நிலாவில் நடந்த அமெரிக்க விண்வெளி வீரர் அணிந்திருந்த கை கடிகாரம் ஒன்று ஏலம் விடப்பட்ட நிலையில் அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் ஒரு வரலாறு காணாத விலைக்கு வாங்கியுள்ளார்.
1971ம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா Apollo 15 என்ற விண்கலத்தை நிலாவிற்கு அனுப்பியது.
இதில் பயணம் செய்த வீரர்களுக்கு ஒமேகா நிறுவனத்தை சேர்ந்த சிறப்பு கை கடிகாரங்களை நாசா ஏற்கனவே வழங்கியிருந்தது.
நிலவை அடைந்த பிறகு, அதில் பயணம் செய்த டேவிட் ஸ்கொட் என்ற அமெரிக்க விண்வெளி வீரர் நிலாவின் பரப்பில் இரண்டு முறை ஒமேகா கடிகாரத்துடன் நடந்து சென்றுள்ளார்.
அப்போது, அந்த கடிகாரத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டதால், அதனை நீக்கிவிட்டு தான் கொண்டு வந்த Bulova நிறுவனத்தை சேர்ந்த கடிகாரத்தை கையில் கட்டியுள்ளார்.
பின்னர், 3வது மற்றும் 4வது முறையாக நிலாவில் நடந்து சென்றுள்ளார். நிலாவில் முதன் முதலாக ஆராய்ச்சி காரில் பயணம் செய்தது டேவிட் ஸ்கொட் என்பது குறிப்பிடத்தக்கது.
1973ம் ஆண்டில் விண்வெளி ஆராய்ச்சி பயணம் முடிவுக்கு வந்த நிலையில், டேவிட் ஸ்கொட் உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் பயன்படுத்திய பொருட்கள் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது.
போஸ்டனில் கடந்த அக்டோபர் 15ம் திகதி 50 ஆயிரம் டொலர்களுக்கு முதலில் ஏலம் அறிவிக்கப்பட்டது.
கடந்த ஒரு வாரமாக ஏலத்தில் இருந்த அந்த கடிகாரம் கடந்த வியாழக்கிழமை இரவு வேளையில் புளோரிடாவை சேர்ந்த பெயர் வெளியிடப்படாத தொழிலதிபர் ஒருவர் 16,25,000 டொலருக்கு வாங்கியுள்ளார்.
இதற்கு முன்னர் விண்வெளிக்கு சென்று வந்த பொருட்களை ஏலம் விட்டதில், அதிக விலைக்கு விற்பனையாகியுள்ளது இந்த Bulova கடிகாரம் என்பது குறிப்பிடத்தக்கது.