, இருபது அம்சத் திட்டம் மூலம் மும்பை, சென்னை, அகமதாபாத் உள்பட இந்தியாவில் உள்ள பல்வேறு முக்கிய தளங்களில் இருந்து வந்த டான்கள், கடத்தல் மன்னன்களின் சொத்துக்களை பறிமுதல் செய்தது இந்திராகாந்தியின் அரசு.
ஆனால், அதே நேரத்தில் கடத்தல் மன்னன்கள் கண்டம் விட்டு கண்டம் தாண்டி தங்களது தொழிலை விரிவுபடுத்தி இருந்தனர். வெளிநாடுகளில் பயங்கர நெட்ஒர்க்கை ஏற்படுத்தி இருந்தனர்.
இதனால் அவர்களின் தொழில்களுக்கு எந்தவித பாதிப்பும் வரவில்லை. ஒரு சில இடங்களில் மட்டும் கடத்தல்காரர்கள் பயன்படுத்தி வந்த குடோன்கள், சந்திக்கும் ரகசிய இடங்கள் என்று ஒரு சிலவற்றை சீல் வைத்தது அரசு.
இதுபோன்ற செயல்களால் மாஃபியாக்களின் தொழில்கள் நசுங்கவில்லை. கட்டுக்குள் கொண்டு வர நினைத்த அரசுக்கு பெரும் சவாலாக அமைந்தது இதுபோன்ற சம்பவங்கள்.
என்னதான் செய்தாலும் கடத்தல்காரர்களை, அரசு தங்களின் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. அதனால் இந்திய அரசு அடுத்த கட்டமாக மிசா சட்டத்தை மாஃபியாக்களின் மீதும் பாய்ச்சினார்கள்.
இதனால் சாதாரண அப்பாவி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அத்துடன் பல்வேறு அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்களும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
எதிர்க்கட்சிகள் இயங்க விடாமல் முடக்கப்பட்டன. பத்திரிகையாளர்களின் பேனா முனைகள் உடைக்கப்பட்டு, அனைத்து பத்திரிகைகளும் சென்சார் செய்யப்பட்டன.
மொத்தத்தில் இந்திய நாட்டின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீது வெடிகுண்டு விழுந்து இருந்தது. சாமானியர்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரின் மூச்சுகளும் முடக்கப்பட்டன. இந்தியாவில் உள்ள சிறைகள் முழுவதும் நிரம்பி வழிந்தது.
அதே சமயம் எமர்ஜென்சி புயல் மும்பை மாஃபியாக்களையும் தாக்கியது. மும்பை நகரங்களில் நிழல் உலக தாதாவாக வலம் வந்த கரீம் லாலா, பதான் குரூப், வரதராஜன் என்று முன்னணியில் இருந்த மாஃபியா புள்ளிகள் கைதாகி சிறையிலடைக்கப்பட்டனர்.
இவர்களோடு தாவூத் இப்ராஹிமும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். இந்தியாவில் இருந்த சிறிய டான்கள் முதல் பெரிய மாஃபியாக்கள் வரை அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.
மும்பையில் உள்ள ஆர்தர் போர்டு சிறையில் பல்வேறு முக்கிய டான்கள் அடைக்கப்பட்டனர். இதனால் கடத்தல் தொழில்கள் கட்டுக்குள் வந்தன. வெளியே தொழில்கள் செய்ய ஆட்கள் இல்லாமல் வெறிச்சோடி இருண்டு போய் இருந்தது கடத்தல் உலகம்.
பல்வேறு டான்களுக்கு சிறை பெரும் நெருக்கடியை கொடுத்தலும், ஒரு சில டான்களை பற்றி கேள்விபட்டு இருந்தாலும், யாருக்கும் பரஸ்பரம் அறிமுகம் இல்லை. அதனால் அவர்களுக்கு ஒரு விதத்தில் சந்தோசம்தான்.
ஒருவருக்கொருவர் அவர்களின் முகங்களை பார்த்து அறிமுகமாகிக்கொண்டனர். அதோடு இல்லாமல் அவர்களுக்குள் ஒரு இணக்கமான சூழ்நிலையை உருவாக்கி கொண்டனர்.
ஒரு சிலருக்கு முன்பு இருந்த பகைகளால், அவர்களுக்குள் இருந்த ஆத்திரங்களை அடித்து தீர்த்துக்கொண்டனர். சிறையில் அவர்களுக்கான உலகத்தை கட்டமைத்தனர்.
பகையும் நட்பும் ஒன்றாக வளர்ந்து வந்தது சிறையில். அதே நேரத்தில் சிறையில் தங்களுக்கான டீம்களை ரெடி செய்து கொண்டனர்.
யார் யார் எந்த அணி என்று பல்வேறு முக்கியமான தாதாக்களின் கூட்டணிகள் சிறையில் உருவானது. ஒரு சில கூட்டணிகளை உறுதிபடுத்தும் விதமாக எதிராளிகளை சிறையில் வைத்தே தாக்கினார்கள்.
சிறை நிர்வாகம் மிரண்டு போனது. எதற்காக சம்பந்தமே இல்லாமல் இது போன்ற செயல்கள் நடக்கிறது என்று முக்கியமான தலைகளை கண்காணித்தனர்.
அதோடு இல்லாமல் ஒரு சில நபர்களை தானே, புனே என்று வேறு சில சிறைகளுக்கும் மாற்றினார்கள். எங்கு போனாலும் டான்களின் நெட் வொர்க் மட்டும் மாறவே இல்லை.
பல்வேறு நபர்கள் எப்பொழுது சிறையை விட்டு வெளியே செல்லலாம், மீண்டும் தொழிலை விரிவுபடுத்தலாம் என்று ரகசிய திட்டங்கள் தீட்டினார்கள்.
கடத்தல்கார்கள் வெளியே வந்தால் மீண்டும் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபடுவார்கள் என்று முக்கியமான தலைகளின் சொத்துக்கள் உள்பட 150க்கும் மேற்பட்ட நபர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து முடக்கி விட்டது அரசு.
haji mastan
தாதாக்களின் தலைகள் என்று சொல்லப்படும் ஹாஜி மஸ்தான், கரீம் லாலா உள்பட பல்வேறு நபர்கள் இரண்டு ஆண்டுகளாக சிறையில் இருந்ததால் மும்பையோடு சேர்த்து ஒட்டு மொத்த கடத்தல் உலகமும் அப்படியே ஆடிப்போனது.
அதனால் மாஃபியாக்களின் உலகம் பெரும் வறட்சியை கண்டது. கரீம் லாலா, ஹாஜி மஸ்தான் போன்ற பெரிய தலைவர்களை வெளியே கொண்டு வர வேண்டும் என்று அரசியல் தலைவர்களுடன் வெளியே ரகசிய டீல்கள் நடந்தன.
மாஃபியாக்களின் அண்டர்கிரவுண்ட் ஆட்கள் மூலம் தூது அனுப்பி பெரும் பணம், வைரங்கள், தங்க கட்டிகள் என்று பரிசாக கொடுக்கப்பட்டன. இருந்தாலும் வெளியே வருவது சிக்கலாக இருந்தது.
இந்தியாவின் மிகப்பெரிய கிரிமினல் வழக்கறிஞரான ராம் ஜெத்மலானி ஹாஜி மஸ்தானுக்காக வாதாடினார். இருந்தாலும் வெளியே கொண்டு வரமுடியவில்லை.
இதுபோல பல்வேறு முக்கியமான நபர்கள் வந்து வாதாடியும் வெளியே கொண்டு வரமுடியவில்லை. இரண்டு ஆண்டுகள் கழித்து எமர்ஜென்சி நீக்கப்பட்டது.
ஆட்சியும் மாறியதால் இனிமேல் கடத்தல், போதை மருந்துகள், சாராயங்கள் கடத்த மாட்டோம், கட்டப்பஞ்சாயத்து, அரசுக்கு எதிரான குற்ற சம்பவங்களில் ஈடுபடமாட்டோம் என்று பிராமண பத்திரங்கள் எழுதிக்கொடுத்த பிறகு பல்வேறு அரசியல் தலைகள் தலையிட்டால் கரீம் லாலா, ஹாஜி மஸ்தான் போன்றோர் வெளியே வந்தார்கள்.
அவர்கள் வெளியே வந்த பிறகு மெல்ல மெல்ல அவர்களின் ஆட்களும் வெளியே வந்தார்கள். நிரம்பிக்கிடந்த சிறை இப்பொழுது காலியானது.
மீண்டும் மும்பையில் நிழல் உலகம் இயங்க ஆரம்பித்தது. இந்த முறை பயங்கர பாதுகாப்பாக, படு உஷராக இயங்கினார்கள். சிறிய தடயங்களை கூட விட்டு வைக்காமல் அதிக அளவில் கடத்தல் தொழில் செய்து, இழந்த சொத்துக்களை மீட்கும் முயற்சியில் இறங்கினார்கள்.
அதே நேரத்தில் சிறையில் இருந்த தாவூத்தும், அவனது ஆட்களும் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்த முறை பயங்கரமான நெருக்கடிகள் உருவானது. மாஃபியாக்களுக்குள் யார் யார், எங்கு, எந்த எந்த தொழில்களை செய்வது என்று புதிய சட்டங்கள், புதிய பாதைகள், புதிய வழிமுறைகள் என்று தங்களுக்கான எழுதப்படாத சட்டங்களை கொண்டு வந்தனர். இந்த சட்டங்களை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால், இதுபோன்ற சட்டங்களை எல்லாம் கண்டுகொள்ளாமல் தாவூத் தனக்கான ஒரு அண்டர்கிரவுன்ட் உலகத்தை உருவாக்கினான். இதனால் தாவூத்திற்கு எதிராக பல்வேறு எதிரிகள் உருவாகினர். ஆனால், அந்த நெருக்கடிகளை எல்லாம் தாவூத் அடித்து நொறுக்கி உடைத்தெறிந்து வந்தான்.
அது எப்படி? அடுத்து நடந்தது என்ன?
-சண்.சரவணக்குமார்